குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளிலும் 10 மசோதாக்கள் நிறைவேற்றம் – விரிவான அலசல்

குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளிலும் 10 மசோதாக்கள் நிறைவேற்றம் – விரிவான அலசல்
குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளிலும் 10 மசோதாக்கள் நிறைவேற்றம் – விரிவான அலசல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்திற்கு பிறகு, 10 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான அலசல்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், டிசம்பர் 21 ஆம் தேதி வரை 12 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முந்தைய கூட்டத் தொடர்களில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மசோதாக்கள் உட்பட மொத்தம் 10 மசோதாக்கள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

குளிர்காலக் கூட்டத்தொடரில் மசோதாக்கள் மீதான விவாதங்கள்:

குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை மொத்தமாக  83.2 மணிநேரம் செயல்பட்டதில்,  26.5 மணிநேரம் மட்டுமே மசோதாக்கள் குறித்த விவாதம் நடந்தது, மக்களவையில் அதிகபட்சமாக 37 மணி நேரம் நாடாளுமன்ற அலுவல் அல்லாத வேலைகளில் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்களவை செயல்பட்ட 45.4 மணிநேரத்தில், மொத்தமாக 21.7 மணி நேரம் சட்டத்திற்கான விவாதம் நடந்தது. இதன் மூலமாக மிகக்குறைவான நேரத்தில் நாடாளுமன்றத்தில்  மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.

மக்களவையில் இரண்டு நிமிட விவாதத்திற்கும், மாநிலங்களவையில் 8 நிமிட விவாதத்திற்கும் பிறகு சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுவே மிகவும் குறைவான நேர விவாதத்துடன் நிறைவேற்றப்பட்ட மசோதாவாகும்.

உயர் தொழில்நுட்ப உதவியுடனான இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா தொடர்பாக மக்களவையில் மூன்று மணி நேரம் 51 நிமிட விவாதம் நடந்தது, இந்த விவாதத்தில் 18 எம்.பி.க்கள் பங்கேற்றனர். இந்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் 14 எம்.பி.க்கள் பங்கேற்று 1 மணி நேரம் 17 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது.

குளிர்கால கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சம்பளங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள் திருத்த மசோதா தொடர்பாக 9 மணி நேரம் 37 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் 27 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 17 எம்.பி.க்களும் விவாதித்தனர், இதுவே இந்த கூட்டத்தொடரில் அதிகநேரம் விவாதிக்கப்பட்ட மசோதாவாகும்.

அதற்கு அடுத்தபடியாக அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் மொத்தமாக 9 மணிநேரம் 1 நிமிடம் விவாதம் நடந்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக டிசம்பர் 2 அன்று மாநிலங்களவையில் 22 உறுப்பினர்கள் 4 மணி நேரம் 24 நிமிடங்கள் விவாதித்தனர். இந்த மசோதா 2019 ஆம் ஆண்டே மக்களவையில் நிறைவேறியது, மக்களவையில் இது தொடர்பாக 31 உறுப்பினர்கள் நான்கு மணி நேரம் 37 நிமிடங்கள் விவாதித்தனர்.

இந்த கூட்டத்தொடரில் நாடு முழுவதும் சர்ச்சைக்குரியதாக விவாதிக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்த சட்டமசோதா தொடர்பாக இரு அவைகளிலும் மொத்தமாக 1 மணி நேரம் 29 நிமிடங்கள் மட்டுமே விவாதம் நடைபெற்றது ஆச்சர்யத்தை அளித்தது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் இந்த சட்டமசோதா மக்களவையில் வெறும் 26 நிமிடங்களில் நிறைவேறியது.

இந்த கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள, 4 மசோதாக்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பட்டுள்ளன, 2 புதிய மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்:

  • தேர்தல் திருத்த சட்டங்கள் மசோதா
  • போதை மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா 2021 (இம்மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது)
  • தில்லி சிறப்பு காவல்நிலையத் திருத்த மசோதா 2021 (டிச. 21 அன்று குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா நடைமுறைக்கு வந்துவிட்டது)
  • மத்திய விஜிலென்ஸ் கமிஷன் திருத்த மசோதா 2021 (டிச. 21 அன்று குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா நடைமுறைக்கு வந்துவிட்டது)
  • உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள் திருத்த மசோதா
  • பண்ணை சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, 2021 (குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டு மசோதா சட்டமாகிவிட்டது)
  • இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா 2020
  • வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா, 2019
  • அணை பாதுகாப்பு மசோதா
  • தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன திருத்த மசோதா, 2021 (குடியரசு தலைவர் ஒப்புதல் டிசம்பர் 18 அன்று பெறப்பட்டு மசோதா இப்போது சட்டமாக உள்ளது)

பாராளுமன்ற நிலைக்குழுவின் முன் மசோதாக்கள்:

  • குழந்தை திருமண தடை திருத்த மசோதா 2021
  • மீடியேசன் மசோதா 2021
  • பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணி கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்தம் மசோதா
  • உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா 2021

மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாக்கள்:

  • வனவிலங்கு பாதுகாப்பு திருத்த மசோதா, 2021
  • தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com