ஆதாரங்களுடன் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை கோரும் பீட்டா!

ஆதாரங்களுடன் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை கோரும் பீட்டா!
ஆதாரங்களுடன் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை கோரும் பீட்டா!

ஜல்லிக்கட்டுக்கு தடை பெறுவதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் வீடியோக்களை ஆதாரங்களாக தொகுத்து பீட்டா வெளியிட்டுள்ளது.

‘ஜல்லிக்கட்டு’ விலங்குகளை கொடுமை படுத்தும் செயல் என்று கடந்த 2014ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது. அத்துடன் 2009 இல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தையும் ரத்து செய்தது. இதனால் 2014ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமால் இருந்தது. ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டது. 

அதன் விளைவாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, அந்த மனுவும் 2016ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 2016ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் பிரியர்கள் உட்பட தமிழகம் முழுவதுமே உள்ள மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்தச் சம்பவங்களின் எதிரோலியாகத்தான் 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்ற மெரினா புரட்சி வெடித்தது. அது மெரினா புரட்சி என்று மட்டும் சொல்ல முடியாது, தமிழகத்தின் இளைஞர்கள் புரட்சி என்று தான் கூற வேண்டும். 

ஏனெனில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பெருவாரியான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் ஒரே கோரிக்கையாக ஒலித்த சத்தம் ‘ஜல்லிக்கட்டு’ தான். இந்தப் போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. ஜல்லிக்கட்டை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கட்சி சார்பில்லாமல் சமூக வலைதளம் மூலம் ஒன்று திரண்ட இளைஞர்கள் அந்த பேரணியை நடத்தினர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி நிறுவன பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். இதனால் மெரினாவே ஸ்தம்பித்தது. 

இதனையடுத்து பொங்கல் நெருங்கிய நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றி எப்படியாவது ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடுத்து விடும் என்று நினைத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்து. இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் அவசர நடவடிக்கைகளால் ஒருவழியாக ஜல்லிக்கட்டு தடை நீங்கியது. இருப்பினும் போராட்டம் நடத்தியவர்கள் மீது இருந்த கோபத்தை காவல்துறையும், அரசும் நடுக்குப்பம் தாக்குதலில் வெளிக்காட்டியது. அந்த சம்பவம் போராட்டம் நடத்திய அனைவரது மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்பட்டது. அன்றைய தினம் சென்னையே ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஆங்காங்கே கலவரங்கள் அரங்கேறின. பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளும் மாவட்டங்கள் தோறும் கோலாகலமான கொண்டாட்டங்களுடன் நடைபெற்றன. 

இதற்கிடையே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டதால், ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆராவாரத்துடன் நடைபெற்றன. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரே முன்னின்று ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்திக்கொடுத்தனர். 

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் கொடுமைப்படுத்தப் படுவதாகவும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் மீண்டும் ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாக பீட்டா இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “வாடி வாசல் உள்ளே காளைகளை அடிக்கின்றனர். சாட்டையாலும், உலோக மற்றும் மரக்குச்சிகளாலும் குத்துகின்றனர். கூச்சலிடும் மக்களை நோக்கி ஓடுவதற்காக அவற்றின் வாலில் கடிக்கின்றனர்.” என்று குற்றம் சாட்டியுள்ளது. 

அவ்வாறு மிரளும் காளைகள் சாலைகளில் ஓடி, பார்வையாளர்களை முட்டுகின்றன என்றும், இதில் சிலர் இறந்து விடுவதாகவும் பீட்டா கூறியுள்ளது. இத்தகைய ஜல்லிக்கட்டு முற்றிலும் சட்ட விரோதமானது. இதில் காளைகள் படுகாயப்படுத்தப்படுகின்றன. இதற்கான வீடியொக் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் பீட்டா தெரிவித்துள்ளது. மேலும் “2017ல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய பிறகு, ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் இளைஞர் உட்பட 25 பேர் காளை முட்டி பலியாகியுள்ளனர். 2,500க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்துள்ளனர். குறைந்த பட்சம் 10 காளைகள் இறந்துள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை பெறப்போவதாகவும் பீட்டா இந்தியா தெரிவித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com