”தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்” - சிங்கப்பூரில் களைகட்டி வரும் தமிழ் மொழி விழா!

’தமிழை நேசிப்போம் – தமிழில் பேசுவோம்’ என்ற தலைப்பில் வளர் தமிழ் இயக்கம் சிங்கப்பூர் அரசுடன் இணைந்து ஒரு மாதம் தமிழ் மொழி விழாவைக் கொண்டாடி வருகிறது.
தமிழ் மொழி விழா
தமிழ் மொழி விழா PT desk

அண்டை நாடான சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக தமிழ் மொழி இடம்பெற்றிருப்பதுடன், தமிழுக்கு எனப் பல சேவைகளையும் அந்நாட்டு அரசும், தமிழ் அமைப்புகளும் செய்து வருகின்றன. அந்த வகையில், ஆண்டுதோறும் ’தமிழ் மொழி விழா’ என்கிற ஒரு நிகழ்வை, தமிழ் மொழிக்காக சிங்கப்பூர் அரசுடன் இணைந்து வளர்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. சிங்கப்பூரில் தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலைபெற செய்வதோடு மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதே தமிழ் மொழி விழாவின் முக்கிய நோக்கமாகும்.

ஒரு மாதம் நிகழ்த்தப்படும் இந்த விழாவில், தமிழ் சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மொழிக்காக, அதுவும் தமிழுக்காக, ஒரு மாதம் கொண்டாடப்படும் இந்த விழா என்பது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். இதன்மூலம் தமிழ் மொழி அழியாது பாதுகாக்கப்படும் என்பது நிச்சயம்.

’தமிழை நேசிப்போம் – தமிழில் பேசுவோம்’ என்ற முழக்கத்தோடு தெருவெல்லாம் தமிழ் முழங்க, சிங்கப்பூர் அரசு ஆதரவுடன் வளர் தமிழ் இயக்கம் இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடி வருகிறது. இவ்வியக்கம், தமிழில் உள்ள இலக்கியங்களின் சுவையை அறிந்துகொள்ளும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளில் மாணவர்களுக்கான போட்டிகளை மிகவும் சிறப்பாக நடத்திவருகின்றது.

அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. ‘அழகு’ என்பது இவ்வாண்டுக்கான கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகளை, 43 பங்காளித்துவ அமைப்புகள் நடத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு, வரும் 30ஆம் தேதி வரை சிங்கப்பூரில் பல இடங்களில், பல நிகழ்வுகளாக நடைபெற இருக்கின்றன. மொத்தம் 42 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு சார்பில் இதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றே சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் சார்பில் ‘அழகோடு பாமாலை’ நிகழ்ச்சி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்திலும், அதைத் தொடர்ந்து ‘பார்வை 2023’ என்ற நிகழ்ச்சி உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்திலும் நடைபெற்றது.

ஏப்ரல் 2ஆம் தேதி பிஜிபி அரங்கில் திருக்குறள் விழா 2023 நடைபெற்றது. 2வது வாரத்தில் வண்ணத்தமிழ், முரசு மொழிபெயர்ப்பு, யுத்தம் 2023, அழகு தமிழ் பழகு, தமிழும் அழகும், தமிழின் அழகே அழகு உள்ளிட்ட பல நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று, தமிழர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இதன் 3வது வாரமான நாளை (ஏப்ரல் 15) முதல் இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக நாளை (ஏப்.15) இலக்கிய கருத்தரங்கு, திருக்குறளின் இன்சொல்வழி பயணம், தமிழோடு உறவாடு; சொல் அழகு, நாயகி - பெண்மையின் அழகு, சொல்லைத் தாண்டி வருவாயா, அழகுத் தமிழில் அரவணைத்துச் செல்வோம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதி சிங்கப்பூரில் பேச்சுத் தமிழ் சூழலை விரிவாக்கம் செய்தல், கழிபெருங்காரிகை: திருக்குறளில்(ன்) அழகு, மாகோ - தேசிய தமிழ் கதை சொல்லும் போட்டி, கவியும் நாட்டியமும், முத்தமிழ் விழா, சித்திரை கலை விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

அடுத்து 4வது வாரமான ஏப்ரல் 22ஆம் தேதி தையல் - சங்ககால மகளிர் நிகழ்வும், ஏப்ரல் 23ஆம் தேதி சிறப்பு விருந்தினராய் கவிஞர் யுகபாரதியுடன் மாணவர்கள் பங்கேற்கும் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே, உலகமும் நாமும், தமிழே வாழ்க 2.0 - அமிழ்தம், தமிழுக்கும் அழகென்று பேர், சொற்சிலம்பம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. ஏப்ரல் 26ஆம் தேதி அன்று, தமிழ் இலக்கியத்தில் சிறுகாவியங்களின் அழகு என்று நிகழ்வு நடைபெற இருக்கிறது.

5வது வாரமான ஏப்ரல் 28ஆம் தேதி, இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் - ஓர் அழகியல் பார்வை என்ற நிகழ்வும், ஏப்ரல் 29ஆம் தேதி என்.பி.எஸ். இமயம் தமிழ் மொழி விழா, கதை நேரம், தமிழ் அருவி, அன்பு + ஆராதனை + நம்மிடம்; பாடு, ஆடு கொண்டாடு, சொற்போர், கன்னல் தமிழ், கவிதை அழகு, பட்டமன்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கின்றன.

ஏப்ரல் 30ஆம் தேதி இறுதி நிகழ்வாக அனைத்துலக தமிழ்ப் பேச்சு, தமிழர் கலைப் போட்டி, சுடர் தந்த தேன் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இரண்டு வாரம் தொடர்ந்து தமிழர்களை மகிழ்வித்து வரும் இந்த நிகழ்வு, இன்னும் 3 வாரங்கள் நடைபெற இருப்பதால், தமிழர்களுக்கு மேலும் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

”தமிழை வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தொடர்ந்து சேவை செய்து வரும் இவ்வியக்கத்தைப் பாராட்டுகிறோம். இதன்மூலம் தமிழ் மொழி வளர்ச்சி அடையும்” என்கின்றனர், இதில் பங்கேற்ற தமிழர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com