கொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்

கொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்
Childrens
ChildrensChildrens

கொரோனா இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட தாக்கத்தில் இந்தியாவில் பல குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது 'தி லேன்செட்' பத்திரிகை வெளியிட்டிருக்கும் ஆய்வுத் தரவில் தெரியவந்துள்ளது. ஆதரவற்று நிற்கும் குழந்தைகள் பலரும் தங்கள் தாய் – தந்தையரையோ, தங்களைப் பாதுகாத்து வந்த தாத்தா, பாட்டியையோ, உறவினர்களையோ இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சிலர், பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்து, பொருளாதார ரீதியாகவோ, மனரீதியாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், 'இந்தியாவில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் 645 குழந்தைகள், கொரோனாவால் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளனர். இதில், உத்தரப் பிரதேசத்தில் 158 குழந்தைகள், ஆந்திரப் பிரதேசத்தில் 119 குழந்தைகள், மகாராஷ்டிராவில் 83 குழந்தைகள், மத்தியப் பிரதேசத்தில் 73 குழந்தைகளும் அடங்குவர். பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வியைத் தொடர்வதற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இது போன்று தாய் - தந்தையை இழந்த குழந்தைகள் பற்றிய தரவுகளை 'தி லேன்செட்' பத்திரிகை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 21 நாடுகளில் கொரோனா பாதிப்பில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளைக் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளனர் என தெரிகிறது. அதேபோல் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, பராமரிப்பாளர்களை இழந்து மொத்தம் 11 லட்சம் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில், மெக்சிகோ, பெரு, தென்னாப்பிரிக்கா, பிரேசில், கொலம்பியா, ஈரான், அமெரிக்கா, அர்ஜெண்டினா, ரஷ்யா போன்ற நாடுகளில் பெற்றோரை இழந்து அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிலும் மெக்சிகோ நாட்டில் சுமார் 1,31,325 குழந்தைகள் தங்கள் தாய்-தந்தையை இழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 1,13,150 குழந்தைகளும், அமெரிக்காவில் 1,04,884 குழந்தைகளும், பெரு நாட்டில் 92,702 குழந்தைகளும் தங்கள் தாய்-தந்தையரை இழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை 1,16,263 குழந்தைகள் தங்கள் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளனர். அதேபோல், தாய், தந்தை, தாத்தா, பாட்டி, பராமரிப்பாளர்களை இழந்து மொத்தம் 1,19,170 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. அதில், 25,500 குழந்தைகள் தங்கள் தாயை இழந்துள்ளனர். அதேபோல், 90,751 குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்துள்ளனர். 12 குழந்தைகள் தங்கள் தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்து தவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு (Task Force) அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்:

  • பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்ச ரூபாய் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை வட்டியுடன் வழங்கப்படும்.
  • காப்பகம் மற்றும் விடுதிகளில் உறவினர்களின் ஆதரவோடு வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
  • கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் தாய் அல்லது தந்தைக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்.
  • பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லம், விடுதிகளில் தங்க முன்னுரிமை வழங்கப்படும். பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம், விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும்.
  • சிறப்புக் குழு அமைத்து குழந்தைகளுக்குத் தரப்படும் உதவித்தொகை, கல்வி பற்றி கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளைப் பொறுத்தவரை, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுக் குழந்தைகள்தான் அதிக பிரச்னையை சந்திக்கின்றனர். இவர்கள் உறவினர்களின் ஆதரவைத் தேடி செல்லும்போது, பெண்குழந்தைகள் குழந்தைத் திருமணத்துக்குள் அதிகம் தள்ளப்படுகின்றனர். அதேபோல, ஆண் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக மாற நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர். இவற்றையெல்லாம் தடுக்க ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை பாதுகாக்க, அக்குழந்தைகளுக்கான சேவைகளை மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்திருந்தால், 1098 என்ற உதவி தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், மாவட்ட குழந்தை நலக் குழுவினர் குழந்தையை மீட்டெடுத்து பாதுகாப்பு இல்லங்களில் சேர்ப்பார்கள். அரசின் சமூகப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் வழங்கி, குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுக்கொடுப்பார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com