எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை - சுயதொழிலை நம்பியிருந்த பெண்கள் கண்ணீர் பேட்டி

எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை - சுயதொழிலை நம்பியிருந்த பெண்கள் கண்ணீர் பேட்டி
எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை - சுயதொழிலை நம்பியிருந்த பெண்கள் கண்ணீர் பேட்டி

நாட்டில் பல பெண்கள் தன் அன்றாடப் பிழைப்புக்கு தங்கள் தொழிலை மட்டுமே நம்பி குடும்பத்தையே நடத்தி வருகின்றனர். இந்த கொரோனா தொற்றால் அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. ஊரடங்கால் இவர்களின் தொழில் எவ்வாறு பாதித்துள்ளது என இப்போது வறுமையில் இருக்கும் சில பெண்கள் தங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்

ரூபா, டெய்லர்
எனது கணவருக்கு ஒருபக்க கை, கால் சரியாக வராது. நான் டெய்லர் வேலைபார்த்துதான் என் குடும்பத்தையே பார்த்துக் கொள்கிறேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பேருமே பள்ளிக்குச் செல்லும் வயது. இப்போது ஊரடங்கு என்பதால் யாரும் பெரிதாக தைப்பதில்லை. திருமணம் போன்ற விஷேசங்களுக்கு மேக் அப் போடுதல், மெஹந்தி போன்றவற்றையும் இடையிடையே செய்துவந்தேன். இப்போது எந்த வருமானமும் இல்லை. கணவருக்கு மாத்திரை, மருந்து வாங்கவே மிகவும் சிரமமாக இருக்கிறது. வீட்டு வாடகைகூட கொடுக்கமுடியவில்லை. அன்றாட சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

(கோப்பு புகைப்படம்)

மைதிலி, பூ வியாபாரம்
நான் ஊருக்குள் சென்று பூ விற்பேன். மாலை நேரங்களில் சந்தைகளில் கடை போடுவேன். எனது கணவருக்கு நிரந்தர வேலை இல்லை. எப்போதாவது கிடைக்கும் வேலைக்கு செல்வார். ஆனால் இப்போது எங்கள் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. காரணம், எனக்கு மூன்று குழந்தைகள். 2வது, 5வது மற்றும் 8வது படிக்கிறார்கள். பள்ளி நாட்களில் மதியம் அங்கேயே சாப்பிட்டு விடுவார்கள். இப்போது மூன்று நேரம் சாப்பாடு கிடைப்பதில்லை. யாரும் வெளியே செல்லாததால் பூ வாங்குதில்லை. ரேஷனில் வாங்கும் பொருட்கள்தான் இப்போது கைகொடுக்கிறது. சிலநேரங்களில் அதை வாங்கக்கூட கடன் தான் வாங்கவேண்டி இருக்கிறது.

சுந்தரி, டீக்கடை
எனக்கு கணவர் இல்லை. என்னுடைய ஒரு மகன் 11ஆம் வகுப்பு, பெரிய பையன் காலேஜ் போகிறான். இரண்டு மாதங்களுக்கு மேலாக கடையைத் திறக்கவில்லை. அதிலேயே நிறைய கடன் ஆகிவிட்டது. இப்போது கடை திறந்தாலும் கொரோனா ஒட்டிக்கொள்ளும் என யாரும் வருவதில்லை. பால், டீத்தூள் வாங்கவே காசு இல்லை. இதில் எங்கே இருந்து கடை நடத்துவது? தினமும் சாப்பிடுவது? வாங்கிய கடனை அடைப்பது?

சௌந்திரம், விவசாயி

என் கணவர் இறந்தபிறகு எங்களுக்கு இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை நான்தான் ஆள்வைத்துப் பார்த்துக்கொள்கிறேன். என் மகனின் திருமணத்திற்காக கணவர் கடன் வாங்கியிருந்தார். திடீரென இறந்துவிட்டதால் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தோம். இந்த நேரத்தில் கொரோனா வந்து எங்கள் நிலைலையை இன்னும் மோசமாக்கி விட்டது. மகன் வேலை செய்துகொண்டிருந்த கம்பெனியிலும் வேலை இல்லை என்று 4 மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டான். இந்த நிலத்தை நம்பி நிறைய லோன் வேறு வாங்கியிருந்தோம். ஆள் வைத்து வேலை செய்தால் கூலி கொடுக்கவேண்டும். எதற்கும் வழியில்லாமல் இப்போது தினமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நிர்மலாதேவி, ஹோட்டல்
நானும் என் கணவரும் சேர்ந்து என் பெயரில்தான் இந்த ஹோட்டலை நடத்திவருகிறோம். அவருக்கு முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட்டதால் நீண்ட நேரம் உட்கார முடியாது. நான்தான் முழு நேரமும் கடையில் இருப்பேன். சமைக்க இரண்டு பேர் இருக்கிறார்கள். இந்த கொரோனா பரவுகிறது என்று சொல்லி கடையைத் திறக்க விடமாட்டோம் என்கிறார்கள். அப்படியே திறந்தாலும் முன்பு போல வியாபாரம் நடப்பதில்லை. கடைக்கு உள்ளே வரவே பயப்படுகிறார்கள். சமைப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததால் அவர்களையும் நிறுத்திவிட்டேன். அவர்களும் இப்போது கஷ்டப்படுகிறார்கள். கிராம விடியல், சீட்டு என வாராவாரம் கட்ட வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் கொரோனா போகும்வரைக்கும் கொஞ்சம் ஒத்திவைத்தால் நாங்களும் பிழைத்துகொள்வோம். கொரோனா பயத்தை விட நாளைக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற பயம்தான் தினமும் கண் முன்னால் நிற்கிறது.


இதுபோன்ற எத்தனை லட்சம் பெண்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். தன் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் பெண்களுக்கென்று சில திட்டங்கள் மற்றும் சலுகைகளை அரசாங்கம் கொண்டுவந்தால் இவர்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com