'ஆப்' இன்றி அமையா உலகு 6: 'மீனவ நண்பன்' - மீன்பிடித் தொழில் புரிவோருக்கு உதவும் செயலி

'ஆப்' இன்றி அமையா உலகு 6: 'மீனவ நண்பன்' - மீன்பிடித் தொழில் புரிவோருக்கு உதவும் செயலி
'ஆப்' இன்றி அமையா உலகு 6: 'மீனவ நண்பன்' - மீன்பிடித் தொழில் புரிவோருக்கு உதவும் செயலி

"தரை மேல் பிறக்க வைத்தான்; எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்!" என திரைப்பட பாடலாசிரியர் வாலியின் வைர வரிகள் மீன்பிடித் தொழிலை செய்து வரும் மக்களின் வாழ்வினை அப்படியே பிரதிபலித்திருக்கும். இந்த வரிகள் என்றென்றும் அவர்களது வாழ்வில் மாறாமல் உள்ளன. இரவு, பகல், வெயில், குளிர், இடி, மழை, கடுவெளி காற்று என இயற்கையுடன் போராடியபடி வாழ்வாதாரத்தை ஈட்டும் மக்களில் மீன்பிடி தொழிலை செய்து வரும் மக்களுக்கு முதலிடம். 

அள்ளும் பகலும் அப்படி போராடி வரும் மீனவ மக்களுக்கு உதவும் நோக்கில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் Fisher Friend Mobile Application (FFMA), செல்போன் செயலி ஒன்றை வடிவமைத்துள்ளது. இதன் பயனர்கள் கொடுத்துள்ள ரிவ்யூக்களை படித்தபோது உண்மையிலேயே இந்த செயலி மீனவர்களின் உற்ற நண்பன் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. 

மீனவ நண்பன் செயலி?

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், குவால்காம் நிறுவனத்தின் Wireless Reach திட்டம் மற்றும் டாடா கன்சல்டன்சிஸ் என மூன்று நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளன. இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) நாலெட்ஜ் பார்ட்னராக இதில் இயங்கி வருகிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக மீனவர்களுக்கு முக்கியமான அறிவியல் சார்ந்த தகவல்களை INCOIS வழங்குகிறது. 

இந்த செயலியின் மூலம் மீனவர்களின் பாதுகாப்பு, வானிலைத் தகவல்கள், மீன்கள் அதிகமாக கிடைக்கக்கூடிய மண்டலங்கள், சந்தை நிலவரம் மற்றும் பல தகவல்களை இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களுக்கு அளித்து வருகிறது. இதில் மாநில அரசுகள் மீனவர்களுக்கு அளிக்கும் அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களும் கிடைக்கின்றன. 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், கோவா என கடல் சார்ந்த இந்திய பகுதிகளில் இந்த அப்ளிகேஷன் தனது பயனர்களுக்கு தகவல் அளித்து வருகிறது. 

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒடிசா, வங்காள மொழி, கன்னடம், மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் என ஒன்பது மொழிகளில் இந்த அப்ளிகேஷன் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஃபோன்களில் மட்டுமே இந்த செயலி இயங்கும். மீனவர்களுக்கு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு உதவுவதே இந்த செயலியின் பணி. இதை பயன்படுத்துவதும் எளிதாக உள்ளது.  

மீனவ நண்பனின் சிறப்பம்சங்கள் என்ன?

> மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ள சாதகமான பகுதிகள். 

> கடல்நிலை மற்றும் வானிலை சார்ந்த முன்னறிவிப்புகள். இதன்மூலம் காற்றின் வேகம், அலையின் உயரம், கடல் மேல்மட்ட நீரோட்டம் மற்றும் வெப்பநிலை, கடல் ஓதம், பேரிடர் எச்சரிக்கை மாதிரியான தகவல்கள் இதில் கிடைக்கின்றன. 

> GPS மூலம் கரையிலிருந்து கடலுக்கும், மீண்டும் பாதுகாப்பாகக் கரையை வந்தடையவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது.  

> கடலில் சர்வதேச எல்லையை நெருங்குவதையும், அடைவதையும் இந்த செயலி சுட்டிக்காட்டும்.  

> GPS மூலம் பாறைகள், மூழ்கிய கப்பல் மற்றும் அழிந்துபோன பவளப்பாறைகள் போன்ற ஆபத்தான பகுதிகளை கண்டறியவும் இந்த செயலி உதவுகிறது. 

> உயிர் காக்கும் உதவி தேவைப்படும் (SOS) நேரங்களில் உதவிக்கு எளிதில் அதிகாரிகள் மற்றும் மீனவ அவசர உதவி எண்ணை அழைக்கவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. 

> பிற சேவைகளாக சந்தை நிலவரம், அரசு திட்டங்கள், கடல் சார்ந்த செய்திகள் மாதிரியானவற்றை தெரிந்துகொள்ளலாம். 

> முக்கிய தொடர்பு எண்கள் மற்றும் அவசர கால உதவி எண்கள் முதலியவை இதில் உள்ளன.

> இந்த செயலியில் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளன. 

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?

மீனவ நண்பன் செயலியை இன்ஸ்டால் செய்ததும் மொழியை தேர்வு செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக தமிழ் மொழியை தேர்வு செய்கிறோம் என வைத்துக்கொள்ளலாம். பின்னர் மொபைல் எண், மாநிலம், மாவட்டம், கடற்கரை தளம் மாதிரியானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை உறுதி செய்யலாமா என கேட்கப்படுகிறது. மொபைல் எண்ணுக்கு OTP ஒன்றும் வருகிறது. அதை உறுதி செய்த செயலியை பயன்படுத்த தொடங்கலாம்.   

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com