தொடர் முழக்கம் முதல் ஆவணக் கிழிப்பு வரை: மூன்றாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ச்சியாக 3-வது நாளாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பியதால் முக்கிய அலுவல்கள் எதுவும் நடைபெறக் கூடிய சூழ்நிலை உருவாகவில்லை.
நாடாளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை தாங்கிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் அலுவல்களை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணித்தனர்.
இன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாய சங்க பிரதிநிதிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்திய நிலையில் அதே விவகாரம் இரண்டு அவைகளிலும் எதிரொலிக்க வேண்டும் என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினார். அதன்படியே இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல்கள் முடக்கப்பட்டு தொடர்ந்து ஒத்திவைப்பு மட்டுமே நடைபெற்றது.
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்யக்கூட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவையில் ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சரின் பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான அறிக்கை மற்றும் மாநிலங்களவையில் கோவிட் தொடர்பான விவாதம் மட்டுமே இதுவரை நடைபெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்துக்கு நடுவே ஒரு சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டாலும், முக்கிய அலுவல்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
அறிக்கையை பிடுங்கி கிழித்தெறிந்த திரிணாமுல் எம்.பி: மாநிலங்களவையில் இன்று ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சர்ச்சைக்குரிய பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய முயன்றபோது, அவர் கையில் இருந்த ஆவணங்களைப் பிடுங்கி கிழித்து எறிந்தார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு சென்.
மாநிலங்களவையில் இந்தச் சம்பவம் நடந்தபோது அருகிலிருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலையிட்டு கண்டித்ததால், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே புதிய மோதல் உருவாகியுள்ளது.
இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது, அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய அறிக்கையை தாக்கல் செய்வார் என்ற அறிவிப்பை அவையின் துணைத் தலைவர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கையை படிக்கத் தொடங்கினார்.
இந்த அறிக்கை ஏற்கெனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தினசரி ஒத்திவைப்பு காரணமாக மாநிலங்களவையில் இந்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இன்று காலை முதல் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருவதால் மாநிலங்களவை அலுவல்கள் முடங்கி இருந்தன.
இந்நிலையில், அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்வதை தடுக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சாந்தனு சென் முழக்கமிட்டுக் கொண்டே அஸ்வினி வைஷ்ணவ் அருகே சென்றார். அமைச்சரின் கையிலிருந்த அறிக்கை நகலை பிடிங்கிய சாந்தனு சென், அதை கிழித்து அவையின் துணைத் தலைவர் அருகே எறிந்தார். இதற்கிடையே மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி சாந்தனு சென்னை தடுக்க முற்பட்டு அவருடைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.
நிலவரம் அத்துமீறி செல்வதை உணர்ந்த அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ், மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்ட பிறகும் ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வார்த்தை வாதம் தொடர்ந்தது.
சாந்தனு சென் செய்தது கண்டனத்துக்குரிய செயல் என்றும், நாடாளுமன்றத்துக்குள் இதுபோன்ற செயல்களுக்கு இடமில்லை எனவும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை தாக்கல் செய்ய முயன்றது தவறு என குற்றம் சாட்டிவருகின்றனர்.
மழைக்கால கூட்டத் தொடரின் ஆரம்பம் முதலே இருந்து வரும் மோதல் போக்கு இந்த நிகழ்வு காரணமாக மேலும் தீவிரமடையும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.
- கணபதி சுப்ரமணியம்