அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து திடீரென விலகிய ரஷ்யா! பதறும் யு.எஸ்! அடுத்து என்ன நடக்கும்?

அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து திடீரென விலகிய ரஷ்யா! பதறும் யு.எஸ்! அடுத்து என்ன நடக்கும்?
அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து திடீரென விலகிய ரஷ்யா! பதறும் யு.எஸ்! அடுத்து என்ன நடக்கும்?

அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் திடீர் என அறிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யா அடுத்து என்ன செய்யப்போகிறது என உலக நாடுகள் காத்திருக்கின்றன.

மாஸ்கோவில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புடின்

அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் திடீர் என அறிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யா அடுத்து என்ன செய்யப்போகிறது என உலக நாடுகள் காத்திருக்கின்றன. நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றிய புடின், ”உக்ரைன் போா் விவகாரத்தில் நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க தொடா்ந்து மறுத்து வருகின்றன. இந்த போரை ஒருபோதும் நாங்கள் கைவிட மாட்டோம்.

‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகல்

இந்தக் காரணத்தால், அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் தற்காலிகாமாக விலகுகிறோம். இதற்குப் பிறகு அமெரிக்கா புதிய அணு ஆயுத சோதனைகளில் இறங்கினால், ரஷியாவும் அதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ளும். உக்ரைன் போரில் ரஷியாவை வீழ்த்துவதுதான் தங்களது இலக்கு என்று அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் வெளிப்படையாகவே அறிவித்து வருகின்றன. ரஷியாவைவிட ராணுவரீதியில் தங்களது கை மேலோங்கியிருக்க வேண்டும் என்ற வியூகத்துடன் நம்மைத் தோற்கடிக்க நினைக்கும் மேற்கத்திய நாடுகள், நமது அணு ஆயுத பலத்தையும் பறிக்க திட்டமிட்டுள்ளன.

ரஷ்ய அணுசக்தி மையங்களில் ஆய்வுசெய்ய நினைக்கும் அமெரிக்கா

அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்ய அணுசக்தி மையங்களில் தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. அதே நேரம், அந்த நாட்டின் கூட்டாளியான நேட்டோ அமைப்பு, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய விமான தளங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதவதற்கு உதவி அளிக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அணு ஆயுத தளங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது முற்றிலும் பொருத்தமற்றதாகும். இப்போதைய நிலையில் ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்த அமலாக்கத்திலிருந்து தற்காலிகமாகத்தான் விலகுகிறோம். அந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாகக் கைவிடவில்லை” என உரையாற்றியுள்ளார்.

‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலக காரணம் என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு வருடத்தை (வரும் 24ஆம் தேதியுடன் ஒரு வருடம்) நெருங்க இருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகி இருப்பதாகவும், 80 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறி இருப்பதாகவும், பல கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், ரஷ்யாவுக்கு இந்தப் போரால் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியபோதும், இன்னும் அந்தப் பகுதிகள் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவையும், ஆயுத உதவிகளையும் அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர்

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்க்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் உக்ரைன் சென்றது, இதுவே முதல் முறை. அன்றைய தினம் பைடன், போலந்து அதிபரையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும் சந்திப்பதாகத்தான் இருந்தது. ஆனால், பைடனின் உக்ரைன் பயணத் திட்டம் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர் உச்சகட்டத்தை தொட்டிருந்தபோது, அப்போதைய அமெரிக்க அதிபர்களான ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா, டிரம்ப் ஆகியோர் போர் நடக்கும் இடத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

”ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை வெல்ல முடியாது!”

அந்த வகையில், பைடனின் வருகை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிகிற்கு புது தெம்பை கொடுத்திருக்கிறது. அப்போது, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து தனது ஆதரவை பைடன் வெளிப்படுத்தியதுடன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார். போரில் இறந்த வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். இந்த சந்திப்பின்போது, 4,135 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அதிபர் பைடன் அறிவித்துள்ளார். இது, தொடர்ந்து 32 வது முறையாக உக்ரைனுக்கு அவர் செய்யும் உதவியாகும். பின்னர், அண்டைநாடான போலந்துக்குச் சென்ற பைடன், உக்ரைன் போர் குறித்துப் பேசினார். அப்போது அவர், “ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை வெல்ல முடியாது. மிருகத்தனத்தால் ஒருபோதும் சுதந்திரமானவர்களின் விருப்பத்தை அழித்துவிட முடியாது. உக்ரைன் தற்போது வலுவாக இருக்கிறது. அது அனைத்தையும் எதிர்த்து நிற்கிறது. குறிப்பாக, உக்ரைன் சுதந்திரமாக இருக்கிறது. நேட்டோ தனது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்காது. எந்த சவாலையும் நேட்டோ சமாளிக்கும்" என உரையாற்றினார்.

ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீது கோபம் ஏன்?

ஏற்கெனவே போரில், அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுவதால் ரஷ்யா கடும் கோபத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பைடன் நேரடியாகவே உக்ரைனுக்குச் சென்றதும், போலந்தில் உக்ரைன் போர் குறித்தும் பேசியது ரஷ்ய அதிபர் புடினுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பைடனின் வருகையும், பேச்சும் ரஷ்யாவுக்கு பலவீனமாகத் தெரிந்ததை அடுத்தே, ‘நியு ஸ்டார்ட்’ ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் ரஷ்யா, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருமா அல்லது மேலும் உக்கிரப்படுத்த வழிவகுக்கப் போகிறதா என்பது குறித்து தெரியவில்லை.

நேட்டோவில் சேர விரும்பிய உக்ரைன்

ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடைபெறும் எனில், அது நேட்டோ நாட்டினர் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்கிறது நேட்டோ உடன்படிக்கை. அமெரிக்க தலைமையிலான மேற்கு உலக நாடுகளின் ராணுவக் கூட்டணியே இந்த நேட்டோ படை. இந்த நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவையும் நேட்டோவில் இணைந்துள்ளன. இந்த நிலையில் உக்ரைனும் ஜார்ஜியாவும் நேட்டோவில் சேர விரும்பின. இதில் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்களுடன் எல்லை பகிரும் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என அதன் அதிபர் புடின் நினைக்கிறார்.

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் ஏன்?

இதனால்தான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளை நோட்டோ படையில் இணைக்கக் கூடாது. குறிப்பாக உக்ரைனை சேர்க்கவே கூடாது என வலியுறுத்தி வருகிறார். இதனாலேயே உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே போர் நிலவியதாகக் காரணம் சொல்லப்படுகிறது. மேலும், ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வைக்கவே உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா நேரடியாகத் தலையிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், இந்த நேட்டோ அமைப்புக்கு எதிராக 'வார்சா ஒப்பந்த நாடுகள்' என்ற கூட்டமைப்பை ரஷ்யா உருவாக்கியது. அது, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு செயலற்றுப் போனது குறிப்பிடத்தக்கது. இதில் ரஷ்யாவிற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கோபம் என்னவென்றால், கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா அமைத்திருந்த வார்சா ஒப்பந்த நாடுகளில், பலவும் நேட்டோ அமைப்பில் சேர்ந்திருப்பதுதான்.

ரஷ்யாவுக்கு அச்சம் வரக் காரணம்

சோவியத் யூனியன் பிளவுபட்டது போன்ற மற்றொரு பெரிய அடியை ரஷ்யா விரும்பவில்லை. எனவே, நேட்டோ அமைப்பைப் பலப்படுத்தி அதன்மூலம் அமெரிக்கா உள்ளிட்ட போட்டி நாடுகள், எங்கே தங்கள் அதிகார வரம்பிற்குள் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் ரஷ்யாவுக்கு எப்போதுமே இருந்து வருகிறது. ஒருகாலத்தில், உலகின் வல்லரசாக சோவியத் யூனியன் விளங்கியது. அன்றைய ஒருங்கிணைந்த ரஷ்யாவே, சோவியத் யூனியனாக இருந்தது. இந்த சோவியத் யூனியனில்தான் ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்தன. இந்த யூனியனில் உக்ரைனும் பெரிய நாடாக இருந்தது.

நியூ ஸ்டாா்ட்: அணு ஆயுத ஒப்பந்தம் சொல்வது என்ன?

பனிப்போா் காலத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பல முறை அணு ஆயுதப் போா் விளிம்புக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் அத்தகைய போரை தவிா்ப்பதில் இரு நாடுகளுமே அக்கறை காட்டி வருகின்றன. இந்த நிலையில், ஆணு ஆயுதங்களை அவசரகதியில் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் பல அடுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை உருவாக்கியுள்ளன. இதில், அணு ஆயுதக் குவிப்பை தவிா்ப்பதற்கான ’நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தை அப்போதைய அமெரிக்க அதிபா் ஒபாமாவும் ரஷிய அதிபா் டிமித்ரி மெத்வதெவும் கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கொண்டனா். 2011ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த அந்த ஒப்பந்தம், அதிபா் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2021இல் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது அதன் ஆயுள் காலம் 2026 வரை உள்ளது.

இரு நாட்டு அணுசக்தி மையங்களிலும் ஆண்டுதோறும் ஆய்வு

அந்த ஒப்பந்தத்தின்கீழ், 1,550 அணு ஆயுதங்கள் மற்றும் அத்தகைய ஆயுதங்களை ஏந்தி நீண்ட தொலைவு பாயக்கூடிய 700 ஏவுகணைகள் ஆகிவற்றுக்கு மேல் இருப்பு வைத்துக்கொள்வதில்லை என்று இரு நாடுகளும் உறுதியளித்தன (அணு ஆயுதங்களில் உலகளவில் 90 சதவீதம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது). இந்த வரம்பு மீறப்படாததைக் கண்காணிப்பதற்காக இரு நாட்டு அணுசக்தி மையங்களிலும் ஆண்டுதோறும் 18 முறை நிபுணா்கள் பரஸ்பரம் ஆய்வு செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. எனினும், கொரோனா நெருக்கடி காலத்தில், இந்த பரஸ்பர ஆய்வு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. ஆய்வுகளை மீண்டும் தொடங்குவதற்காக அமெரிக்கா - ரஷியா இடையே எகிப்தில் வரும் நவம்பா் மாதம் பேச்சுவாா்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த திட்டத்தை ரஷ்யா தற்போது தள்ளிவைத்திருந்த நிலையில், தற்போது அணு ஆயுத குவிப்பு தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க பேசத் தயார்

தற்போது இந்த ஒப்பந்தத்திலிருந்து புடின் விலகுவதாக அறிவித்துள்ளதால், மீண்டும் நீண்டதூர அணு ஆயுத ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கும். புடினின் இந்த முடிவு பொறுப்பற்றது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ”அணு ஆயுத ஒப்பந்தம் பற்றி எந்த நேரத்திலும் ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையுடன் செயல்பட ரஷ்யா வேண்டுகோள்

அதுபோல், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர், “புடின், இந்த அவசர முடிவை மறுபரிசீலனை செய்வார் என பிரிட்டன் நம்புகிறது” எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்தி வைப்பதற்கான முடிவு தொடரக்கூடியது. அந்த செயலை தொடர வேண்டுமானால் அமெரிக்கா உடன்படிக்கையின்படி நம்பிக்கையுடனும், மனச்சாட்சியுடனும் செயல்படுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் புதினுக்குக் கிடைத்த தோல்வியா?

அதேநேரத்தில், பேச்சுவார்த்தைகளை ஏற்றுகொள்ளாதவரை இந்தப் போர் (உக்ரைன் - ரஷ்யா) முடிவு பெறப் போவதில்லை. மேலும், நேட்டோ நாடுகளின் உதவியால் உக்ரைன் வலிமையடைந்து வருகிறது; ரஷ்யா சோர்வடைந்து வருகிறது. அதேநேரத்தில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஒப்புக்கொண்டால் அது, புதினுக்குக் கிடைத்த தோல்வி மட்டுமின்றி, அவரது பதவிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டால், அவர் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை இழக்கும் நிலைமை ஏற்படலாம். இதனாலேயே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்கிற பேச்சுகளும் எழுந்துள்ளன.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com