தொடங்கியது வடகிழக்கு பருவமழை... இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

தொடங்கியது வடகிழக்கு பருவமழை... இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
தொடங்கியது வடகிழக்கு பருவமழை... இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

தமிழகத்துக்கு அதிக மழை பொழிவைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை இன்று துவங்கியுள்ளது.  

இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலம்தான். இதில், தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்குப் பருவ மழையால் இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் பயன் பெறுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவக் காலத்தில் குறைந்த அளவு மழையை மட்டுமே பெறும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி  உள்ளிட்ட சில மாவட்டங்கள் மட்டுமே தென்மேற்குப் பருவ மழையால் கணிசமான மழை பெறுகிறது. இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை கடந்த அக்டோபர் 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளில் இருந்து விலகிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 45 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது.

வடகிழக்குப் பருவமழை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். தமிழகத்துக்கு அதிக மழைப் பொழிவைத் தருவது இந்த வடகிழக்குப் பருவமழைதான். வடகிழக்குப் பருவ மழையால் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மழை பெறுகிறது தமிழகம்.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று (அக்.29) தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால், கடந்த வாரத்தில் துவங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை, சற்றே தாமதமாக இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக தொடங்கினாலும் மழையின் தன்மையை பாதிக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். வருகிற நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் இயல்பான மழை அளவு 44.8 சென்டிமீட்டர். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 59 சதவீதம் அதிக மழை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னங்கள் உருவாகின்றன. இந்த காலத்தில்தான் தமிழகத்தில் நிஷா புயல், ஜல் புயல், தானே புயல், நீலம் புயல், வர்தா, ஒக்கி, கஜா என பல புயல்கள் சென்னையையும், கடலோர மாவட்டங்களையும் தாக்கியுள்ளன. இந்நிலையில், நடப்பாண்டு புயல்கள் உருவானாலும் தமிழகத்தை தாக்க வாய்ப்பு இல்லை என்ற ஆறுதலான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை என்றால் என்ன?

தென்மேற்குப் பருவ காலங்களில் ஏற்படக்கூடிய காற்று இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள காற்றை குளிர்ச்சியடைய வைக்கும். இதன் காரணமாக, வட பகுதியில் காற்றின் அடர்த்தி அதிகமாகும், அப்போது காற்று அடர்த்தி குறைவாக உள்ள பகுதிகளில் அந்த ஈரக்காற்று வீசத் தொடங்கும். இந்த காற்று வடகிழக்கு திசையில் வீசுவதால் வடகிழக்குப் பருவக் காற்று என்கிறோம்.

வடகிழக்குப் பருவக் காற்றால் ஏற்படக் கூடிய மழை வடகிழக்குப் பருவமழை ஆகும். பின்னிரவு முதல் காலை வரை மழை பெய்வது  வடகிழக்குப் பருவ மழையின் குணாதிசயம். குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவை அருகாமையிலுள்ள காலங்களில், நாள் முழுவதும் தொடர் மழை நீடிக்கும். வடகிழக்குப் பருவமழை, தொடர்மழையாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை நீடிக்கும்.  வடகிழக்குப் பருவமழை காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகளில் மழைப் பொழிவு இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ”கோவம் வந்தா கைநீட்டுவாரா?”.. சுயமரியாதைக்காரி ’அம்மு’வுக்கு.. ஒரு ராயல் சல்யூட்!


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com