பணம் பண்ண ப்ளான் B - 10: கிரெடிட் கார்டு நிச்சயம் வேண்டும். ஆனால்... - எளிதான கைடன்ஸ்

பணம் பண்ண ப்ளான் B - 10: கிரெடிட் கார்டு நிச்சயம் வேண்டும். ஆனால்... - எளிதான கைடன்ஸ்
பணம் பண்ண ப்ளான் B - 10: கிரெடிட் கார்டு நிச்சயம் வேண்டும். ஆனால்... - எளிதான கைடன்ஸ்

சிலருக்கு கிரெடிட் கார்டுகள் குறித்து அதிக பயம் இருக்கிறது. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்து தேவையில்லாத செலவுகளை செய்து வருகிறார்கள். கிரெடிட் கார்டுகள் குறித்த பயமும் தேவையில்லை, அதேசமயத்தில் அக்கறையில்லாமலும் பயன்படுத்தக் கூடாது.

கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்தக்கூடாது என ஒவ்வொருக்கும் பலவிதமான ஆலோசனைகள் கிடைத்திருக்கும். எளிமையான ஒரே பதில் பணத்தை சரியான சமயத்தில் திருப்பி செலுத்த முடியுமா என்னும் கேள்விக்கு பதில் கிடைத்தால் போதும், எவ்வளவு தொகையையும் செலவு செய்யலாம்.

பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்குகின்றன. 1-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரையில் செய்யும் செலவுகளை அடுத்த மாதம் 15 அல்லது 20-ம் தேதி செலுத்த வேண்டும். பொதுவான கிரெடிட் கார்ட்கள் இப்படித்தான் செயல்படுகின்றன. மிகச் சிறிய அளவில் வித்தியாசம் இருக்ககூடும். சரியான தேதியில் செலுத்திவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை, செலவு செய்த தொகையை மட்டுமே செலுத்தினால் போதுமானது. ஆனால் குறிப்பிட்ட தேதியை தாண்டிவிட்டால் அதன்பிறகு வட்டி செலுத்தியே வாழ்க்கை போய்விடும். (கிரெடிட் கார்டு வட்டி என தேடினால் பல தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.)

எரிபொருளுக்கென பிரத்யேக கார்டுகள், டிராவலுக்கு என கார்டுகள், ரிவார்டு பாயிண்ட்களுக்கு என கார்டுகள், கேஷ் பேக் கார்டுகள், பொழுதுபோக்கு செலவுக்கென கார்டுகள் என பல கார்டுகள் உள்ளன. இதில் உள்ள அனைத்தும் நமக்கு தேவை என்பதற்காக ஒவ்வொரு பிரிவிலும் பல கார்டுகளை வாங்கிக் குவிக்காதீர்கள். ஒரு கார்டு, அதிகபட்சம் இரண்டாவது கார்டு போதுமானது. இரண்டாவது கார்டு வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும்.

வாங்கும்போதே...

எனக்கு கிரெடிட் கார்டு வேண்டாம் என்று சொல்வது புத்திசாலித்தனம் அல்ல. ஒரு கிரெடிட் கார்டை எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என தெரிந்துகொள்வதே அவசியம். வாங்கும்போதே அந்தக் கார்டுக்கான விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளவும். எவ்வளவு தொகையை பயன்படுத்த முடியும், கடைசி தேதி என்ன, உங்களிடம் இருக்கும் கார்டை எங்கு பயன்படுத்தினால் சலுகை கிடைக்கும், ரிவார்டு புள்ளிகள் எப்படி கிடைக்கும், அதனை எப்படி பயன்படுத்து என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களை தெரிந்துகொண்ட பிறகு வாங்கலாம். சில கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த ஆண்டுக் கட்டணம் இருக்கிறது. தவிர, ஜாயினிங் கட்டணம் இருக்கிறது. இது எதுவும் இல்லாமல் இலவச கார்டுகள் கூட உள்ளன.

என்ன செய்யக் கூடாது?

  • கிரெடிட் கார்டில் என்ன செய்யலாம் என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை. ஆனால், என்ன செய்யக் கூடாது என்று சொல்வதற்கு பெரிய பட்டியலே இருக்கிறது.
  • கிரெடிட் கார்ட் மூலமாக பணத்தை எடுக்கவேண்டாம். எடுத்த நொடியில் இருந்து வட்டி உண்டு.
  • குறைந்தபட்ச தொகையை செலுத்தினால் போதும் என்னும் ஆலோசனைகளை ஏற்காதீர்கள். ஒவ்வொரு மாதமும் சரியான முழுமையான தொகையை செலுத்தவும்.
  • குறைந்தபட்ச தொகை அல்லது செட்டில்மென்ட்டுக்கு சென்றால், உங்களது சிபில் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்படும்.
  • இஎம்ஐ ஆப்ஷனை தேர்வு செய்வது தவறு கிடையாது. ஆனால், ஒரு இ.எம்.ஐ. முடிக்காமல் அடுத்த இ.எம்.ஐ-க்கு செல்லாதீர்கள்.
  • ரிவார்டு புள்ளிகள், கேஷ் பேக் உள்ளிட்ட அற்ப காரணங்களுக்கு இரையாகாதீர்கள். நாம் செய்யும் செலவுகளுகாக ரிவார்டு புள்ளிகளே தவிர, ரிவார்டு புள்ளிகளுக்காக செலவு செய்யக் கூடாது.

நிதி ஒழுங்கு

கிரெடிட் கார்டினை சரியாக பயன்படுத்துபவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வது, Financial discipline என்னும் வார்த்தையாக இருக்கும். அதாவது நிதி ஒழுங்கு. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகையை செலவு செய்கிறோம், எதற்காக செலவு செய்திருக்கிறோம் என்பதை நம்மால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஒருவேளை தேவையில்லாத செலவு எனில், அதனை தவிர்க்கவும் முடியும். நாம் கையில் இருந்து செலவு செய்துகொண்டே இருந்தால், அதற்கு கணக்கு இருக்காது. ஆனால், கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வதால் மாதாந்திர கணக்கினை எடுத்துப் பார்ப்போம். தேவையில்லாத செலவு எனில், குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல நீங்கள் சரியாக செலுத்தும் வாடிக்கையாளர்கள் எனில், உங்களது கடன் எல்லையை தொடர்ந்து வங்கிகள் உயர்த்தும். அதற்கு இரையாக வேண்டாம். தவிர நீங்கள் சரியாக தவணையை செலுத்து வருகிறீர்கள் என்றால், மேலும் பல வங்கிகளுக்கும் உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க முன்வரும். அதேபோல சரியான முறையில் தவணையை செலுத்தி வந்தால் உங்களது சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும். இதனால், இதர கடன் திட்டங்களுக்கான அழைப்புகளும் வரும். கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்க வேண்டாம்.

கிரெடிட் கார்டு என்பது கத்தி போல... உங்கள் வசம் / உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே உங்களுக்கு பாதுகாப்பு. சரியாக பயன்படுத்தாமல் பிடியை விட்டுவிட்டால் பெரும் நிதி சேதம் நிச்சயம். எச்சரிக்கையாக கையாண்டால் மிகச் சிறந்தது கடன் அட்டை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com