எளியோரின் வலிமை கதைகள் 33 : 'எழுதிக் கொடுக்கிற மனுவால நல்லது நடக்குதுனா மகிழ்ச்சிதான்'

எளியோரின் வலிமை கதைகள் 33 : 'எழுதிக் கொடுக்கிற மனுவால நல்லது நடக்குதுனா மகிழ்ச்சிதான்'

எளியோரின் வலிமை கதைகள் 33 : 'எழுதிக் கொடுக்கிற மனுவால நல்லது நடக்குதுனா மகிழ்ச்சிதான்'
Published on

ஏதாவது தேவை என்றால் கூட அரசு அலுவலகங்களில் மனு எழுதிக் கொண்டு வாருங்கள் என்று சொல்வார்கள். பெரும்பாலும் எல்லோரும் மனு எழுத தெரிந்தவராக இருப்பதில்லை. அரசு அலுவலர்களுக்கு மனு எழுதுவது என்பது ஒரு பெரிய வேலை. கொஞ்சம் தவறுதலாக எழுதி விட்டால் கூட முடிய வேண்டிய பணி முடியாமல் போகிறது. அதற்கென அனுபவம் வாய்ந்தவர்கள் எழுதிக் கொடுத்தால்தான் அலுவலகங்களில் ஏற்றுக்கொள்கிறார்கள். பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வருகிறவர்கள் யாராவது எழுதிக் கொடுக்க மாட்டார்களா என்று தேடுவார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகம் போன்றவற்றில் தான் பெரும்பாலும் மனுக்கள் கொடுப்பார்கள். அப்படி மனுக்கள் கொடுப்பவர்களுக்கு எழுதிக் கொடுப்பவர்கள் அரசு அலுவலகங்களுக்கு வெளியே உட்கார்ந்து இருப்பார்கள். அந்த எளிய மனிதர்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

எம்பேரு கோவிந்தராஜ் எனக்கு அம்பது வயசுக்கு மேல ஆகுது. இருபது வருஷமா இந்த கலெக்டர் ஆபீஸ் வாசலில் தான் மனு எழுதிக் கொடுக்கிற வேலை செய்கிறேன். வாரத்துக்கு 5 நாள் வேலை இருக்கும். நான் ஒரு எம்ஏ பட்டதாரி. படிச்சு முடிச்சதும் எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் ல பதிவு பண்ணிட்டு காத்துகிட்டு இருந்தேன். ஒரு இன்டர்வியூ கூட எனக்கு வரல. நானும் எவ்வளவோ வேலை பார்த்துட்டேன் நான் படிச்சதுக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாம தான் இருந்துச்சு அப்புறம்தான் ஒரு நண்பர் சொன்னார் கலெக்டர் ஆபீஸ்ல மனு எழுதிக் கொடுக்கிற வேலை செய்து பாருங்கன்னு. இதுக்கு பெருசா ஒன்னும் முதல் போட தேவையில்லை. ஒரு பரீட்சை எழுதற அட்டை 10 வெள்ளை பேப்பர் ஒரு பேனா உட்காருவதற்கு ஒரு சாக்கு. அவ்வளவுதாங்க.

என்ன மனு எழுதனும்னு வர்றவங்களே சொல்லுவாங்க. பெரும்பாலும் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கிறவங்க தான் அதிகம். சாதி சர்டிபிகேட், பிறப்பு இறப்பு சான்று, குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க நீக்க, ஊனமுற்றோர் அடையாள அட்டை அரசாங்கம் வழங்குகிற நலத்திட்ட உதவிகள்ல அவர்கள் பெயரைச் சேர்க்க. இப்படி தான் வருவாங்க பெரும்பாலும். அவங்க கேட்கிறத எழுதி கொடுத்துட்டு அதோடு ஏதாவது ஆவணங்களை இணைக்க வேண்டும்னாலும் நாங்கள் சொல்லிக் கொடுப்போம். ஒரு மனு எழுதிக் கொடுத்தார் முப்பது ரூபாய் கொடுப்பாங்க கொஞ்சம் வேலை அதிகமா இருந்தா 50 ரூபா கொடுப்பாங்க. சில பேரு காசு எடுத்துட்டு வராம கூட வருவாங்க பாவம் அவங்களுக்கு காசு வாங்காமலேயே எழுதிக் கொடுப்போம்

அதேபோல கண் பார்வை தெரியாத ஊனமுற்றவர்கள் போல வரவுகளுக்கு காசு எதுவும் வாங்காம மனு எழுதிக் கொடுப்போம்.ஒரு நாளைக்கு 10 பேர் வருவதே கஷ்டம் தான். நம்மகிட்ட வர்றவங்க எல்லாம் கஷ்டப்படுறவங்கலாதான் இருப்பாங்க. மனு எழுதி கொடுத்ததும் சம்பந்தப்பட்டவங்க கையெழுத்து போடணும். முன்னாடியெல்லாம் கைரேகை வக்கிரவங்க நிறைய பேரு இருந்தாங்க இப்பல்லாம் யாரும் பெரும்பாலும் அப்படி யாரும் வருவதில்லை. தாலுக்கா ஆபீஸ் கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்கிறவங்க மட்டுமில்லாம போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கறவங்களும் வருவாங்க எழுதிக் கொடுக்க சொல்லி. இதில் வரும் வருமானத்தை வைத்துதான் என் குடும்பத்தை நடத்தறேன். எனக்கு மூன்று பிள்ளைகள் அதுல இரண்டு பேர் பொறியியல் பட்டதாரிகள் மூணாவது பொண்ணு இப்ப கல்லூரியில படிக்கிறாங்க. அவர்களுக்கும் நிரந்தரமாக ஒரு வேலை கிடைச்சுட்டா தேவலாம்னு தோணுது. என்ன மாதிரியே இங்க ஒரு பத்து பேருக்கு மேலயாவது மனு எழுதி குடுக்கிறவங்க இருக்கிறாங்க. எல்லாருக்கும் என்ன மாதிரியே தான் பொழப்பு ஓடுது. இப்பல்லாம் கம்ப்யூட்டர் அது இதுன்னு வந்ததால மனு கையால எழுதுறவங்க ரொம்ப குறைவுதான். நாம எழுதிக் கொடுக்கிற மனுவாக ஒருத்தருக்கு நல்லது நடக்குது அப்படிங்கிற மகிழ்ச்சி தாங்க எங்களுக்கு. என்றார் கோவிந்தராஜ்.

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு எழுத்து ஆவணம் தேவைப்படுகிறது. அப்படி ஆவணப்படுத்துதல் மூலமாகத்தான் அந்த பணி முடிவடைகிறது. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது எனவே தெரிந்தவர்களை பயன்படுத்திக் கொள்கிற வேலைதான் பெரும்பாலும் நமக்கு இருக்கிறது. அப்படித்தான் இந்த மனு எழுதி கொடுப்பவர்களும்.


- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com