கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐ.டி ஊழியர் லாவண்யா பேட்டி
வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐ.டி ஊழியர் லாவண்யா உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய லாவண்யா, நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் 3 பேர் என்னைக் கத்தியால் தாக்கினர். நான் அது ஒரு கனவு என்பதுபோல் நினைத்துக்கொண்டு அவர்களுடன் போராடினேன். சாலையில் இறந்தது போல் படுத்துக்கொண்டால் அவர்கள் சென்றுவிடுவார்கள் என எண்ணினேன். நான் நினைத்தது போலவே நடந்தது. என் அதிர்ஷ்டம் நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பதை அவர்கள் சோதிக்கவில்லை. அவர்கள் என்னை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்தச் சூழ்நிலையில் என்னைக் கடந்து சென்ற பொதுமக்களை குறைக்கூற முடியாது. ஏனென்றால் அவர்களும் பயந்து போய்தான் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அவ்வேளையில் ஒரு டெம்போ ஓட்டுநர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த அடுத்த 2நிமிடங்களில் காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து என்னை காப்பாற்றினர். நான் 2மணி நேரம் உயிருக்காகப் போராடினேன் அந்த வேளையில் என் பெற்றோர் ஒரு மகளை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த மனவலிமைதான் என் உயிரைக் காப்பாற்றியது. என் தந்தையின் செல்போன் எண்ணை தெளிவாகக் கூறினேன். நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு இச்சம்பவம் குறித்து தெரிவிக்கும்படி கூறினேன்.
சிவக்குமார் அண்ணாவுக்கு (மருத்துவமனையில் அனுமதித்த காவலர்) மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மருத்துவமனைக்கு வந்து என்னை நலம் விசாரித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆகியோர் மிகவும் கனிவானவர்கள். பொதுவாக ஆந்திர மக்கள் மீது தமிழர்கள் அக்கறை செலுத்த மாட்டார்கள் எனக்கூறுவார்கள். அந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழக மக்கள் ரொம்ப பாசமானவர்கள். அவர்கள் அனைவரையும் சமமாக பார்க்கிறார்கள்.
“எழுந்து வா தமிழ்நாடே நீ மீண்டு வருவாய் என காத்திருக்கு” என என்னைச் சுற்றியிருந்தவர்கள் சொன்னபோது பெருமையாக இருந்தது. என்ன நடந்தாலும் மன வலிமையிருந்தால் அதிலிருந்து மீண்டுவிடலாம். வருத்தம் கொள்ளத் தேவையே இல்லை என்கிறார்.
இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகும் லவாண்யாவின் தைரியத்தை பார்க்கும் போது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
தழுதழுத்தக் குரலில் பேசிய லாவண்யாவின் தந்தை நள்ளிரவு என் மகளிடமிருந்து இவ்வாறு ஒரு அழைப்பு வந்ததும் நான் துடித்துப் போனேன்அந்நேரத்தில் உதவிய அனைவருக்கும் முக்கியமாகக் காவல்துறையினருக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் எனக்கூறினார்.