அனந்த பத்மநாப சுவாமி கோயிலும், மறைந்திருக்கும் மர்மங்களும்!!

அனந்த பத்மநாப சுவாமி கோயிலும், மறைந்திருக்கும் மர்மங்களும்!!
அனந்த பத்மநாப சுவாமி கோயிலும், மறைந்திருக்கும் மர்மங்களும்!!

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில். சயன கோலத்தில் பெருமாள் காட்சி தரும் இந்த கோயில், பத்தாம் நூற்றாண்டிலேயே இருந்திருப்பதற்கான சான்றுகள் நம்மாழ்வாரின் பாடல்களின் மூலம் தெரியவருகிறது. 1668 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் இந்த கோயில் முற்றிலும் எரிந்த நிலையில், 1829 ஆம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான மார்த்தாண்ட வர்மனின் முயற்சியினால் மீண்டும் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இதற்கான சான்றுகளை மன்னர் குடும்பம் இன்றும் பாதுகாத்துவருகிறது. இந்த கோயில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பொறுப்பில் உள்ளது.

பக்தியின் ஊற்றாக உள்ள இந்த கோயிலில் பல ரகசியங்களும் புதைந்திருக்கின்றன. கோயிலின் ஏராளமான ரகசிய அறைகளில் விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது. கோயிலை சுற்றி பல கதைகள், செவி வழி செய்திகள் உலவுகின்றன. கோயிலின் பொக்கிஷங்களை நாகங்கள் பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல, ஒருமுறை பொக்கிஷ அறையை திறந்தபோது அங்கு கடலின் சப்தம் கேட்டதால் அச்சமடைந்து மூடிவிட்டதாகவும் செவி வழி செய்திகள் உலவுகின்றன.

 கோயில் பொக்கிஷங்கள் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் உத்தரவுப்படி கருவூலங்கள் திறக்கப்பட்டபோது சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் கிடைத்தன. 686 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கலசங்கள் திருடு போய் உள்ளதாக சிறப்புகுழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடைசியாக ஆறாவது கருவூலத்தையும் திறக்க வேண்டும் என்று சிறப்புக்குழு பரிந்துரைத்தது. ஆனால் இந்த ஆறாவது கருவூலத்தை திறந்தால் தீய நிகழ்வுகள் நேரிடும் என்றும், பேரிடர்கள் நடக்கும் என்றும் திருவனந்தபுரம் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

ஆறாவது கருவூலத்தில் உள்ள பொக்கிஷங்களை பெருமாள் பள்ளிகொண்டுள்ள நாகம் பாதுகாப்பதாக நம்புகிறார்கள். ஆறாவது கருவூலத்தை திறந்தால் திருவனந்தபுரமே அழிந்துவிடும் என்ற அளவுக்கு இவர்களின் நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் கோயிலின் நிர்வாகம் மற்றும் அதன் சொத்துகள் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டுக்கு கீழ் கொண்டுவரப்படும் என 2011ம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் மன்னர் குடும்பத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடைக்கால ஏற்பாடாக கோயிலின் நிர்வாக பணியினை மேற்கொள்ள திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த குழு தான் அந்த ஆறாவது கருவூலத்தை திறக்கும் முடிவை எடுப்பார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

காணாமல் போன கோயில் பொக்கிஷங்களின் நிலை என்ன? ஆறாவது கருவூலம் திறக்கப்படுமா? அதில் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பு என்ன? என்பனபோன்ற கேள்விகளுக்கு சிறப்பு குழுவும் மன்னர் குடும்பமும் எடுக்கும் முடிவுகளில் பதில் கிடைக்கும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com