முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|பாஜக, தன் ‘செயல்வீரரை’ கைவிட்டது ஏன்?
வாழ்க்கை என்பதே மர்மங்களால் ஆனது; எப்போதுமே இனிமையாக இருந்துவிடாது. ‘இயற்கையின் குறுக்கீடு இல்லாவிடில் - சரியான நேரத்தில் ஓய்வு பெறுவேன்’ என்று ஜகதீப் தன்கர் 2025 ஜூலை 10-இல் வெகு உற்சாகமாக அறிவித்தார். அப்போது அவர் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் - அந்தப் பதவி காரணமாக மாநிலங்களவையின் தலைவர். அதே தன்கர் ஜூலை 21-இல் குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ‘ஓசைப்படாமல்’ விலகிவிட்டார், அதனால் அவையின் தலைவர் பதவியிலிருந்தும் நீங்கிவிட்டார்.
ஜூலை 10-க்கும் ஜூலை 21-க்கும் இடையில் என்ன நடந்தது என்பவைதான் வாழ்க்கையை மர்மங்கள் நிறைந்ததாக்குகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜூலை 21 திங்கள்கிழமை மிகவும் சாதாரணமாகத்தான் தொடங்கின. அதற்கும் முந்தைய நாள், இரு அவைகளிலும் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடைய வழக்கமான கூட்டத்தை அரசு கூட்டியிருந்தது. ‘அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அவையில் விவாதிக்க வாய்ப்பு தருவோம்’ என்று அரசு உறுதி அளித்தது; ‘அவை சுமுகமாக நடைபெற ஒத்துழைப்போம்’ என்று எதிர்க்கட்சிகளும் பதிலுக்கு உறுதியளித்தன. அவசர முக்கியத்துவம் உள்ள பிரச்சினைகள் குறித்து எப்போது, எப்படி அவையில் விவாதிக்க வேண்டும் என்பதில் இப்போதைய நாள்களில் அரசுத் தரப்புக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை இல்லை என்பதே இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாட்டில் பெரிய சோகமாகத் தொடர்கிறது.
விவாதப் பொருளானது எது?
மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் எந்தவொரு முக்கியப் பிரச்சினை குறித்தும், ‘அவை விதி எண் 267-ன் படிதான் விவாதிக்க வேண்டும்’ என்று வற்புறுத்துகின்றன. அன்றைய அவையில் விவாதிக்க முன்கூட்டியே தீர்மானித்தவற்றை ஒத்திவைத்துவிட்டு, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் பிரச்சினை குறித்துத்தான் விவாதிக்க வேண்டும் என்பதே ‘அவை விதி எண் 267’. இதற்குப் பெயர் ‘ஒத்திவைப்புத் தீர்மானம்’. இந்த விதியை எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதற்குப் பின்னால் தீய நோக்கம் ஏதும் இல்லை.
ஆனால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ‘இந்த விதியின் கீழ் விவாதிப்பதே இந்த அரசைக் கண்டிப்பதற்குச் சமம்’ என்று கருதுகிறது. (கடந்த காலங்களில் ஆண்ட அரசுகளும் சில வேளைகளில் இப்படிக் கருதியுள்ளன). கடந்த பதினொரு ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிக் காலத்தில் - 2016 நவம்பர் மாதத்தில் மட்டும் - ‘உயர் பணமதிப்பு நீக்க’ நடவடிக்கை குறித்து விவாதிக்க மட்டும் - இந்த விதியை பரிசீலித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. மாநிலங்களவைத் தலைவர் பதவியை ஏற்றது முதல், அவை விதி எண் 267-ன் கீழ் எந்தப் பிரச்சினை குறித்தும் விவாதிக்க அனுமதி தந்ததே இல்லை தன்கர்.
ஜூலை 21-ம் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் என்ன நடந்தது என்றால் - அது தன்கர் பின்பற்றிய வழிமுறையிலிருந்தே முகிழ்த்தது; பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்தும் அதற்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்தும் அவை ‘விதி எண் 167-ன்’ கீழ் விவாதிக்க வேண்டும் என்று ஒரேயொரு பாஜக உறுப்பினர் நோட்டீஸ் (கோரிக்கை) அளித்தார்; அதே பிரச்சினை குறித்து ‘விதி எண் 267-ன்’ கீழ் விவாதிக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நோட்டீஸ் அளித்தனர். பாஜக உறுப்பினரின் கோரிக்கையை தன்கர் ஏற்றார்; ‘தீர்மானத்தை எந்த நாளில் விவாதிப்பது என்று இறுதியாகவில்லை’ என்ற அடிப்படையிலான முடிவுடன் (விதி எண் 167) பாஜக உறுப்பினரின் கோரிக்கையை ஏற்ற தன்கர், பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிராகரித்தார். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. (அவையின் விதிகளுக்கும் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட நடைமுறைகளுக்கும் ‘ஏற்ப’ விதி எண் 267-ன் கீழ் தீர்மானத்தை வரைவு செய்யும் கலையில் எதிர்க்கட்சி வரிசையில் இதுவரை எந்த கூர்த்த மதியுள்ள உறுப்பினராலும் தேர்ச்சி பெற முடியவில்லை!)
விடை தரலும் இல்லை, ஆரவாரமும் இல்லை!
மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தை அவையின் தலைவர் (தன்கர்) காலை 12.30 மணிக்குக் கூட்டினார். அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு அரசுத் தரப்பில் கலந்து கொண்டனர். சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு அந்தக் கூட்டம் மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் மீண்டும் கூடியபோது இரு அமைச்சர்களும் வரவில்லை. இதனால் ‘லேசாக சினமுற்ற’ அவைத் தலைவர் கூட்டத்தை மீண்டும் ஒத்திவைத்தார். பிறகு, ‘மருத்துவர்களின் ஆலோசனைப்படி குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக’ அன்றிரவு 9.25 மணிக்கு அறிவித்தார் தன்கர்.
பதவி விலகலைத் திரும்பப் பெறுங்கள் என்று எந்த அரசியல் கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினரும் வேண்டுகோள் விடுக்கவில்லை என்பது - நடந்த விவகாரம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறது. ‘குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியாகிவிட்டது’ என்று மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவம்ச(ர்) ஜூலை 22-இல் நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து - அதே சமயம் சற்றே சூடாக – சிறு அறிவிப்பாக வெளியிட்டார். எந்தவொரு சம்பிரதாய விடை தருதலும் ஆரவாரமும் இல்லாமல் தன்கரை அந்தப் பதவியிலிருந்து விடுவிக்க அரசு தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.
நன்றியில்லாத பாரதிய ஜனதா!
குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்த ஜகதீப் தன்கருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எவ்வளவோ நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அமெரிக்க ‘கால்பந்தாட்ட’ சொற்களஞ்சியத்தில் குறிப்பிடுவதைப் போல, அரசின் செயல்களுக்கு முட்டு கொடுக்கும் ‘செயல் வீரராகவே’ செயல்பட்டவர் தன்கர். ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ என்ற பாஜக – ஆர்எஸ்எஸ் நிலையையும், அரசமைப்புச் சட்ட புத்தகத்தின் முகவுரையிலிருந்து ‘மதச்சார்பின்மை – சமத்துவம்’ என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்பதையும் ஆதரித்தார். ‘அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மாற்றவே கூடாது’ (கேசவானந்த பாரதி வழக்கு) என்ற உச்ச நீதிமன்றத்தின் நிலையை விமர்சித்தார்.
நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பரிசீலிப்பதைக்கூட அவர் கேள்விக்குள்ளாக்கினார். உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை நியமிக்கும் உரிமை (ஒன்றிய) அரசுக்கு இருக்கிறது என்று வாதிட்ட தன்கர், அத்தகைய நியமனங்களில் (இரண்டாவது நீதிபதிகள் வழக்கு) ‘நீதித்துறைக்குத்தான் முதலுரிமை இருக்கிறது’ என்பதையும் ஏற்க மறுத்தார். நாடாளுமன்றத்திலும் மாநில சட்ட மன்றங்களிலும் நிறைவேறும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரும் மாநில ஆளுநர்களும் ‘மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்ட விதி 142-ஐ மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்தையே கண்டித்தார்.
நாடாளுமன்ற விவாதங்களில் உறுப்பினர்கள் பேசும்போது தெரிவிக்கும் தகவல்கள் ‘உண்மையானவை தான்’ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று - அரசமைப்புச் சட்டப் பிரிவு 105-வது பிரிவு அளிக்கும் உரிமைக்கு முரணாக - வலியுறுத்தினார். சனாதன தர்மத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பை முழுமையாகப் புகழ்ந்து பேசினார். அவருடைய நிலைப்பாடு பழமைவாதிகளான வலதுசாரிகளுடையதை அப்படியே ஒத்திருந்தது, அது நிச்சயம் பாரதிய ஜனதாவுக்கு மகிழ்ச்சியையே அளித்திருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் வெவ்வேறு கட்டங்களில் ஜனதா தளம், சமாஜ்வாதி ஜனதா (சந்திரசேகர் தலைமையில் இருந்தது), காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளில் இருந்திருக்கிறார் தன்கர். மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ‘புத்துயிர்’ ஏற்பட்டது. மாநில அரசின் தலைமையுடன் (மம்தா பானர்ஜி) தேவையில்லாமல் அவர் நடத்திய மோதல்கள் அவரின் ‘பாஜக ஆதரவு நிலைக்கு’ வலு சேர்த்திருந்தாலும் ஆளுநர் பதவிக்குரிய கண்ணியத்தைக் களங்கப்படுத்தியது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அவரைத் தேர்ந்தெடுத்தபோது, வலதுசாரி கருத்துகளின் கொடியை உயர்த்திப்பிடிக்கத் தகுதியானவர்தான் என்று பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமை அவர் மீது நம்பிக்கை வைத்ததைக் காட்டியது. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை (ஆளும் தரப்புக்குச் சாதகமாக) அவர் நடத்திய விதம், மாநிலங்களவைத் தலைவருக்கே எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க் கட்சிகள் முதல் முறையாகக் கொண்டுவரும் தனிச் சிறப்பையும் ஏற்படுத்தியது!
இந்த அளவுக்கு தீவிர வலதுசாரி விசுவாசியாகச் செயல்பட்ட அவருக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமைக்குமான சுமுக உறவு கெடுவதற்கு எது காரணமாக அமைந்தது? நீதிபதி யஷ்வந்த் வர்மாவைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜூலை 15 கொண்டுவரப்பட்டது.
அதை ஆதரித்து 63 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதால், அதை ஏற்பதைத் தவிர தன்கருக்கு வேறு வழியில்லாமல் போனது (அதே போன்ற தீர்மானத்தை அரசுத் தரப்பு மக்களவையில் அதே நாளில் தாக்கல் செய்தது). அந்தத் தீர்மானமானது, நீதிபதி சேகர் யாதவ் மீது கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானம் மீது ஏழு மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த தன்கர் - செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியது. இவ்விரு தீர்மானங்கள்தான் தன்கர் விலகக் காரணம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதை ஏற்க மறுக்கிறேன்; இவ்விரண்டும் அற்பமான விஷயங்கள், இவற்றுக்கும் மேலாக வலுவான காரணம் அல்லது காரணங்கள் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறேன்!
வாழ்க்கை என்பதே மர்மங்களால் ஆனது - சில வேளைகளில் ரசாபாசமானதும் கூட!