கொரோனா கால மாணவர் நலன் 21: ஒமைக்ரான் ஏற்படும் குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கிய அறிகுறிகள்

கொரோனா கால மாணவர் நலன் 21: ஒமைக்ரான் ஏற்படும் குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கிய அறிகுறிகள்
கொரோனா கால மாணவர் நலன் 21: ஒமைக்ரான் ஏற்படும் குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கிய அறிகுறிகள்

இந்தியாவில் சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனாவால் உறுதிசெய்யப்பட்ட குழந்தைகளில் 68% பேர் வேறு மருத்துவப் பிரச்னை இருப்போர், மிக அதிக உடல் பருமன் இருப்போராகவே இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதன் பின்னணி என்ன, ஒமைக்ரான் திரிபு கொரோனா குழந்தைகளுக்கு என்ன மாதிரியான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது போன்றவை குறித்து தொடரின் இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதில்லை என்ற பொதுவான நம்பிக்கை நம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. ஆனால் இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் சமீபத்தில் அமெரிக்க தொற்றுநோயியல் மருத்துவரான ஃபாஹிம், ஒரு தரவை முன்வைத்திருந்தார். அதன்படி அமெரிக்காவில் மட்டும் இதுவரை 9.5 மில்லியன் குழந்தைகளுக்கு கொரோனா உறுதியானதாவும், அதில் 30,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், 750 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் குழந்தைகள் தடுப்பூசி நடைமுறைக்கு வருவது - நடைமுறைக்கு வந்தாலும்கூட விநியோகிப்பதிலிருந்த சிக்கல் போன்றவற்றால் பல குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்துவந்தனர். அதை குற்ப்பிடும் மருத்துவர் ஃபஹிம், அவர்களில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததாலேயே ஐ.சி.யூ.-வில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறினார்.

குழந்தைகளும் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்கையில், அதன் பின்னணியில் குழந்தைகளும் பெரியவர்கள் அளவுக்கு சமூகத்தில் ஒருவரோடொருவர் இணைந்து உலவுவதும், அவர்களை சுற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளா பெரியவர்கள் நிறைய இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இவற்றுடன், குழந்தைகளால் தங்களை முழுவதாக தனிமைப்படுத்திக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும், அவர்கள் விளையாட்டுத்தனமாக இருப்பதால் அனைவருடன் இணைவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு கொரோனா உறுதியாகும்போது அவர்களால் தங்களை முழுமையாக தனிமைப்படுத்திக்கொள்ள முடிவதில்லை என்பதால், அவர்களிடமிருந்து பரவும் விகிதம், அதிகமாகிறது. ஆறுதளிக்கும் விஷயமாக, அவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது இருக்கிறது. அதுவும், வேறு எவ்வித உடல்நல சிக்கலும் (Comorbidity) இல்லாத குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள். இந்த விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு கொரோனா பாதித்தாலும்கூட அவர்களுக்கு தீவிர உடல்நல பாதிப்போ காய்ச்சலோ தீவிரமாக ஏற்படுவதில்லை. கடந்த செப்டம்பர் 2021 WHO தெரிவித்த தகவல்படி, “பெரியவர்களோடு ஒப்பிடுகையில் சிறு குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகள், வளரிளம் பருவ குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் குறைவாகவோ மிதமாகவோதான் இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவுகையில், அது அவர்களிடமிருந்து பரவால் பார்த்துக்கொண்டாலே, நம்மால் அவர்களை நிச்சயம் காக்க முடியுமென சொல்லப்படுகிறது. அந்தவகையில் குழந்தைகள் ‘கொரோனா கேரியர்ஸ்’ என சொல்லப்படுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவுதலை எண்ணிக்கையாக ஒப்பிடுகையில் அமெரிக்காவைவிட குறைவாகவே இருக்கிறதுதான். ஆனால் அதைக்கண்டு நம்மால் மகிழ்ச்சி கொள்ள முடியாது. ஏனெனில், குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பெற்றோரின் விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவு என்கின்றன செய்திகள். குறைவாக பரிசோதனை செய்யப்படுவதால், குறைவாகவே பாதிப்பும் தெரியவருகிறது. கொரோனா உறுதிசெய்யப்படாததால், அக்குழந்தைகள் முறையாக தனிமைப்படுத்துதலுக்கு பெற்றோரால் உள்ளாக்கபடுவதில்லை. இது, அப்பகுதியில் கணிசமாக கொரோனா பரவலை அதிகப்படுத்தும் காரணியாக அமைந்துவிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

இதன்மூலம் குழந்தைகளை காப்பதிலும், கொரோனா சமூகப்பரவலாவதை தடுப்பதிலும் பெற்றோரின் பங்கு முக்கியமானதாக இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. தங்கள் குழந்தைகளை கொரோனாவிலிருந்து தற்காக்க மாஸ்க் அணிய நிர்பந்திப்பது, கைகளை கழுவவும், சானிடைசர் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்துவது என்றிருப்பதுடன் சேர்த்து, அவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரியவந்தால், உரிய பரிசோதனை செய்வது - அவர்களை தனிமைப்படுத்துவது போன்றவற்றையும் செய்ய வேண்டும். இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் விநியோகத்துக்கு வரவில்லை என்பதால், முக்கியமாக பெற்றோர் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான், தங்களிடமிருந்து குழந்தைக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியும்.

அறிகுறிகள் என்கையில், எவையெல்லாம் குழந்தைகளுக்கான பொதுவான கொரோனா அறிகுறிகளாக இருக்கிறதென்பதை நாம் பார்க்க வேண்டும். இதுதொடர்பாக மொபைல் செயலியான ZoE செய்துள்ள கொரோனா ஆய்வில் தெரியவந்திருப்பவை - இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல் வலி, வறண்ட தொண்டை, சுவை தெரியாமல் இருப்பது, மணம் தெரியாமல் இருப்பது, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு, மூக்கு ஒழுகுதல் போன்றவை. இவற்றில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல் சோர்வு, தும்மல் போன்றவை ஒமைக்ரான் திரிபு கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன. வயிற்றுப்போக்கு, தேம்மல் போன்றவை மிகவும் அரிதான அறிகுறிகளாக உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com