பட்டியலானதில் இருந்து கடுமையான சரிவு - பேடிஎம் பங்கு என்னவாகும்?

பட்டியலானதில் இருந்து கடுமையான சரிவு - பேடிஎம் பங்கு என்னவாகும்?
பட்டியலானதில் இருந்து கடுமையான சரிவு - பேடிஎம் பங்கு என்னவாகும்?

பேடிஎம் பங்கு பட்டியலானதில் இருந்து கடுமையாக சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என உத்தரவிட்டதால் இந்த பங்கு மேலும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஒரு பங்கு 2,150 ரூபாய்க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து சரிந்து இந்த பங்கு வியாழன் வர்த்தகத்தின் முடிவில் 597 ரூபாயில் முடிவடைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 70 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது.

பட்டியலாவதற்கு முன்பாக இந்த பங்கின் சந்தை மதிப்பு 1.40 லட்சம் கோடி ரூபாய் என்னும் அளவில் இருந்தது. தற்போது ஒரு லட்சம் கோடி அளவுக்கு சந்தை மதிப்பினை இழந்திருக்கிறது. (தற்போதைய சந்தை மதிப்பு ரூ.38,720) இந்த நிலையில் இந்த பங்கு மேலும் சரிவை சந்திக்கும் என Macquarie நிறுவனம் கணித்திருக்கிறது. மேலும் சரிந்து ரு.450 வரைக்கும் இந்த பங்கின் வீழ்ச்சி இருக்கும் என இந்த நிறுவனம் கணித்திருக்கிறது.

Macquarie நிறுவனம் பேடிஎம் பங்குக்கான இலக்கினை தொடர்ந்து குறைத்துகொண்டே வருகிறது. ரூ.1200, ரூ.900 என இலக்கு விலையை குறைத்தது. பிப்ரவரியில் ரூ.700 வரை செல்லும் என கணித்தது. அந்த விலைக்கு கீழே சரிந்தது. தற்போது ரூ.450 வரை இந்த பங்கின் சரிவு இருக்கும் என அந்த நிறுவனம் கணித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி இந்த தடையினை பகுதி அளவுக்கு குறைப்பதற்கு 8 மாதம் வரை ஆகும். முழுமையாக நீக்குவதற்கு 15 மாதங்கள் வரை ஆகக்கூடும் என்பதால் இந்த பங்கில் நிலையற்றத்தன்மை இருக்கும் என்றே வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பேடிஎம் என்பது பிராண்ட் பெயர். நிறுவனத்தின் பெயர் 197 கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட். அதனால் அடுத்த இலக்கு 197 ரூபாய் என முதலீட்டாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மார்கன் ஸ்டான்லியின் இலக்கு ரூ.935

ஆனால் சிலர் இதற்கு கீழ் சரிவடையும் வாய்ப்பு இல்லை வேறு சில நிறுவனங்கள் கணித்டிருக்கின்றன. மார்கன் ஸ்டான்லி நிறுவனம் ரூ.935 வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறது என கணித்திருக்கிறது. அதேபோல ஐசிஐசிஐ செக்யூரெட்டீஸ் ரூ.1,285 வரை பேடிஎம் பங்கு உயரும் என கணித்திருக்கிறது. கோல்ட்கேன் சாக்ஸ், ஜேபி மார்கன் உள்ளிட்டவை ரூ.1000க்கு மேலே இலக்கு விலையாக நிர்ணயம் செய்திருக்கின்றன. (அடுத்த 12 மாதங்களில்)

அதேபோல பேடிஎம் பங்கினை விமர்சனம் செய்யும் பாரத்பே நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் குரோவரும் பேடிஎம் பங்கினை வாங்கலாம் என ட்வீட் செய்திருக்கிறார்.

விஜய் சேகர் சர்மா சொத்துமதிப்பு

பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முன்பு விஜய் சேகர் சர்மாவின் சொத்துமதிப்பு 235 கோடி டாலராக இருந்தது. ஆனால் தற்போது 100 கோடி டாலருக்கும் கீழாக சரிந்துவிட்டது. அதனால் பில்லினியர் அந்தஸ்தை விஜய்சேகர் சர்மா இழந்துவிட்டார் என போர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.

முதலீட்டாளர்களின் மொத்த கவனமும் பேடிஎம் மீது இருந்தாலும் புதிதாக பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்கள் கடுமையாக சரிந்திருக்கின்றன. 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை சரிவை சந்தித்திருக்கின்றன. கார் ட்ரேட் (66%), சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (60%), ஜொமோட்டோ (53%), பாலிசிபஸார் 52% சதவீதம் அளவுக்கு உச்சபட்ச விலையில் இருந்து சரிவை சந்தித்திருக்கின்றன.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உற்சாகமாக ஐபிஓ-வை வெளியிட்டாலும் அந்த உற்சாகம் நீண்ட நாளைக்கு நீடிக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com