“குழந்தையை கலைக்க மாட்டேன்” - கண்முன்னே கணவனை பறிகொடுத்த கர்ப்பிணி உருக்கம்

“குழந்தையை கலைக்க மாட்டேன்” - கண்முன்னே கணவனை பறிகொடுத்த கர்ப்பிணி உருக்கம்

“குழந்தையை கலைக்க மாட்டேன்” - கண்முன்னே கணவனை பறிகொடுத்த கர்ப்பிணி உருக்கம்
Published on

தன் கண் முன்னே காதல் கணவன் ப்ரனய் வெட்டிக் கொல்லப்பட்டதை பார்த்த மனைவி அம்ருதா அதிர்ச்சியில் சுய நினைவை இழந்தார். தற்போது அம்ருதா மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் தெலங்கானாவையே உலுக்கியுள்ளது. திருமணத்தில் முடிந்த ப்ரனாய் - அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. தங்களது 7 ஆண்டுகால காதல் வாழ்க்கையை திருமணத்தில் முடிக்க அவர்கள் நடத்திய போராட்டங்கள் எல்லாம் இப்போது வீணாக போய்விட்டது. 

முதன்முதலாக அம்ருதாவை சந்தித்த போது ப்ரனய் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் படித்த பள்ளியில் அம்ருதா ஜூனியர். இருவரது வீடும் இரண்டு தெருக்கள் இடைவெளியில் தான் இருந்தது. இதனால், இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடிந்தது. இருவரும் மெல்ல, மெல்ல காதல் வயப்பட்டார்கள். பள்ளிப் படிப்பை முடித்த ப்ரனய் தொழில் நுட்ப அறிவியல் துறையில் இன்ஞ்னீயரிங் படித்தார். அம்ருதா ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் இளங்கலை படித்தார்.

பல வருடங்களாக இருந்த காதல் உறவு 2017ம் ஆண்டு அம்ருதாவின் வீட்டிற்கு தெரிந்திருக்கிறது. வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் அவரது மாமா, சித்தப்பா என அனைவரும் அம்ருதாவை கடுமையாக அடித்திருக்கிறார்கள். 6 மாதத்திற்கு மேலாக வீட்டுச் சிறையிலே வைத்திருந்திருக்கிறார்கள். அம்ருதாவும் தனது வீட்டில் எவ்வளவோ போராடி பார்த்திருக்கிறார். ஆனால், அவர்கள் கடைசி வரை சம்மதிக்கவே இல்லை. இறுதியில், தனது வீட்டில் சம்மதம் வாங்க முடியாது என்று அம்ருதா உணர்ந்திருக்கிறார். எப்படியோ வீட்டை விட்டு வெளியேறி அம்ருதா, ப்ரனய்யை சந்தித்து தனது நிலையை எடுத்து கூறியிருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜியத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திருமணம் ஆன கையோடு வெளிநாடு சென்று அங்கேயே செட்டில் ஆக இருவரும் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அம்ருதா கர்ப்பமானதால் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். ப்ரனய் வீட்டிலும் முதலில் இவர்களது திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அம்ருதா கர்ப்பமானதை கேள்விப்பட்ட பிறகு அவர்களை அழைத்து முறையாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். இது கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நடந்திருக்கிறது. ஆனால், அதற்கு அம்ருதா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. 

ப்ரனய் - அம்ருதா ஜோடியின் புகைப்படங்களை பார்த்தாலே அவர்கள் எவ்வளவு அன்போடு தங்களது வாழ்க்கையை தொடங்கி வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பது புரியும். கர்ப்பம் தரித்த பிறகு நலகொண்டாவில் உள்ள மருத்துவமனையில்தான் பரிசோதனைக்காக வந்து சென்றிருக்கிறார்கள். அப்படியொரு நாள் பரிசோதனைக்காக வந்த போதுதான் இந்தக் கொடூர கொலை நடந்திருக்கிறது. 
 
ப்ரனயின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் தனது இளைய மகன் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அம்ருதா அவர்கள் வீட்டிற்கே செல்லட்டும், இங்கு வந்தால் தங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கும் என ப்ரனய் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இதற்கு முன்பு கூட அம்ருதா வீட்டின் சார்பில் பலர் வந்து மிரட்டி சென்றிருக்கிறார்கள் என ப்ரனய் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்ருதா தனது வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். ப்ரனய் இறந்து போனதை முதலில் மருத்துவர்கள் அம்ருதாவிடம் சொல்லவில்லை. தன் கண் முன்னே கணவன் வெட்டப்பட்ட கொடூரக் காட்சியை பார்த்த நேரத்தில் அம்ருதா மயங்கிவிட்டார். மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவரிடம் மருத்துவர்கள் எதுவும் சொல்லவில்லை. இன்றுதான் ப்ரனய் இறந்ததை அவரிடம் கூறியிருக்கிறார்கள். 

ப்ரனய்யை தனது தந்தைதான் கொலை செய்திருப்பார் என்று அம்ருதா நிச்சயமாக கூறுகிறார். இதுகுறித்து அம்ருதா, “என்னுடைய சொல்படி கேட்கவில்லை என்றால் ப்ரனய்யை கொன்றுவிடுவேன் என்று எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார். என்னுடைய அலைபேசி எண்ணை என் தந்தை பிளாக் செய்த  பின்னர் நான் அவரிடம் பல நாள் பேசவேயில்லை. என் கணவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்புதான் எனது தந்தை எனக்கு மீண்டும் போன் செய்தார். நான் அதை எடுக்கவில்லை. ப்ரனய் தாக்கப்பட்ட பிறகு நான் மீண்டும் அவருக்கு போன் செய்தேன். ஆனால், அவர் அலட்சியமாக பேசினார்.  மருத்துவமனைக்கு செல்வதற்கு முதல் நாளில்தான் எனது அம்மாவிற்கு போன் செய்து ப்ரனய் வீட்டில் நாங்கள் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ததை சொன்னேன். இந்தக் கொலைக்கு பின்னால் எனது தந்தையும், மாமாவும்தான் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அம்ருதா இப்போது மூன்று மாதக் கர்ப்பிணி என்பது முக்கியமானது. 

இதன்பிறகு அம்ருதா சொன்னதுதான் நெகிழ்ச்சியானது. “என்னுடைய கருவை நான் கலைக்க விரும்பவில்லை. ப்ரனய் எனக்கு அளித்துச் சென்ற பரிசாக நினைத்து அந்தக் குழந்தையை காப்பேன். ஒருபோதும் எனது தாய் தந்தையிடம் மீண்டும் செல்லமாட்டேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார். 

Courtesy - The News Minute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com