நீட் தேர்வு கிராமப்புற மாணவர் சேர்க்கையை அதிகரிக்கிறதா, குறைக்கிறதா? - தரவுகளும் தெளிவும்

நீட் தேர்வு கிராமப்புற மாணவர் சேர்க்கையை அதிகரிக்கிறதா, குறைக்கிறதா? - தரவுகளும் தெளிவும்
நீட் தேர்வு கிராமப்புற மாணவர் சேர்க்கையை அதிகரிக்கிறதா, குறைக்கிறதா? - தரவுகளும் தெளிவும்

பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணாமலை, “நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நல்லது, குறிப்பாக சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வருவோர் நீட் தேர்வால் மிகவும் பலன் பெறுகின்றனர்” என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். உண்மையில் நீட் தேர்வு கிராமப்புற மாணவர் சேர்க்கையை அதிகரிக்கிறதா குறைக்கிறதா என்பதை தரவுகள் வழியாகவும் அதுதரும் விவரங்கள் வழியாகவும் இங்கு அறியலாம்.

தனது அந்த செய்தியாளர் சந்திப்பில், “2006 – 2016 வரை 29,725 மருத்துவ மாணவர்கள் கல்வி வாய்ப்பை பெற்றார்கள். அதில் சராசரியாக, வருடத்துக்கு 19 பேர்தான் கிராமப்புற மாணவர்களாக இருந்துள்ளனர். ஆனால் கடந்த வருடம் மட்டும் 430 பேர் கிராமத்திலிருந்து நீட் வழியாக சென்றிருக்கிறார்கள். நீட் வந்தபிறகுதான் 5 – 10 கோடி பணமில்லாத சராசரி குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளும் மருத்துவப் படிப்பை படிக்க முடிகிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியால் கடந்த முறை 180 கேள்விகளில், 173 நேரடியாக தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சியாளர் விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. இந்தளவுக்கு அதிக நன்மையிருக்கும் நீட் தேர்வை தமிழ்நாடு அரசு ஏன் எதிர்க்கிறது என தெரியவில்லை” எனக்கூறியிருந்தார் அண்ணாமலை.

இந்த நேரத்தில், ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு நியமித்த நீட் தேர்வு ஆய்வுக்குழு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக நாம் ஆராய வேண்டியுள்ளது. இந்த அறிக்கையின் விவரம் முழுமையாக வெளிவரவில்லை என்றபோதிலும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை அடிப்படையாக வைத்து அண்மையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், ‘நீட் தேர்வு நகர்புற பணக்காரர்களுக்கு சாதகமானதாக மாறிவருவது தெரிய வருகிறது’ என்று கூறியிருந்தது. தங்களின் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில், அவர்கள் வெளியிட்டிருந்த சில புள்ளிவிவரங்கள் இங்கே:

2017 – 18 கல்வியாண்டு முதல் மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுகிறது. இதன் முன்னும் பின்னும், நகர்ப்புற - கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை விகித விவரங்கள்:

2015 – 16 - 62.8 கிராமப்புற மாணாக்கர்கள் | 37.2 நகர்ப்புற மாணாக்கர்கள்

2016 - 17 – 65.17 கிராமப்புற மாணாக்கர்கள் | 34.83 நகர்ப்புற மாணாக்கர்கள்

2017 – 18 – 55.45 கிராமப்புற மாணாக்கர்கள் | 44.55 நகர்ப்புற மாணாக்கர்கள்

2018 - 19 – 48.02 கிராமப்புற மாணாக்கர்கள் | 51.98 நகர்ப்புற மாணாக்கர்கள்

இந்தத் தரவுகளில் தெரியவரும் 2015, 2016 ம் ஆண்டுகளுக்கான கிராமப்புற மாணவர்கள் மருத்துவ சேர்க்கை 2017 – 18 க்குப் பின் (நீட் தேர்வு அமலுக்கு வந்தபின்) குறைந்திருப்பதை டைம்ஸ் மையப்படுத்தியுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் சிக்கல் ஏற்படுகிறது என்பதைப்போலவே நீட் தேர்வில் முக்கியமாக இருக்கும் மற்றொரு சிக்கல், ‘முதலாம் ஆண்டு கல்லூரியில் சேரும் மாணவர்களின் அடிப்படை வயது அதிகமாவது’ என்கின்றனர் நிபுணர்கள். இதுகுறித்து டைம்ஸ் தெரிவித்திருக்கும் தரவுகளின்படி, 2014 – 15 ல் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களில் 0.13 மாணவர்கள்தான் 20 வயதானவர்களாக இருந்தனர்; இதுவே 56.14% பேர் 17 வயதானவர்களாக இருந்தனர்; அதேநேரம் 1.29% பேர்மட்டும் 19 வயதானவர்களாக இருந்தனர். இதே எண்ணிக்கை 2020ல் பார்க்கும்போது, 8.48% பேர் 20 வயதானவர்களாகவும்; 11% பேர் தான் 17 வயதானவர்களாகவும் இருந்தனர்; மேலும் சுமார் 37% பேர் 19 வயதுடையவராகவும் இருந்துள்ளனர்.

நிறைய மாணவர்கள் இரண்டாம் முறை அல்லது மூன்றாம் முறை தேர்வு எழுதும்போதே அதிக மதிப்பெண்ணை பெறுவதனாலும், அதனாலேயே இந்த வயது வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பலமுறை முயற்சித்து மருத்துவச்சீட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை 2014 – 15ல் 0.36% என்றிருந்த நிலையில் இது தற்போது 2020-21ல் 70% என உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் பின்னணியாக பலமுறை தேர்வுக்கு முயல்வோர் / விண்ணப்பிப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பதற்கு தரவுகள் கிடைத்துள்ளன. அதுகுறித்த விவரங்கள்:

முதல் முறை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிப்போர் | பலமுறை தேர்வு விண்ணப்பிப்போர்:

2010–11: 95.97 | 4.03

2011-12: 99.27 | 0.73

2012-13: 97.54 | 2.46

2013–14: 98.33 | 1.67

2014-15: 99.64 | 0.36

2015-16: 74.86 | 25.14

2016-17: 94.56 | 5.44

2017-18: 59.01 | 40.99

2018-19: 49.82 | 50.18

2019-20: 31.48 | 68.52

2020-21: 29.82 | 70.18

இதை கவனிக்கும்போது, 2017 – 18 (அதாவது நீட் அமலான ஆண்டுக்குப் பிறகு) பலமுறை விண்ணப்பிக்கும் தேர்வாளர்கள் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் முதன்முறை விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறைவாகியுள்ளது.

இதுமட்டுமன்றி, ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான வருமானத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கை; அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ சேர்க்கை ஆகிய அனைத்துமே குறைந்துள்ளதும் தரவுகளில் தெரியவருகிறது. அதன் விவரம்:

ஆண்டு

அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் (%)

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவர்கள் (%)

தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள் (%)

அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் (*7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்கள்)

தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் (*7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்கள்)

2014-15

31

52

481

99.8

26

12

2015-16

32

54

456

99.4

33

3

2016-17

33

53

438

98.4

31

3

2017-18

16

25

41

63.9

0

3

2018-19

18

32

88

72.6

4

1

2019-20

22

கிடைக்கவில்லை

58

66

5

1

2020-21

16

 -

-

-

10 (239)*

1(99)*

முன்னராக ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையில், “முறையான இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ள வாய்ப்புகள் குறைவாக உள்ளது. நீட் தேர்வு இல்லாத காலங்களில் நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கையிலும், அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறைவாகவே இருந்துள்ளது. ஆகவே  நீட் தேர்வு இல்லை என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் தனி உள்ஒதுக்கீடு தேவை.

நீட் கோச்சிங் பெற வாய்ப்பு கிடைக்கும் கிராமப்புற மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் கோச்சிங் செண்டர் சார்பில் மாணவர்கள் முன்வரும்போது வேறு சில பிரச்னைகள் உருவாகிறது” எனக்கூறப்பட்டிருப்பதாகவும், நீட் தேர்வு வேண்டுமா இல்லையா என்பது பற்றி செய்யப்பட்ட கருத்துக்கணிப்பில் 86,462 மனுக்களில் 85,000க்கும் மேல் நீட் தேர்வு வேண்டாம் என்று தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதுதொடர்பான அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தமிழ்நாடு அரசு விரைவில் தெரிவிக்கும் என குழு தலைவர் ஏ.கே.ராஜன் கூறியிருந்தார்.

இந்த இடத்தில் ‘அரசு சார்பில் அமைக்கப்படும் கோச்சிங் செண்டர்கள் மூலம் பல மாணவர்கள் மருத்துவச் சேர்க்கையில்  நுழையலாம். எந்த வயதில் படிப்பில் சேர்ந்தால் என்ன, அதிலென்ன பிரச்னை வரப்போகிறது - எப்படியாகினும் ஏழை மாணவனின் கனவு நிஜமாவது தானே முக்கியம்” என்பன போன்ற விவாதங்களையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. இன்றைய தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “நீட் வந்தபிறகு பணவசதி இல்லாதவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு கிடைக்கிறது” என கூறியிருந்தது, இந்த வாதத்தின்போது உண்மையாகும் சூழலும் உள்ளது.

ஆனால் எப்படியாகினும் ஏழை மாணவர்கள் கூடுதல் சிரமத்துக்கு உள்ளாவர் என்பதை வலியுறுத்தும் விதமாக சில தினங்களுக்கு முன் புதிய தலைமுறையின் செய்தியில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கருத்தொன்று தெரிவித்திருந்தார். அதில் அவர், “நீட் எழுதும் ஒரு மாணவர் 720 அதிகபட்ச மதிப்பெண்ணும் - 200 குறைந்தபட்ச மதிப்பெண்னும் பெற்றால் அவர் மருத்துவ படிப்புக்கு தகுதி பெறுகிறார். இதில் 200 வாங்கும் மாணவர், காசு கொடுத்துதான் தனக்கான சீட்டை பெற முன்னோக்கி செல்ல முடியும்கிறார். அதாவது, மதிப்பெண் குறையும்போது, சீட் பணம் அதிகரிக்கிறது.

இதற்கு முன்பு நன்கொடை என்ற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக வசூலிக்கப்பட்ட தொகை, இப்போது சட்ட அனுமதியுடன் பெறப்படுகிறது. இது சமூக நீதி அல்ல. இது, முறைகேடு. நன்கொடை என்ற வழக்கத்தை ஒழிக்க சொல்லி, முறைபடுத்த சொல்லி நாங்கள் கேட்டோம். ஆனால் இவர்கள் வேறொரு முறைக்கேட்டை முன்னெடுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

அவர் சொன்னதை வைத்து பார்க்கும்போது, நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டால் அதில் அதிக மதிப்பெண்ணை பெற மாணவர்கள் அடுத்தகட்ட நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகும் சூழலும் உருவாகும். ஒருவேளை மதிப்பெண் கிடைக்கவில்லையென்றால் அவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவர். இந்த இடத்தில் பணக்காரர்களுக்கான வாய்ப்பு இன்னும் விரிவடையும் சூழலும் உள்ளது. ஆக நீட் வேண்டுமா வேண்டாமா என்பதைத்தாண்டி, அது அமல்படுத்தப்பட்டால் அடுத்தடுத்து என்ன மாதிரியான சிக்கல்கள் உருவாகும்; அதை தடுப்பது ஏன் முக்கியம் என்பது போன்றவற்றையும் அரசு ஆலோசிப்பது அவசியமாகிறது. அதேபோல நீட் தேர்வு அமல்படுத்தப்படவில்லை என்றாலும் அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அதை எப்படி சமாளிப்பது என்ற அரசின் திட்டங்களும் அவசியப்படுகிறது.

ஏ.கே.ராஜன் குழு, தரவுகளின் அடிப்படையிலேயே பரிந்துரைகளை சொல்லியிருக்கும் நிலையில் மேற்கூறிய தரவுகள்யாவும் அதில் இடம்பெற்றிருக்கும் என நம்புலாம். விரைவில் அரசின் முடிவு வெளியாகும்போது, அந்த முடிவினால் அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அதை அரசு எதிர்க்கொள்ளும் திட்டம் குறித்தும் அறிவிப்புகள் வருமென எதிர்ப்பார்க்கலாம்.
தகவல் உறுதுணை: டைம்ஸ் ஆஃப் இந்தியா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com