"உங்கள் வார்த்தைகள் உதவாது!" - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் ஆட்டோ மொபைல் துறையினர்

"உங்கள் வார்த்தைகள் உதவாது!" - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் ஆட்டோ மொபைல் துறையினர்
"உங்கள் வார்த்தைகள் உதவாது!" - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் ஆட்டோ மொபைல் துறையினர்

சில நாட்களுக்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் துறையினரின் 61-வது கூட்டம் நடந்தது. இதில், ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசின் மீதான எதிர்ப்பை இந்தத் துறையினர் பதிவு செய்தனர். இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

"ஆட்டோமொபைல் துறையின் முக்கியத்துவம் குறித்து மத்திய அரசு நம்பிக்கையாக பேசிவருகிறது. ஆனால், நடவடிக்கை என்று பார்த்தால் எதுவும் இல்லை. அரசாங்கத்தின் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே வாகன விற்பனையை உயர்த்தாது" என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா பேசியிருக்கிறார்.

"இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த நிதி ஆண்டில் அனைத்து பிரிவுகளிலும் வாகன விற்பனை சரிந்திருக்கிறது. பயணிகள் வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் என அனைத்து பிரிவுகளிலும் விற்பனை சரிந்திருக்கிறது. மூலப்பொருள் விலை உயர்வு, வரி மற்றும் காப்பீடு உள்ளிட்ட காரணங்களால் வாகனம் வாங்குவது என்பது அனைவருக்கும் எட்டாத சூழலில் உள்ளது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தெளிவாக விவரிக்கும்போது, "எஸ்.யு.வி வாகனங்களின் விற்பனை உயரத் தொடங்கி இருக்கிறது. ஆனால், வாகன விற்பனையை இதன்மூலம் அளவிட முடியாது. ஒருவர் எஸ்.யூவி. கார் வாங்குகிறார் என்றால், அவர் ஏற்கெனவே கார் வாங்கியவராக இருப்பார். ஆனால், முதல் முறையாக வாங்க விரும்புவர்களுக்கு வேகன் ஆர், ஆல்டோ உள்ளிட்ட கார்களின் விலை 50,000 ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது கார் விற்பனையை கடுமையாக பாதிக்கும்.

சூழ்நிலை இதுபோல இருந்தால் எந்தவகையான வாகனமாக இருந்தாலும் (ஐசிஇ, எலெக்ட்ரிக், சிஎன்.ஜி. பயோ எரிபொருள்) சந்தையில் விற்பனை செய்ய முடியாது. ஒரு காலத்தில் கார் என்பது ஆடம்பர பொருளாக இருந்தது, தற்போது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இந்த மாற்றத்தை நாம் அனைவரும் உணரவேண்டும்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது கார் விற்பனை நன்றாக இருப்பதுபோல தோன்றும். ஆனால், இந்த ஏற்றம் அரசாங்கத்தால் ஏற்பட்டதல்ல. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரந்து வருவதுதான் காரணம்.

தற்போது இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 1000-க்கு 30 என்னும் அளவிலே உள்ளது. 1,000 நபர்களுக்கு 200 நபர்கள் கார் வாங்கினால் கூட பெரிய ஒவ்வொரு ஆண்டும் கார்களின் தேவை லட்சக்கணக்கில் உயரும். பொருளாதாரத்திலும் பெரிய மாற்றம் நிகழும்" என்று ஆர்.சி.பார்கவா தெரிவித்தார்.

அத்துடன் "நம்முடைய திட்டமிடலில் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பொருள் ஏற்றதா, அவரால் வாங்க முடியுமா என்பதை நாம் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம். புதிய விதிமுறைகளால் நுழைவு விலை கார்களின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்ட்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேணு ஸ்ரீனிவாசன், "இரு சக்கர வாகனங்களின் விலை 45% - 50% வரை உயர்ந்துவிட்டது.

இதுதவிர அதிக ஆண்டுகளுக்கு காப்பீடு இருப்பதால் மொத்த விலை அதிகமாக இருக்கிறது. சொகுசு பொருளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி ஆரம்பகட்ட இரு சக்கர வாகனங்களுக்கும் விதிக்கப்படுகிறது" என்று பேசினார்.

இப்போதைக்கு இ.வி கிடையாது: மாருதி

மாருதி நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்குழுவில் பேசிய ஆர்.சி. பார்கவா, "இப்போதைக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் திட்டமில்லை. தற்போது விற்பனையாகும் வாகனங்கள் மொத்த விற்பனையில் மிக குறைவு. எலெக்ட்ரிக் வாகன சந்தை பெரிதாக உயரும்போதுதான் அதுகுறித்து திட்டமிட முடியும். தற்போதைக்கு சிஎன்.ஜி. ஹைபிரிட், ஐசிஇ உள்ளிட்ட பிரிவுகளில்தான் கவனம் செலுத்துகிறோம். தவிர, இதுவரை வெளியாகி உள்ள எலெக்ட்ரிக் கார்கள் அனைத்தும் அதிக விலையுள்ள கார்கள்தான். ஆரம்பகட்ட கார்களை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றினால் மக்கள் வாங்கும் விலையில் அந்த கார்கள் இருக்காது" என ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com