நீலகிரியில் மலைவாழ் மக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி சாத்தியமானது எப்படி? - ஆட்சியர் பேட்டி

நீலகிரியில் மலைவாழ் மக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி சாத்தியமானது எப்படி? - ஆட்சியர் பேட்டி
நீலகிரியில் மலைவாழ் மக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி சாத்தியமானது எப்படி? - ஆட்சியர் பேட்டி

நீலகிரி மாவட்ட மலைவாழ் மக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த ஆட்சியரை பாராட்டி தமிழக முதல்வர் விருது வழங்கி கௌரவித்தார். இந்த சாதனை எப்படி சாத்தியமானது என்பதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் விரிவாக விளக்குகிறார்.

நீலகிரி மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் 477 மலை கிராமங்களில் 27,832 மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீண்ட காலமாக நோய் பாதிப்பில் உள்ளவர்கள் தவிர 21,432 பேருக்கு 100 சதவீத கொரோனா தடுப்பூசியை போட்டுள்ளது நீலகிரி மாவட்ட நிர்வாகம். பழங்குடியின மக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி போட்டு இந்திய அளவில் சாதனை படைத்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியரை பாராட்டி தமிழக முதல்வர் விருது வழங்கி கௌரவப் படுத்தியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை நீலகிரி பழங்குடிகளையும் வெகுவாக பாதித்தது. எண்ணிக்கை அளவில் மிகக்குறைவாக உள்ள 6 வகையான பழங்குடியின மக்களான குரும்பர், ஆளு குரும்பர், இருளர், பணியர், காட்டு நாயக்கர், உள்ளிட்டோரை கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும்பாலான பழங்குடியின மக்கள், தடுப்பூசி செலுத்த வரும் சுகாதாரப் பணியாளர்களை பார்த்ததும் வனத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டனர், அதோடு வீட்டை முன்புறமாக பூட்டிவிட்டு பின்புறவழியில் வீட்டின் உள்ளே சென்றும் ஒளிந்து கொண்டனர். அதையும் மீறி வீட்டின் உள்ளே சென்றால் கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டதோடு எப்படியெல்லாம் ஒளிந்து கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் ஒளிந்து கொண்டனர்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் சுகாதாரப் பணியளார்களை திட்டியதோடு அவர்களை அருவாளை காட்டி மிரட்டவும் செய்தனர். இந்த இக்கட்டான இடர்களையெல்லாம் மீறி மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்தி முதல்வரின் விருதை பெற்றது எப்படி சாத்தியமானது என்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம்.

இந்த சாதனை எப்படி சாத்தியமானது?

ஒரு குரூப்பாக எல்லா அமைப்பினரும் இணைந்து செயல்பட்டதால்தான் இந்த சாதனை சாத்தியமானது என பேச ஆரம்பித்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அவர்கள், இந்த சாதனையில் என்ஜிஓ-க்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. அவர்கள் மத்தியில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது. அதோடு சுகாதரத்துறையுடன் இணைந்து தன்னார்வலர்களும் சென்றதால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.

தடுப்பூசியால் எந்தவித பாதிப்பும் இருக்காது. மாறாக கொரோனா நோயிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பேராயுதமாக இருக்கும் என்று அவர்களது மொழியிலேயே பேசிப் பேசி புரியவைப்பதற்காக பாடல்கள், மீம்ஸ், மற்றும் அவர்களுக்குப் பிடித்த நடிகர்களை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் மூலம் முதலில் ஒரு கிராமத்திற்குச் செல்லும்போது அங்கே இருக்கும் முக்கியஸ்தர்களை அழைத்து அவர்களிடம் பேசி முதலில் அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தினோம்.

அதன்பிறகு அங்குள்ள இளைஞர்களுக்கு ஊசி போட்டோம். இவர்களுக்கெல்லாம் எதுவும் ஆகவில்லை என்றதும் அங்குள்ள மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். சிரமம் பார்க்காமல் திட்டமிட்டு செயல்பட்டதால் தான் இது சாத்தியப்பட்டது.

எத்தனை மலை கிராமங்கள் எவ்வளவு மக்கள்?

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 477 கிராமங்கள் இருக்கிறது. இங்கு 27,832 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 18 வயது நிரம்பாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீண்ட நாள் நோய்வாய் பட்டவர்கள் தவிர மீதமுள்ள 21,432 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்போது கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இனிமேல் தான் அந்த பணியை தொடங்க வேண்டும்.

கொரோனா இரண்டாவது அலை மலைவாழ் மக்களை அதிகம் தாக்கியதால் இந்த தடுப்பூசி போடும் பணியை கடந்த மே மாதம் தொடங்கினோம். தடுப்பூசி போட மலை கிராமங்களுக்குச் செல்லும் சுகாதார பணியாளர்களை கண்டதும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஊசிபோட வரமாட்டார்கள். அதனால் அங்குள்ள தலைவர்களை அழைத்து ஒரு மீட்டிங் நடத்தினோம். என்ஜிஓ பணியாளர்களை வைத்து முதல்நாள் அவர்களிடம் பேசிவிடுவார்கள். மறுநாள் நமது டீம் போகும்போது அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அதேபோல் நாம் செல்லும் வண்டியை ஓராமாக நிறுத்திவிட்டு தான் செல்வோம். இல்லையென்றால் வண்டியை பார்த்ததும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. அதனால வண்டியை தூரத்திலேயே நிறுத்திவிட்டு நடந்து போவார்கள். நாம் போன உடனே ஊசியை போட்டுவிட்டு வராமல் அவர்களிடம் கொஞ்சநேரம் பேசி அவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கிய பிறகே ஊசியை போட்டுவிட்டு மேலும் சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டுதான் வருவார்கள்.

ஒருநாள் காலையில் செல்லும் அந்த டீம் அன்று மாலை வரை அங்கேயே இருப்பார்கள். வேலைக்குச் சென்று திரும்புபவர்களுக்குக் கூட இரவானாலும் இருந்து தடுப்பூசி போட்ட பின்பே கிளம்பி வருவார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

முதல்வர் அவர்கள் இந்த பாராட்டு சான்றிதழை கொடுக்கும் போது அங்கிருந்த சுகாதாரத்துறை அமைச்சர், உங்கள் மாவட்டத்தை முழுமையான தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற வேண்டுமென்று சொன்னார்கள். அதற்கு நானும் கட்டாயம் மாற்றுவதாக சொல்லியிருக்கிறேன். அதற்கான ஒத்துழைப்பு எங்கள் மாவட்டத்தில் அதிகமாக இருக்கிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தி ஊசிபோட முடியாது.

வெளி மாநிலங்களில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருபவர்களையும் தடுப்பூசி செலுத்திய பிறகே வரவேண்டும் என்று சொல்வதன் மூலம் நீலகிரி மாவட்டத்தை தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்ட மாவட்டமாக மாற்றலாம். மூன்றாம் அலையில் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை அறிய இது ஒரு ஸ்டெடி ஏரியவாக பார்க்க ஏதுவாக இருக்கும். நீலகிரி மாவட்டத்திற்கு தடுப்பூசி மொத்தமாக கொடுத்துவிட்டால் அதை தினந்தோறும் எவ்வளவு செலுத்த முடியும் என்பதை திட்டமிட்டு வைத்திருக்கிறோம்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சொல்வதை கேட்டு ஒத்துழைக்கும் மக்கள் இங்கிருப்பதால் அவர்களின் ஒத்துழைப்போடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு 100 சதவீத தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற சாதனையை படைப்பதோடு கொரோனா இல்லாத மாவட்டமாகவும் மாற்றுவோம் என்றார் நம்பிக்கையுடன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com