ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகளுக்கு மட்டுமே அனுமதி: நீதிமன்ற தீர்ப்புக்கு குவியும் வரவேற்பு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு ஜல்லிக்கட்டு செயற்பாட்டளர்கள் மற்றும் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். அந்த மனுவில், நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் 2017-இல் பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தத்தில், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழக கலாச்சார பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இச்சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தடையில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நன்றி தெரிவித்திருக்கும் வீரவிளையாட்டு குழுத் தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒட்டு மொத்த விவசாயிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பாக உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையினரும் ஆர்வலர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகள் தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. அதிக காளைகள் மற்றும் அதிக வாடிவாசல்களை கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இந்த உத்தரவு பற்றி பேசும்போது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு முன்பும் பின்பும் நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் அலங்கநல்லூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஜெர்சி மாடு களமிறக்கப்பட்டதற்கு அப்போதே எதிர்ப்பை பதிவு செய்தோம். கலப்பினம் செய்யப்பட்ட ஜெர்சி மாடுகளை இறக்குமதி செய்ததில் எங்களுக்கு பல்வேறு சந்தேகம் நிலவியது, தற்போது சென்னை உயர் நீதிமன்றமே நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” எனவும் கூறினார்கள்.
அதேபோல், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்!வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்கக் கூடாதெனவும்,நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற உத்தரவும் முக்கியத்துவம் வாய்ந்தது!</p>— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) <a href="https://twitter.com/Vijayabaskarofl/status/1433371085739724802?ref_src=twsrc%5Etfw">September 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>