`ஆதரவற்றுப்போன 19 லட்ச இந்திய குழந்தைகள்!’ - அதிரவைக்கும் LANCET ஆய்வறிக்கை

`ஆதரவற்றுப்போன 19 லட்ச இந்திய குழந்தைகள்!’ - அதிரவைக்கும் LANCET ஆய்வறிக்கை
`ஆதரவற்றுப்போன 19 லட்ச இந்திய குழந்தைகள்!’ - அதிரவைக்கும் LANCET ஆய்வறிக்கை

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைய தொடங்கிய மார்ச் 2020 முதல் அக்டோபர் 2021 வரையிலான 20 மாத கால இடைவெளியில் (முதல் அலை மற்றும் இரண்டாவது அலை கொரோனா), இந்தியாவில் 19.17 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையோ இழந்திருப்பதாக லேன்செட்டின் (Lancet) சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 20 நாடுகளுக்கு மத்தியில் செய்யப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் கொரோனாவால் பெற்றோர் இருவரில் குறைந்தபட்சம் ஒருவரையாவது இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், ஜெர்மன் போன்ற நாடுகள் குறிப்பிட்ட அந்த 20 மாதங்களில் (மார்ச் 1, 2020 - அக்டோபர் 30, 2021) 2,400 குழந்தைகள் ஆதரவற்று போயிருப்பதாகவும், இந்தியாவில்தான் லட்சக்கனக்கான குழந்தைகள் ஆதரவற்று போயிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் மொத்தமாக சுமார் 52 லட்சத்துக்கு மேலான குழந்தைகள் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்திருப்பதாகவும், அதில் 19 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

1,000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்ற விகிதாச்சாரத்தில், பெரு நாட்டில் (8.28) தான் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து, தென் ஆப்ரிக்காவில் (7.22) குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆய்வில் பாட்டி/தாத்தாவுடன் வசித்து வந்த குழந்தைகளுக்கும், தங்களது பாதுகாவலரை சார்ந்தே பொருளாதார ரீதியான, மனரீதியான சார்பு நிலை இருந்திருக்கும் என்பதால் அவர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி தங்களது பாட்டி / தாத்தா அல்லது வயது முதிர்ந்த தனது பாதுகாவலர் ஆதரவில் அவர்கள் வீட்டில் வளர்ந்துவந்த 18.33 லட்ச குழந்தைகள் (உலகளவில்), தங்களது பாதுகாவலரை கொரோனாவுக்கு இழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இக்குழந்தைகள், பாதுகாவலரின் இழப்புக்குப் பின் தங்களது படிப்பு, மன வலிமை போன்றவற்றை இழந்து வறுமைக்கு தள்ளப்பட்டு பல தவறான வழிக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆய்வு செய்தத்தில், 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் குறைந்தபட்சம் 52 லட்சம் பேராவது தங்களது பெற்றோர் / பாதுகாவலர் என யாராவது ஒருவரை கொரோனாவால் இழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு செய்யப்பட்ட காலத்திலேயே, இறுதி 6 மாத காலத்தில்தான் (அதாவது மே 1, 2021 - அக்டோபர் 31, 2021 வரை) இருமடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் பெரு, தென் ஆப்ரிக்கா, இந்தியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 10 - 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகளவில் பெற்றோரை இழந்திருப்பதாக ஆய்வில் சொல்லபட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் அப்படி 12.45 லட்ச குழந்தைகள் உள்ளனர். இதேபோல 0 - 4 வயதிலுள்ள குழந்தைகள் 2.66 லட்ச குழந்தைகளும், 5 - 9 வயதிலுள்ள குழந்தைகள் 2.66 லட்ச குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக 4.21 லட்ச குழந்தைகள் தங்கள் தாயையும், 14.96 லட்ச குழந்தைகள் தங்கள் தந்தையையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இரண்டாவது அலையின்போது தான் (டெல்டா கொரோனா பரவலில்) அதிக குழந்தைகள் தங்கள் பெற்றோரை கொரோனாவால் இழந்திருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வின் முழு விவரங்கள் மற்றும் ஆதாரங்களுக்கு: லேன்செட் ஆய்வறிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com