"வீடு இல்லாமல் தெருவில் நிற்கிறோம்" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்?

"வீடு இல்லாமல் தெருவில் நிற்கிறோம்" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்?
"வீடு இல்லாமல் தெருவில் நிற்கிறோம்" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்?

சென்னை அரும்பாக்கம் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கியதில், இன்னும் 23 நபர்களுக்கு வீடு கிடைக்காததால் அந்த மக்கள் தெருவில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரும்பாக்கம் கூவம் ஆற்றின் கரையோரம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதி இருக்கிறது. 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்காக 2016-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியம் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது 93 நபர்களுக்கு புளியந்தோப்பு அருகே கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியை ஒதுக்கீடு செய்து இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை கொடுக்கப்பட்டும் உரிய ஆவணம் இல்லை என்று மறுத்துள்ளதால் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பகுதிவாசியான மோகனவள்ளி கூறுகையில், ``10 வருடமாக நாங்கள் இங்குதான் வசித்து வருகிறோம். மாற்று இடம் தருவதாக கூறி கணக்கெடுப்பு நடத்தும்போது, எங்களையும் சேர்த்துதான் கணக்கெடுத்தார்கள். எல்லாம் முறையாக நடந்தது. வீடும் வந்துவிட்டது. ஆனால், முறையாக வீடு ஒதுக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் நாங்கள் தவித்து வருகிறோம்” என்று வேதனை தெரிவிக்கிறார்.

இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஆட்டோ ஒட்டுவதும், அருகில் இருக்கும் இடத்தில் வீட்டு வேலை, தினக் கூலி பணிகளை செய்து வருகின்றனர். இதில் மாநகராட்சி கணக்கெடுப்பு செய்தபோது வாடகை வீட்டில் இருந்தவர்களுக்கு வீடு ஒதுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. இங்கு இருந்த வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்தும், இந்தப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் எங்களை மட்டும் ஏன் அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர் என அம்மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது தொடர்பாக ஹையத் என்ற பகுதிவாசி பேசுகையில், ``உங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுவிட்டது என்று கூறி, அதற்கான ஆவணங்களையும் கொடுத்தனர். நானும் அதை வாங்கிகொண்டு, வீட்டு சாவியையும் பெற்றுக்கொண்டேன். புதிய வீட்டை திறந்து பொருட்களையும் வைத்துவிட்டேன். ஆனால், திடீரென்று நேற்று வந்து, உங்களுக்கு இந்த வீடு கிடையாது. வேறொருவருக்கு ஒதுக்கிவிட்டோம் என்று கூறுகிறார்கள். இதில் என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

அரும்பாக்கம் கூவம் கரையோரத்தில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை வசித்துவரும் தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருந்தும் வீடு ஒதுக்க அதிகாரிகள் மறுப்பது ஏன் என்று அந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, ``முதற்கட்ட கணக்கெடுப்பில் ஆவணங்களை சரிபார்த்தே வீடு ஒதுக்கப்பட்டது” என விளக்கமளித்தனர்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ``நீண்டகாலமாக இங்கே வசித்துவரும் 23 பேருக்கும் புளியந்தோப்பு பகுதியில் வீடு ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க வேண்டும். 23 பேருக்கும் வீடு ஒதுக்கி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இது தொடர்பாக அமைச்சரையும், மாநகராட்சி அதிகாரிகளையும் நேரில் சந்தித்து, மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்த இருக்கிறேன். இந்த மண்ணின் பூர்விக குடிகள் இடமாற்றப்படுவது உள்ளபடியே வேதனைக்குரியதுதான்.

சென்னை மாநகரம் தலைநகரமாக உருவாவதற்கு முன்பிருந்தே வசித்து வருபவர்கள். இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துவது அவர்களின் வாழ்வதாரத்தை பறிக்கும் செயல். அந்த மக்களுக்கு வீடு கொடுத்தாலும், தங்களது சொந்த இடத்திலிருந்து வேறொரு புதிய இடத்துக்கு சென்று குடியிருந்து அன்றாட தேவைக்கு வேலை, தொழில் செய்ய முடியாது. எனவே கூவம் கரையோரம் வசிப்பவர்களை நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்புறப்படுத்துகிறோம் என அரசு சொன்னாலும், அவர்களை சென்னையிலிருந்து அப்புறப்படுத்தாமல், அந்தந்த பகுதியிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வீடு ஒதுக்கிட வேண்டும் என்பதை நாங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில் அரும்பாக்கம் ராதாகிருஷணன் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டாயம் வீடு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை நகரின் பூர்வகுடிகளாக 2 தலைமுறையாக இந்த இடத்தில் வசித்த மக்கள் அனைவருக்கும் வீடுகள் ஒதுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, புளியந்தோப்பு அருகேயுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகள் எப்படி இருக்கின்றன என்பதை 'புதிய தலைமுறை' நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது.

ஒவ்வொரு வீடும் தலா 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. வீட்டில் ஹால், படுக்கை அறை, சமையலறை தனித்தனியே உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com