"27%-க்குள் முடக்காதீர்", "சமூக நீதியில் தமிழ்நாடு முன்னோடி" - 'ஓபிசி' விவாதக் குறிப்புகள்
ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மக்களவையில் வலியுறுத்தின. சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், உரிய இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வைத்தனர்.
இந்தக் கூட்டத்தொடரில் முதல் முறையாக, செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர்முழக்கம் நிறுத்தப்பட்டு, ஓபிசி மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா ஓபிசி பட்டியலை தயாரிக்க மற்றும் மாற்றம் செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை தெளிவுபடுத்துவதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் மாநிலக் காட்சிகள் ஆட்சி நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகள் "அரசியல் சாசனம் 127-வது திருத்தம்" மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளன.
இதனாலேயே மழைக்கால கூட்டத்தொடரில் 15 நாட்களாக தொடர்ந்த முழக்கங்களை நிறுத்திக்கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓபிசி பட்டியலை முடிவு செய்வதற்கான அதிகாரம் உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் இந்த முக்கிய மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றன. மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் இந்த மசோதாவை விளக்கி, மக்களவையின் ஆதரவை கோரினார்.
இந்த மசோதா திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே தெரிவித்த நிலையில், இந்த மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற ஒப்புதலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என சிவா சேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தங்களுடைய மாநிலத்திலேயே ஓபிசி பட்டியலை முடிவு செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்தபோதிலும், உச்சநீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் அளித்த தீர்ப்பில் மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை ரத்து செய்திருந்தது.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு தனித்தனி ஓபிசி பட்டியல் உள்ள நிலையில், சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களுடைய பட்டியலை சட்டப்பேரவை ஒப்புதலுடன் அமல்படுத்தலாம் என்பது மசோதாவின் சாரம். மத்திய அரசுதான் ஓபிசி பட்டியலில் மாற்றங்களை செய்யமுடியும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் நிலைப்பாட்டை மாற்றவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓபிசி பட்டியல் மத்திய அரசின் மூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று, குடியரசுத் தலைவரின் கையொப்பத்துடன் வெளிவர வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு அல்ல என என்பது சட்டத்திருத்தத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இந்த மசோதா நாடாளுமன்ற ஒப்புதலை பெற்ற பிறகு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எந்தக் குழப்பமும் இன்றி ஓபிசி பட்டியலை மாற்றியமைக்கலாம்.
கட்சிகளின் நிலைப்பாடு என்ன? இடஒதுக்கீடு அளித்து சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி.ஆர்.பாலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி ஆகியோர் குறிப்பிட்டனர். ஓபிசி இடஒதுக்கீட்டை 27 சதவீதத்திற்குள் முடக்கக்கூடாது என டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
பெரியார் உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகள் எடுத்த நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அவர், "அரசியல் சாசனத்தை அமைத்த பி.ஆர்.அம்பேத்கருக்கு தமிழகம் முன்னுதாரணமாக அமைந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறார். முன்னாள் முதல்வரான அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகியோர் வழியை ஸ்டாலின் பின்பற்றி வருகிறார்" என்றார். இதே கருத்துகளை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் முன்வைத்தார்.
மக்களவையில் தமிழ் உரையில் தமிழில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, "ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமை. அது மறுக்கப்படக் கூடாது. ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜும் தமிழில் பேசி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என வலியுறுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன், ஓபிசி இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்கவேண்டும் என வலியுறுத்தினார். தமிழில் பேசிய திருமாவளவன், பட்டியலினத்தவருக்கு மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் ஓபிசி மசோதா குறித்து பேசும்போது, "தமிழ்நாடு முன்னோடியாக எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஓபிசி இடஒதுக்கீடு சரியான முறையில் அமல்படுத்தப்படவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏன் ஓபிசி பிரிவினருக்கு நியாயம் கிடைக்கவில்லை?" என கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ரிதேஷ் பாண்டே இந்த மசோதா குறித்து தங்களுடைய கருத்துகளை மக்களவையில் பதிவு செய்தனர்.
அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்திருந்த நிலையில், இந்த விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் அதீர் ரஞ்சன் சௌதுரி உள்ளிட்ட பலரும் மத்திய அரசு பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான விவாதத்தை நடத்தி இருந்தால் மழைக்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு இருக்காது என வலியுறுத்தினர். இந்த மசோதாவை ஒருமனதாக அனைத்துக் கட்சிகளும் நிறைவேற்றுவது போலவே பிற விவாதங்களையும் நடத்தியிருக்கலாம் என அவர்கள் வலியுறுத்தினார்கள். அமைச்சர் வீரேந்திர குமாரின் பதிலுக்கு பிறகு மசோதா மக்களவையின் ஒப்புதலைப் பெற்றது.
தொடரும் மாநிலங்களவை முடக்கம்: ஒருபக்கம் மக்களவையில் முதல் முறையாக, இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒரு மசோதா மீது முழுநீள விவாதம் நடத்திய நிலையில், இன்னொரு பக்கம் மாநிலங்களவையில் அமளி தொடர்ந்தது. குறிப்பாக உணவு இடைவேளைக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் தீவிரமடைந்ததால், தொடர்ந்து ஒத்திவைப்புகள் நடந்தன. ஓபிசி மசோதா மக்களவையில் ஒப்புதல் பெற்று, பின்னர் மாநிலங்களவைக்கு செல்லும் நிலையில் அங்கே விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு ஒரு மனதாக நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்குமா என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இன்னும் மூன்று தினங்களே எஞ்சிஇருப்பது குறிப்பிடத்தக்கது.
- கணபதி சுப்ரமணியம்