விநாயகர்சதுர்த்தி கொண்டாட்ட தடைக்கு எதிர்ப்பு: கொரோனாவை பற்றவைத்த பண்டிகைகள் பற்றிய பார்வை

விநாயகர்சதுர்த்தி கொண்டாட்ட தடைக்கு எதிர்ப்பு: கொரோனாவை பற்றவைத்த பண்டிகைகள் பற்றிய பார்வை
விநாயகர்சதுர்த்தி கொண்டாட்ட தடைக்கு எதிர்ப்பு: கொரோனாவை பற்றவைத்த பண்டிகைகள் பற்றிய பார்வை

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், பொது இடங்களில் சிலைவைத்து கொண்டாட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பை ஏற்கமாட்டோம் என  தமிழக பாஜக அறிவித்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்திக்கான தடையும்எதிர்ப்பும்:

இந்திய அளவில் சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இது மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை சமிக்சையாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ஐசிஎம்ஆர்) தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களின் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அரசு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த சூழலில்தான் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு பல கட்டுப்பாடுகளையும் மாநில அரசு விதித்துள்ளது. அதில், “ விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகள் அமைப்பதற்கும், விழாக்கள் கொண்டாடவும் தடை விதிக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துசெல்லவும், நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் மக்கள் தங்கள் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம்என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் மரியன்னை பிறந்தநாள் திருவிழாக்களுக்கும் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு தமிழக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனி மனிதனாக விநாயகரை வழிபடலாம், சிலையை கரைத்துக் கொள்ளலாம். ஆனால், கூட்டமாகச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே மாதிரிதான் இருந்தது. விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டு விடுங்கள். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டுவார்கள்.

டாஸ்மாக்கைத் திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வைத்து திமுக அரசு அரசியல் செய்தால் ஆட்சியை இழக்க நேரிடும்” என தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில்  தமிழகத்தில் புகழ்பெற்ற சித்திரை திருவிழாக்கள், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் கொரோனாவை எகிறவைத்த பக்ரீத்:

கேரளா முதல் மற்றும் இரண்டாவது அலை கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்கியது. ஆனால் கேரளா அரசு எடுத்த ஒரு முடிவுதான் இப்போது கேரளாவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு காரணம் என அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில், ஜூலை மாதம் பக்ரீத் பண்டிகைக்கு கேரளாவில் தளர்வுகளை அறிவித்தது அரசு. கூடுதலாகத் தளர்வுகளை அறிவித்தால், வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்த போதிலும். பக்ரீத் பண்டிகைக்குக் கூடுதல் தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த இந்திய மருத்துவர்கள் சங்கம், தளர்வுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதமும் எழுதினர். இருப்பினும், கேரள அரசு தனது முடிவை மாற்றவில்லை. எதிர்பார்த்தபடியே பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்தது.

அதன் பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் ஓனம் பண்டிகையால் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஓணம் பண்டிகைக்காக எந்தவொரு தளர்வுகளையும் கேரள அரசு அறிவிக்கவில்லை, இருந்தாலும்கூட மார்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடினார்கள். இதனால் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

கும்பமேளா அதிர்ச்சி:

கொரோனா இரண்டாம் அலை தொடக்கத்தில் இந்தியாவின் “ சூப்பர் ஸ்ப்ரெட்டர்” கொரோனா பரவல் நிகழ்வாக கும்பமேளா இருந்தது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பமேளா திருவிழாவானது, இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி கொரோனா பரவல் காரணமாக 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், நாட்டில் கொரோனா 2வது அலை தீவிரமாகப் பரவியதால், கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர். பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காமலும், முக்ககவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைபிடிக்காமலும் நீராடினர்.

கும்பமேளாவில் சுமார் 2.50 இலட்சம் கலந்துகொண்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டது, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பிரதமர் நரேந்திரமோடி கும்பமேளாவை முடித்துக்கொள்ளுமாறு ஏப்ரல் 17 ஆம் தேதி கோரிக்கை வைத்தார். அதில், “கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும்” என தெரிவித்தார், அதன்பின்னர் முன்கூட்டியே கும்பமேளா கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன.

இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்பட்ட உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் மூலமாக கொரோனா பரவல் வேகமெடுத்ததாக அந்தந்த மாநில அரசின் சுகாதாரத்துறை அறிக்கைகளின் தகவல்கள் காட்டுகின்றன. இந்த சூழலில்தான் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com