சென்னை மழை: குடியிருக்க இடம் தேடி அலையும் மக்கள்... உறைவிடம், உணவின்றி தவிக்கும் நிலை!

சென்னை மழை: குடியிருக்க இடம் தேடி அலையும் மக்கள்... உறைவிடம், உணவின்றி தவிக்கும் நிலை!

சென்னை மழை: குடியிருக்க இடம் தேடி அலையும் மக்கள்... உறைவிடம், உணவின்றி தவிக்கும் நிலை!
Published on

வானமே கூரை என வெட்ட வெளியில் உண்டு, உறங்கி பிழைத்திருக்கும் நடைபாதை வாழ் மக்களுக்கு சிறு மழையும் சாபம்தான். விடாது பெய்யும் அடை மழையில் தற்போது தவித்துப்போயிருக்கிறார்கள் அவர்கள். சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேர் வீடின்றி சாலையோரம் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. தமிழகம் முழுவதும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். இந்நிலையில், தொடர் மழையால் சாலைகள் எல்லாம் ஆறுகளாக மாற, சாலையோரம் வசிக்கும் மக்களில் பலர் இருக்கவே இடம் தேடி அலையும் அவல நிலை உருவாகியுள்ளது.

தொடர் மழையால் அடுப்பைப் பற்ற வைக்க முடியாமல் உணவு சமைக்கவும் இயலாமல் பலர் தவிக்கின்றனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பலர் தவித்து வந்த நிலையில், தற்போது மழை அவர்களது இன்னல்களை அதிகமாகியிருக்கிறது. உணவு, இருப்பிடம் குறித்த கவலைகள் ஒரு புறம் உள்ள நிலையில் மழைக்கால நோய்க் தொற்றும் அவர்களை பாதிக்க வாய்ப்புள்ளது.

சாலையோரம் வசிப்பவர்களில் பலர் தற்போது அரசு சார்பில் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இம்மக்களுக்கு சமுதாயக் கூடத்தில் அரசு சார்பில் உணவு சமைத்து வழங்கப் படுகிறது. எழும்பூர் பகுதியில் சாலையோரம் வசித்த மக்கள் சமீபத்தில் மாநகராட்சி தூய்மை பணிகளுக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். அவர்கள் தற்காலிகமாகக் கண்ணப்பர் திடல் அருகே உள்ள நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மழையில் காப்பகத்திலும் மழைநீர் சூழ்ந்து மக்கள் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 

சாலையோரம் வசிப்பவர்களில் மிகப்பெரும்பாலோர் தினக்கூலிகளே. மழை காரணமாக கிடைத்த சொற்ப வருமானத்திற்கும் வழியின்றி போய்விட்டது. அடிப்படை தேவைகளான உணவு, உறைவிடம், வருமானம் இன்றி தவித்துக்கிடக்கும் இவர்களுக்கு நிரந்தர இருப்பிடமும், அடிப்படை வாழ்வாதாரத்திற்கான வேலையையும் உறுதிப்படுத்துவதே தீர்வாக அமையும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வா இதுகுறித்து நம்மிடையே பேசுகையில், “சென்னையை உருவாக்கிய மிக முக்கிய பங்காற்றியவர்கள் இவர்கள்தான். இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். எப்போதும் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் மட்டுமே நகரத்தை வளர்ப்பதில்லை. அவர்களுடன் இணைந்து உடலுழைப்பை போடும் பலர் இருக்கின்றனர். அப்படியானவர்கள்தான் மெட்ரோ பணி செய்பவர்கள், கையேந்தி பவன் நடத்துபவர்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், பூ விற்பவர்கள் என பலர் இருப்பர். ஆனால் இவர்கள் யாருக்குமே அவர்களின் அடிப்படை உதவிகள் கிடைக்கவில்லை.

இந்த தெருவோர மக்களுக்கு, தனியாக ஷெல்டர் / இரவு நேர முகாம் உருவாக்க வேண்டுமென அரசு முடிவெடுத்து, அதை நடைமுறையும் படுத்தவும்பட்டது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய்விட்டது. பல இடங்களில், அந்த இரவு நேர முகாமை கவனிக்கும் நபர்களும் நிரந்தர பணியின்மை, வீடு இன்மை போன்ற பிரச்னை உடையவர்களாகவே இருந்தனர். இதனால் நடைமுறை சிக்கல் நிறைய வருகிறது.

தமிழக அரசு சார்பில், ஒருங்கிணைந்த தெருவோர மக்களுக்கு இவற்றையெல்லாம் சரிசெய்ய, இவர்களுக்கு முறையாக வசதிகள் செய்துதரப்படவேண்டும். இருப்பிடம் மட்டுமன்றி வேலையும் அவர்களுக்கு செய்துதரப்பட வேண்டும். அப்படி செய்தால்தான், அவர்களுக்கு கன்னியமான ஒரு வாழ்வு கிடைக்கும்; சமூகத்தில் அவர்களால் மரியாதையான ஒரு வாழ்வு கிடைக்கும்.

கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் குடிசை மாற்று வாரியம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, இப்படியானவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இன்று அதை நகர்ப்புற மக்கள் மேம்பாட்டு மையம் என்பது போல பெயர் மாற்றி, அதன் நோக்கத்தையே மாற்றியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தனது அந்த அறிவிப்பை மாற்றிக்கொண்டு, இந்த மக்களின் வாழ்வுக்கு பதில்சொல்ல வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com