ஆஸ்கர் விருதுகளில், அனிமேஷன் பிரிவுக்கு விருது வழங்கும் வழக்கம் 2001ல்தான் தொடங்கியது. அதன் பிறகு பல சிறந்த திரைப்படங்கள் அனிமேஷன் பிரிவில் விருதைப் பெற்றிருக்கின்றன. இந்த ஆண்டு அனிமேஷன் பிரிவில் 5 திரைப்படங்கள் போட்டி போடுகின்றன.
வசனங்களே இல்லாத “தி ரெட் டர்ட்டில்”
தனித் தீவில் சிக்கியிருக்கும் ஒரு மனிதனின் உணர்வுகளைப் பல பரிமாணங்களில் பிரதிபலிக்கும் திரைப்படம் தி ரெட் டர்ட்டில்.
சிவப்பு நிற ஆமை, சில நண்டுகள் உள்ளிட்ட கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு நகரும் திரைக்கதையில் காட்சி வடிவமைப்புகள் ஒவ்வொன்றும் நுணுக்கமானவை. ஒரு வசனம் கூட இல்லாமல் முற்றிலும் பின்னணி இசை மூலமாகவும், ஒலிகள் மூலமாகவும் கதை சொல்லப்பட்டிருப்பது இந்தத் திரைப்படத்தின் சிறப்பு. பல சர்வதேச விருதுகளை வென்றிருக்கும் இந்தத் திரைப்படம், சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
“குபோ அன்ட் தி டூ ஸ்ட்ரிங்ஸ்”
ஸ்டாப் மோஷன் எனப்படும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் குபோ அன்ட் தி டூ ஸ்ட்ரிங்ஸ்.
பழங்கால ஜப்பானை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில், ஒரு கண்பார்வை மட்டுமே கொண்ட சிறுவனே நாயகன். குரங்கு, வண்டு ஆகியவற்றின் உதவியுடன், தீயசக்திகளை அழித்து மக்களைக் காப்பாற்றுவதே படத்தின் கதை. மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், சிறந்த அனிமேஷனுக்காவும், விஷுவல் எஃபெக்ஸ்ட்காகவும் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸுக்காக பரிந்துரை செய்யப்பட்ட இரண்டாவது அனிமேஷன் திரைப்படம் என்ற பெருமை இந்த திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது.
“மை லைஃப் அஸ் ய சுச்சினி”
ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு திரைப்படம் மை லைஃப் அஸ் ய சுச்சினி..!.
பிரான்ஸ் நாட்டில் உருவான இந்தத் திரைப்படம், ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை படம்பிடிக்கிறது. பெற்றோர் இறந்து விடுவதாலும், சிறைக்குச் சென்றுவிடுவதாலும், ஏராளமான குழந்தைகள் ஆதரவில்லாமல் தவிக்கவிடப்படுகின்றன என்பதே படத்தின் கரு. சுவிட்சர்லாந்து சார்பில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. திரைப்படங்களை மதிப்பிடும் ராட்டன் டொமேட்டோஸ் இணையதளத்தில் 100% புள்ளிகளைப் பெற்ற திரைப்படம் இது.
ஸூட்டோபியா..!
உலகமெங்கும் வசூலைக் குவித்து சாதனை புரிந்ததுடன் ஆஸ்கர் விருதையும் பெற்றுவிடும் போட்டியில் இருக்கும் திரைப்படம் ஸூட்டோபியா.
விலங்குகளின் நகரம் தான் இந்த ஜூட்டோபியா. முப்பரிமாணத்தில் வெளியாகியிருக்கும் விலங்குகள் குடியிருக்கும் நகரில், ஒரு குற்றவழக்கைக் கையாளும் காவல்துறை அதிகாரியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது கதை. நகைச்சுவையான வசனங்களும், காட்சி அமைப்புகளும் இந்தத் திரைப்படத்துக்கு பலம். சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான கோல்டன் குளோப் விருது ஏற்கெனவே இந்தத் திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது.
“மோனா”..!
பாலினேசியத் தீவில் வசிக்கும் பழங்குடி மக்களைக் காப்பதற்காக, இளவரசி நடத்தும் சாகசங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் அனிமேஷன் திரைப்படம் மோனா.
சாகசக் காட்சிகளுடன், பின்னணிப் பாடல்களும் இந்தத் திரைப்படத்தின் சிறப்புகள். பாட்டுக்குள் படமா, படத்திற்குள் பாட்டான்னு வேறுபடுத்தி பார்க்க முடியாத அளவுக்கு குழந்தைகளைக் குஷிப்படுத்தும் ஒரு 3டி திரைப்படம். சிறந்த அனிமேஷன் திரைப்படம் என்ற பிரிவைத் தவிர, சிறந்த பாடலுக்கான பிரிவிலும் இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான போட்டியில் 5 திரைப்படங்கள் இருந்தாலும், டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்புகளான மோனா மற்றும் ஸூட்டோபியா திரைப்படங்களுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.