“அரசின் இருவேறு நிலைபாடு, எங்களை குழப்புகிறது”-பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேறுமா?-ஓர் அலசல்

“அரசின் இருவேறு நிலைபாடு, எங்களை குழப்புகிறது”-பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேறுமா?-ஓர் அலசல்
“அரசின் இருவேறு நிலைபாடு, எங்களை குழப்புகிறது”-பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேறுமா?-ஓர் அலசல்
Published on

சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வூதியம் குறித்து பேசியிருந்தார். அது தற்போது பணியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பேரவையில் அமைச்சர் பி.டி.ஆர். பேசுகையில் “ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைப்பதில் நிதி மேலாண்மையைப் பொறுத்தவரை சிக்கல் இருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆண்டுக்கு அரசு ரூ.24,000 கோடி வரை செலவிட்டது. இதனால் தனி நபரைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை அரசு சொந்த நிதியை செலவிட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.3,205 கோடி, தனி நபருக்கு ரூ.50,000 அரசு செலவிடுகிறது. தனி நபர் கணக்கில் இருந்து அரசுக் கணக்குக்கு ஓய்வூதியத் தொகை செலவை மாற்றுவதில் சட்ட சிக்கல் உள்ளது. அரசின் கடன் சுமை ஏற்கெனவே ரூ.6 லட்சம் கோடியாக உள்ளது.

முன்னாள் நீதிபதிகள், எம்எல்ஏக்களின் அனைத்து வகையான ஓய்வூதியத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.39,000 கோடி செலவாகியுள்ளது. இதனால் அதை மாற்றி அமைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆகவே இப்போது அமலிலுள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தை விடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மீண்டும் மாறுவது என்பது சிக்கலாக உள்ளது. இருப்பினும் ஓய்வூதியத்தை பழையபடி மாற்றுவது குறித்து முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “திமுக ஆட்சிக்கு வந்தபோது ரூ.5.75 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறை இருந்தது. நிதிப்பற்றாக்குறையை சரி செய்யக்கூடிய முயற்சியில் முதலமைச்சர் முனைப்பு காட்டிவருகிறார். அதனாலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை சரியான பின் பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்’’ என்றார்.

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அமைச்சர்களின் இருவேறு கருத்துகளை கூறியிருப்பது அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. பழைய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன, பங்களிப்பு திட்டம் என்றால் என்ன, இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பதுகுறித்து ஆராய்ந்தோம். அதன் முடிவில் கிடைத்த விவரங்களின் ஒப்பீடு இங்கே:

பழைய ஓய்வூதியம்: முழு ஓய்வூதியமும் பணமாகவே உரியவருக்கு வழங்கப்படும். வரையறுக்கப்பட்ட தொகை முழுமையாக கிடைக்கும். 3 வகையான பணிக்கொடை உண்டு. அதன்படி இறப்புக்குப் பின் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அகவிலைப்படி உயரும்போது ஓய்வூதியமும் உயரும். ஓய்வூதியத்தில் 3ல் 1 பங்கு தொகையை முன்கூட்டியே பெறலாம்.

புதிய ஓய்வூதிய திட்டம்: ஓய்வூதியத் தொகையில் 60% பணம் உரியவரிடம் வழங்கப்படும் - 40% பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். வரையறுக்கப்பட்ட தொகை இல்லை. முழு ஓய்வூதியம் இல்லை. பணிக்கொடை கிடையாது. குடும்ப ஓய்வூதியம் குறித்து வரைமுறை செய்யவில்லை. அகவிலைப்படி உயரும்போது ஓய்வூதியத் தொகை உயராது. ஓய்வூதியத் தொகையை முன்கூட்டியே பெற இயலாது.

இக்காரணங்களுக்காக, இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கின்றனர் அரசு ஊழியர்கள் சங்கத்தினர். இச்சங்கத்தினர் சார்பில் அன்பரசு புதியதலைமுறையில் பேசினார். அவர் பேசுகையில், “அரசின் இருவேறு நிலைபாடு, எங்களை குழப்புகிறது. கார்ப்பரேட் பொருளாதாரத்தை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகிறார். இது, திராவிட மாடல் இல்லை. தமிழகத்திலுள்ள 30 ஆண்டுகால அரசின் ஊழியர்களை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கும் இத்திட்டம் அநாதைகளாக ஆக்கும். உலகப் பொருளாதாரத்தை, இங்குள்ள அரசு ஊழியர்களுக்கான செலவுகளுடன் ஒப்பிடுவதை எங்களால் ஏற்க முடியாது. ஆகவே இதை `அரசு எங்களை அநாதைகளாக்குகிறது’ என்றே குறிப்பிடுவோம். முதல்வர் ஸ்டாலின், அமைச்சரின் இந்தக் கருத்தை ஏற்கக்கூடாது என்பதையே எதிர்பார்க்கிறோம்” என்று கடுமையாக கூறினார்.

ஓய்வுபெற்ற அரசு ஆசிரியரான முருகையன் இதுகுறித்து புதியதலைமுறையில் பேசுகையில், பழைய ஓய்வூதியத்தை பின்பற்றுவோம் என்பதே திமுக-வின் தேர்தல் அறிக்கை. அதையே திமுக பின்புற்ற வேண்டும். அதைவிடுத்து, அரசு அதிகாரிகளின் ஓய்வூதியத்தை `செலவு செய்கிறோம்... இதனாலேயே பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது’ என்று சொல்கிறார். அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதே அரசு ஊழியர்கள்தான். நாங்களெல்லாம், எங்கள் வாழ்நாள் முழுக்க அரசுக்கு ஊழியம் செய்த, அரசு ஊழியர்கள் அப்படியிருக்கையில், அவர்களின் ஊழியர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியத்தை, இப்படி கணக்கு போட்டு பார்த்து பேசுவதென்பது, அவர்களை கொச்சைப்படுத்தும் செயலாகும். இந்த அரசு அதை செய்யக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

இவர்களின் முழு பேட்டியை, இங்கு காணவும்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com