கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் 'OPEC+' நாடுகள்; இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

சவூதி அரேபியா, குவைத், ஈராக் உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவைக் குறைக்க முடிவெடுத்திருப்பதைத் தொடர்ந்து இந்தியாவிலும் எண்ணெய் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

OPEC, OPEC+ நாடுகளின் அதிர்ச்சி அறிவிப்பு

உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று, பெட்ரோலியப் பொருட்கள். அந்தப் பெட்ரொலியத்தை நம்பித்தான் சீனா, இந்தியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் உள்ளன. இந்த நிலையில், பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பான ஒபெக் (OPEC - Organization of the Petroleum Exporting Countries), இந்த மாத தொடக்கத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவைக் குறைக்க முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து, எண்ணெய் வள நாடுகளின் மற்றொரு கூட்டமைப்பான ஒபெக் பிளஸ் அமைப்பும் கடந்த வாரம் உற்பத்தி குறைப்பை அறிவித்தது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

இதனால், சர்வதேச அளவில் மீண்டும் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒபெக் பிளஸ் நாடுகள் கூட்டமைப்பில் (Non-OPEC countries as OPEC+) ரஷியாவும் இருப்பதால்தான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கவலை அடைந்துள்ளன. அதற்கு மிக முக்கியக் காரணம், இந்த நாடுகள் ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன.

எவ்வளவு உற்பத்தியை குறைக்கப் போகிறார்கள்?

சவூதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 5,00,000 பீப்பாய்களையும் ஈராக் 2,11,000 பீப்பாய்களையும் குறைக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தவிர ஐக்கிய அரபு ஆமீரகம், ஓமன், குவைத், அல்ஜீரியா ஆகிய நாடுகளும் உற்பத்தியை குறைக்கப் போகின்றன. இதன்மூலம், ஒருநாளைக்கு சுமார் 16 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி குறைக்கப்படும் எனத் தெரிகிறது. இது மே மாதம் முதல் செயல்படுத்தப்படும் எனச் சொல்லப்படுகிறபொது.

பொருளாதார நெருக்கடிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் இந்த நேரத்தில்..

’பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அரபு நாடுகள் தெரிவித்துள்ளன. உலகின் பல பெரிய எண்ணெய் உற்பத்தி குறைப்பு அறிவிப்புக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, கடந்த 10ஆம் தேதி வர்த்தகத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு 5 டாலர்கள் வரை உயர்ந்தது. அதாவது, சுமார் 7 சதவிகித அதிகரிப்புடன் பீப்பாய் ஒன்றின் விலை 85 டாலர்களை எட்டியது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

விலைவாசி உயரும்.. இந்தியாவுக்கு சிக்கல்தான்!

எண்ணெய் விலை அதிகரித்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது கடினம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தவிர, இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், அடுத்த மூன்று மாதங்களில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 முதல் 90 டாலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அதேநேரத்தில், எண்ணெய் 90 டாலரை எட்டினால், அது இந்தியா போன்ற நாடுகளுக்கு சிக்கலைத் தரும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே உக்ரைன் - ரஷ்யா போர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் வங்கி நெருக்கடி ஆகியவற்றால் உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பும் உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. எண்ணெய் உற்பத்தி குறைவதால் விலையும் அதிகரிக்கும் என்பதால், அது இந்தியாவையும் பாதிக்கும்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

இந்தியா என்ன செய்யும்?

ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளுடனும் இந்தியா நல்ல நட்புறவுடன் உள்ளது. எனவே எண்ணெய் விலை அதிகரித்தாலும் இந்தியாவுக்கு தொடர்ந்து எண்ணெய் கிடைக்கும். இதை, சர்வதேச எரிசக்தி முகமை தலைவர் ஃபாதிக் பைரோல் உறுதியும் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர், “எண்ணெய் உற்பத்தி குறைப்பு மூலம் நிச்சயமாக விலை உயர்வு இருக்கும். ஏற்கெனவே பல நாடுகள் பொருளாதாரரீதியாக சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், எண்ணெய் விலை உயர்வு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்வதேச அளவிலும் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்தியாவிலும் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிக்கும். ஏனெனில், இந்தியா எரிபொருள் தேவைக்கு இறக்குமதியையே அதிகம் சார்ந்துள்ளது. விலை உயர்வால் இறுதிநிலை நுகர்வோருக்கும் அதிகம் பாதிப்பு ஏற்படும். அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பொருளாதாரம் வலுவாகவே உள்ளது” என்றார்.

ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்..

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது. தற்போது வரை அந்தப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரையடுத்து, உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளில் சீர்குலைவும் ஏற்பட்டது. அதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு கண்டது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கக்கூடாது என தடை விதித்தன. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் அதிகளவிலான எண்ணெய் வாங்கி வருகின்றன.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

அதற்கு, ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதுதான் காரணம். அதாவது பேரல் ஒன்றுக்கு 72.14 அமெரிக்க டாலர் என்ற சராசரி விலையில் அதிகளவிலான கச்சா எண்ணெய்யை விநியோகிக்கத் தொடங்கியது. இது பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு (ஒபெக்) சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. அதிலும் இந்திய ஆயில் சுத்திரிகரிப்பு நிறுவனங்கள் ஒருநாளைக்கு பல பேரல் அளவிலான கச்சா எண்ணெய்யை, ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்துவருகின்றன. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை சார்ந்துதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கு சாதகமான சூழலை உருவாக்குமா?

அதேநேரத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அது ரஷ்யாவுக்கும் சாதகமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் அந்த நாட்டுக்கு முக்கியப் பங்கு உள்ளது. எரிபொருளின் விலை உயர்வால் கிடைக்கும் கூடுதல் வருவாயை, உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷியா பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com