"ஆன்லைன் கல்வி முறை முற்றிலும் தவறானது" கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

"ஆன்லைன் கல்வி முறை முற்றிலும் தவறானது" கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
"ஆன்லைன் கல்வி முறை முற்றிலும் தவறானது" கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திர பாபு

கொரோனா தொற்று ஆரம்பமான நாளிலிருந்தே பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டன. வழக்கம் போல் விடுமுறை என்றவுடன் குதித்து குதூகலித்த மாணவர்கள் இன்று எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். பெற்றோர்கள் வாழ்வாதாரப் பிரச்னையில் ஒரு பக்கம் தவித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறம் கல்வி நிலையங்கள் ஆன்லைன் கல்வியை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டன. அதன் விளைவு பெரும்பாலான இடங்களில் வாழ்கைக்கான கல்வி தடைப்பட்டு, டார்க்கெட்டுக்கான கல்வி தலைநிமிர்ந்து நிற்கிறது. இப்படி கல்வித்துறையில் ஏற்படும் தர இழப்பு மாணவர்களின் வரும் காலத்திலும், தொழில்துறைகளிலும் பிரதிபலிக்குமல்லவா?

ஆகையால் அது குறித்த சந்தேகங்களை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களிடம் முன்வைத்தோம்.

கொரோனாவின் தாக்கம் கல்வித்துறையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நீங்கள் நினைக்கீறீர்கள்?

நாம் இது குறித்து பேசும் முன்பு மாணவர்களும், கல்விநிலையங்களும் தற்போதைய சூழலை ஒத்த சூழ்நிலைகளை முன்னரே எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை நினைவு படுத்துவது அவசியமாகும்.  ஒன்று சமச்சீர் கல்விக்கான போராட்டம் வெடித்த காலம், இன்னொன்று சுனாமி உருவான காலம். இந்த இரண்டு காலக்கட்டத்திலும் பெரும் பான்மையான கல்வி நிலையங்கள் செயல்படவில்லை. அந்தத் தருணங்களில் மாணவர்களுக்கு யாரும் பாடமும் நடத்தவில்லை. மாணவர்கள் இயல்பாக பயின்றனர்.

ஆனால் இன்று ஆன்லைன் மூலம் கல்வி அளிக்கிறோம் என்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இம்முறை கல்வி முற்றிலும் தவறானது. காரணம் இக்கல்வி முறை ஒரு சாராருக்கு மட்டுமே சென்றடைகிறது. இன்னொன்று கிராமப்புற மாணவர்களுக்கான முக்கிய வாய்ப்புகள் தடைபடுவது.

ஆம் இன்று இந்த இணையவழி கல்வி செயல்பாடுகளால் பல மாணவர்கள் தங்களது வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் ஆன்லைனில் மேற்படிப்புக்கான விண்ணப்பத்தை நிரப்ப சொன்னீர்கள். ஆனால் அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு சென்றடையும் முன்னதாகவே அந்த வாய்ப்பிற்கான கால நேரம் முடிந்து விடுகிறது.

மற்றொன்று, விளையாட்டுத்துறையில் உள்ள மாணவர்களுக்கு உரித்தான அனைத்து ஆவணங்களையும் இணையத்தில் புகுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால் விளையாட்டு ஆவணங்களுக்கு உரித்தான மதிப்பெண்கள் அம்மாணவனுக்கு கிடைக்காமல் போகிறது. இதனால் அவன் தகுதிக்கு உரித்தான இடமும் கிடைக்காமல் போகிறது.

கொரோனா போன்ற தொற்று உள்ள காலத்தில் வேறு எந்த நடைமுறையை கையாள முடியும்?

ஏன் கையாள முடியாது. இவ்வளவு சிக்கல் நிறைந்த ஆன்லைன் முறையை சாத்தியப்படுத்த முயலும் நீங்கள், கிராமங்களில் அந்ததந்த பகுதிகளுக்கு அருகே உள்ள ஆசிரியர்களை குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வைக்க முயற்சி எடுக்கலாம்.

அந்த கல்வியில் உளவியல் ரீதியான அணுகு முறைக்கு சில நிமிடங்கள், மாணவர்களின் குதூகலத்திற்கான சில விஷயங்கள் அத்தோடு சேர்த்து கல்வி என ஒதுக்கினால் எவ்வளவு அருமையாக இருக்கும். நகர்புறங்களில் பூங்காக்களை உபயோகப்படுத்தலாம்.

மேற்படிப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் இந்தக் காலத்தை எப்படி பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்? அவர்களுக்கு ஆன்லைன் கல்வி பொருந்துமா?

ஆன்லைன் கல்வி என்பது நாம் ஏதோ ஒன்றை பிரதான பாடமாகப் படித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு உதவி செய்யும் ஒரு கருவி அவ்வளவே. மற்ற படி என்னை பொருத்த வரை அது சான்றிதழ் தரும் வெற்று கல்விதான். ஆகையால் மாணவர்கள் தற்போதைய சூழ்நிலைகளின் தேவை என்பதை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். தான் தேர்ந்தெடுக்கப் போகும் துறை குறித்த ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக வெண்டிலேட்டரை எடுத்துக் கொள்வோம். அது தான் தற்போதைய பெரும் தேவையாக இருக்கிறது. அது குறித்தான ஆராய்ச்சியை தொடங்கலாம். அதில் நமது துறைக்கு எந்த அளவு பங்கு இருக்கிறது என்பது குறித்தும், அதில் மாற்றங்களை புகுத்துவது குறித்தும் ஆராயலாம்.

கல்வியின் தர இழப்பு, எதிர்காலத்தில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பிரபல பொருளாதார நிபுணர் சுமந்த் ஸ்ரீ ராமனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறும் போது “ இது குறித்த உண்மையான நிலவரம் கொரோனா தொற்றுக் காலம் முடிந்த பின்னரே நமக்கு தெரிய வரும். தற்போதைக்கு பெரிதளவிலான எந்த மாற்றமும் இல்லை.”என்றார்

 - KALYANI PANDIYAN 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com