ஆன்லைன் சூதாட்டங்களின் அபாயம் : இயக்குநர் கூறும் திடுக்கிடும் பின்னணி..!

ஆன்லைன் சூதாட்டங்களின் அபாயம் : இயக்குநர் கூறும் திடுக்கிடும் பின்னணி..!
ஆன்லைன் சூதாட்டங்களின் அபாயம் : இயக்குநர் கூறும் திடுக்கிடும் பின்னணி..!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மற்ற அனைத்தையும் விட சமூக வலைத்தளங்கள், செயலிகள், கேம்ஸ், ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றில் அதிகம் ஏற்பட்டுள்ளது. இவற்றை அதிகமாக பயன்படுத்துவது இளைஞர்கள் தான். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால், இளைஞர்கள் இவற்றிற்கு எளிமையாக அதிக நேரம் கொடுக்கவோ அல்லது அடிமையாகவோ மாறிவிடுகின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி வேலைக்கு செல்லும் குடும்பஸ்தர்களும், ஐடி துறை சார்ந்த ஊழியர்களும் இந்த வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.

இதில் மோசமானது என்னவென்றால், பணம் கட்டி விளையாடும் கேம்ஸ் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பாதிக்கப்படுவதுதான். இந்த சூதாட்டங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரங்களும் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றன. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த விளம்பரங்களில் நடிக்கின்றனர். நடுத்தர குடும்பத்தில் இருக்கும் நபர்கள், இதுபோன்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு தானும் பணத்தை வெல்லலாம் என்ற ஆசையில் கையில் இருக்கும் பணத்தையும் இழந்துவிடுகின்றனர். ஆரம்பத்தில் கொஞ்சம் பணம் வெல்வது போல இருந்தாலும், போகப் போக அனைத்தையும் இழந்துவிடும் வகையில் இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் இருப்பதாக, இதில் விளையாடி பணத்தை பறிகொடுத்த நபர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் 2003-ல் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளை தடை செய்ததுபோல, மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தியுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சீட்டு விளையாடியதற்காக தங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து நெல்லையை சேர்ந்த சிலுவை என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்தபோது, நீதிமன்றம் ஆன்லைன் சீட்டு விளையாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக நீதிபதி புகழேந்தி கூறியபோது, “ஒரு காலத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமான லாட்டரி சீட்டு விற்பனையை, தமிழக அரசு தடை செய்ததன் மூலம் பல்வேறு தற்கொலைகள் தவிர்க்கப்பட்டன. பல குடும்பங்கள் வறுமை நிலைக்குச் செல்லும் சூழல் தவிர்க்கப்பட்டது. தற்பொழுது ஆன்லைன் சீட்டு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுகின்றன. அதில் விளையாடும் பலரின் பணம் சூறையாடப்படுகிறது. இது பலரையும், குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும், அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் கெடுக்கிறது” என்றார்.

மேலும், “இது சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளையும் இது ஏற்படுத்துகிறது. தற்போது இணையதளத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் ஆன்லைனில் சீட்டு விளையாடுவது அதிகரித்து வருகிறது. தெலங்கானாவில் தற்போது ஆன்லைனில் விளையாடும் சீட்டுக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டது. அதைப்போலவே, மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் இதுபோன்று பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதி தெரிவித்தார்.

இதுபோன்ற ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளுக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பே இயக்குநர் சாய் ரமணி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது நீதிமன்ற வலியுறுத்தலின் அடிப்படையில் அவரிடம் போன் செய்து பேசினோம். போனில் நம்முடன் பேசிய சாய் ரமணி, “தமிழகத்தில் அனைத்துவித சூதாட்டங்களும் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் மட்டும் எப்படி அனுமதி அளித்துள்ளனர். மத்திய அரசு இதை அனுமதிக்கிறது என்றால், தெலங்கானா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு சட்டம் இயற்றி தடை செய்திருக்கின்றனவே. அதைப்போல தமிழகத்திலும் சட்டம் இயற்றி இதனை தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ குரல் கொடுக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆன்லைன் விளையாட்டுகளின் பாதிப்பை உணர்ந்தே நீதிமன்றம் அரசுகளிடம் தடை செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கிறது. இதை உடனே நடைமுறைப்படுத்தினால், இளைஞர்களுக்கு பெரும் நல்லதாக அமையும். இளைஞர்கள் சீரழியும் ஒன்றாக ஆன்லைன் சூதாட்டங்கள் உள்ளன. இளைஞர்களின் மூளையை சலவை செய்வது போலவே, இந்த ஆன்லைன் சூதாட்டங்களின் விளம்பரங்களும் உள்ளன. நான் இந்த ஆன்லைன் விளையாட்டை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது, இது பித்தலாட்டம் என தெரிந்துகொண்டேன். அதன்பின்னர் என் நண்பர்கள் பலரும், என்னை தொடர்பு கொண்டு இந்த போட்டியை தடை செய்ய வேண்டும், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டதாக புலம்பினர். அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளுமே ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்காத நிலையில், நீதிமன்றம் குரல் கொடுத்திருப்பதால், நீதிமன்றத்திற்கு நான் தலை வணங்குகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதில் பணத்தை இழப்பது மட்டுமின்றி சிலர் தற்கொலையும் செய்துள்ளனர். தமிழகத்தில் கூட கடந்த வருடம் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளியாக மாறி, இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். எனவே இதன் அபாயத்தை உணர்ந்து உடனே தடை செய்ய வேண்டும் என இயக்குநர் சாய் ரமணி உள்ளிட்டோரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சீட்டுக்கட்டு மட்டுமின்றி, கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் ஆன்லைன் செயலிகள் மூலம் சூதாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com