'நிவர்' புயல் Updates: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் என ராணுவம் அறிவிப்பு

'நிவர்' புயல் Updates: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் என ராணுவம் அறிவிப்பு
'நிவர்' புயல் Updates: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் என ராணுவம் அறிவிப்பு

நிவர் புயல் தொடர்பான புதிய லைவ் அப்டேட்களுக்கு > நிவர் புயல் Live Updates https://bit.ly/3nRPgmI

'அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ள 'நிவர்' புதன்கிழமை நள்ளிரவு காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். இதனால், தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகள், வட உள்மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'நிவர்' புயல் தொடர்பான அப்டேட்ஸ் இங்கே... 

நவ.25, 2020 / காலை 8.44: நிவர் புயல் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்

நவ.25, 2020 / காலை 8:32: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் என இந்திய ராணுவம் அறிவிப்பு

வ.24,2020/ இரவு 10:25: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் திறக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் உபரிநீர் திறக்கப்பட்டாலும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நவ.24,2020/ இரவு 10:15: நிவர் புயல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.24,2020/ இரவு 09:57: புயலை எதிர்கொண்டு மக்களை காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் அரசு தயாராக உள்ளது என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் புயலால் பலத்த காற்று, கனமழை பெய்வதால் மக்கள் தேவையின்றி வெளியே செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

நவ.24,2020/ இரவு 09:54: அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் தீவிர புயலாக மாறி அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 320 கி.மீ தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 350 கி.மீ, சென்னையிலிருந்து 410 கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. நவ.25இல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கி.மீ நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

நவ.24,2020/ இரவு 09:25: சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் புயல் நிலவரத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து உடனுக்குடன் மீட்புப்பணிகளை கவனிக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நவ.24,2020/ இரவு 09:15: புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், காரைக்குடி, கும்பகோணம், நாகை, புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் சிஏ தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24,25 தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

நவ.24,2020/ இரவு 09:01: நிவர் புயல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி - பெங்களூரு இடையே வழக்கம்போல் விமான சேவை இயங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

நவ.24,2020/ இரவு 08:38: நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் 4,733 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், இந்த முகாம்களில் 12.98 லட்சம் பேரை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து முகாம்களிலும் தற்போது 2,534 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நவ.24,2020/ இரவு 08:20: பெட்ரோல், டீசல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழு விவரம்: நாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்... 

நவ.24,2020/ இரவு 08:15: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாமலிருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு விவரம்: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் நிறுவனம் 

நவ.24,2020/ இரவு 08:11: திருச்சி வரும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 

நவ.24,2020/ இரவு 08:08:  புயல் காரணமாக நாளை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விடுமுறை தின அட்டவணைப்படி காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை நாளை மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நவ.24,2020/ இரவு 07.44: நிவர் புயல் காரணமாக காரைக்காலில் நாளை காலை 6 மணிமுதல் 24 மணிநேரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் புயல் காரணமாக வரும் 26ஆம் தேதி காலை 6 மணிவரை 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

நவ.24,2020/ இரவு 07.20: நிவர் புயலால் பயிர்கள் பாதித்தால் உரிய இழப்பீடு பெறமுடியும்; விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.  

நவ.24,2020/ இரவு 07.06: தற்போதைய நிலவரப்படி, முதலில் தீவிரப்புயலாகவும், அதைத் தொடர்ந்து அதி தீவிரப்புயலாகவும் உருவெடுக்கும். வலுப்பெறுகிற காரணத்தால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 120-130கிமீ வேகத்திலும், சமயங்களில் 145கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.24,2020/ மாலை 06.35: தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தியுள்ளார். இன்னும் 4000 அடிவரை நீரை தேக்கி வைக்கமுடியும் என்பதால், அதிக மழை தொடர்ச்சியாக பெய்து 22 அடியை எட்டினால் மட்டுமே ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஏரிக்கு நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நவ.24,2020/ மாலை 06.15: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்காக மட்டும் குறைந்த அளவு இயக்கப்பட்டு வந்த புறநகர் ரயில்களும் நாளை காலை 10 மணிமுதல் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரத்தை பொறுத்தே புறநகர் ரயில்கள் இயக்கம் இருக்கும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நவ.24,2020/ மாலை 06.10: புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டது. கடற்கரையிலிருந்து பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரியிலிருந்து 380 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதற்காக புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டுள்ளது.

நவ.24,2020/ மாலை 06.00: புயல் காரணமான தொடர்மழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முழுவிவரம்: விடாது பெய்யும் மழை... போக்குவரத்து நெரிசலால் திணறும் சென்னை மாநகரம் 

நவ.24,2020/ மாலை 05.53: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 27ஆம் தேதி முதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வுக்கூட்டங்கள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆய்வுக்கூட்டங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

நவ.24,2020/ மாலை 05.48: நிவர் புயல் காரணமாக சென்னையில் மீட்புப் பணிக்கு இந்திய கடற்படையின் 5 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் நீச்சல் வீரர்கள், வெள்ள நிவாரண மீட்பு வீரர்கள் கடலோரப் பகுதிகளில் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.24,2020/ மாலை 05.40:  நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட உதவி எண்களை தொடர்புகொள்ளலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி வாரியம் தெரிவித்துள்ளது. 

நவ.24,2020/ மாலை 05.28: கல்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவ கிராமங்களில் முழுவீச்சில் முன்னேற்பாட்டுப் பணிகள் நடந்துவருகின்றன. மேலும் படகுகளை கரையில் நிறுத்தும் பணி தீவிமாகிவருகிறது. 

நவ.24,2020/ மாலை 04.54: நிவர் புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரித்த கடல் அலைகள்...

நவ.24,2020/ மாலை 04.18: நிவர் புயல் காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணிமுதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.24,2020/ பிற்பகல் 03.57: நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில், புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

நவ.24,2020/ பிற்பகல் 03.48: சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்

புழல் ஏரி:

மொத்த கொள்ளளவு-3300 மி.கன அடி.

நீர் இருப்பு- 2422 மி.கன அடி.

நீர்வரத்து- 354 கன அடி

நீர் வெளியேற்றம்- 135 கன அடி.


சோழவரம் ஏரி:

மொத்த கொள்ளளவு-1081 மி.கன அடி.

நீர் இருப்பு-178 மி.கன அடி.

நீர்வரத்து- 34 கன அடி

நீர் வெளியேற்றம்-இல்லை.


செம்பரம்பாக்கம் ஏரி:

மொத்த கொள்ளளவு-3645 மி.கன அடி.

நீர் இருப்பு- 2913 மி.கன அடி.

நீர்வரத்து- 220 கன அடி

நீர் வெளியேற்றம்- 106 கன அடி.


பூண்டி ஏரி:

மொத்த கொள்ளளவு-3231 மி.கன அடி.

நீர் இருப்பு- 1786 மி.கன அடி.

நீர்வரத்து- 625 கன அடி

நீர் வெளியேற்றம்- 125 கன அடி.


வீராணம் ஏரி:

மொத்த கொள்ளளவு-1465 மி.கன அடி.

நீர் இருப்பு- 866 மி.கன அடி.

நீர்வரத்து- 210 கன அடி

நீர் வெளியேற்றம்- 1383 கன அடி.


கண்ணன்கோட்டை:

மொத்த கொள்ளளவு- 500 மி.கன அடி.

நீர் இருப்பு- 140 மி.கன அடி.

நீர்வரத்து- இல்லை.

நீர் வெளியேற்றம்- இல்லை 

நவ.24,2020/ பிற்பகல் 03.45: சென்னை - எழிலகம் புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் பழனிசாமி நேரடி ஆய்வில் ஈடுபட்டார்.

நவ.24,2020/ பிற்பகல் 03.34: நிவர் புயல் காரணமாக தென்மாவட்டஙகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் 24 ரயில்கள் நாளை ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவ.24,2020/ பிற்பகல் 03.28: நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 430 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியி இருந்து 380 கி.மீ தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி பின்னர் அதி தீவிர புயலாக நிவர் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.24,2020/ பிற்பகல் 03.16: நிவர் புயல் எதிரொலியாக மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அங்கிருக்கும் மீனவ கிராம மக்கள் அங்காங்கே இருக்கும் சமூக நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முழுவிவரம்: “300 பேருக்கு 50 உணவு பொட்டலங்கள்... ” - வேதனையில் மாமல்லபுரம் மீனவ மக்கள் 

நவ.24,2020/ பிற்பகல் 02.16: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நவ.24,2020/ பிற்பகல் 02.08: நிவர் புயல் குறித்த வீண் வதந்திகளை நம்பாமல், அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கலாம் என்று பொதுமக்களை தமிழகக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நவ.24,2020/ பிற்பகல் 02.01: திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்! அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்! மக்களைப் பாதுகாப்பது நமது கடமை!” என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

நவ.24,2020/ பிற்பகல் 1.47:  நிவர் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே காலை முதலே சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. 

நவ.24,2020/ பிற்பகல் 1.37: நிவர் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார். முழு விவரம் இதோ....புயல் 3 மணிநேரமாக நகராமல் இருப்பதற்கு காரணம் என்ன? வானிலை மையம் விளக்கம் 

நவ.24,2020/ பிற்பகல் 1.16: புதுச்சேரியில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடல் பகுதிகளும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அவற்றை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டபோது...

நவ.24,2020/ பிற்பகல் 1.06: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்ய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்ததும் நிலையை ஆய்வு செய்த பின்னரே பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.24,2020/ பிற்பகல் 1.00: 24 மணிநேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவ.24,2020/ பிற்பகல் 12.39: தமிழகத்தின் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் 8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. > விரிவாக வாசிக்க > நிவர் புயல்: இன்று 3, நாளை 8 மாவட்டங்கள்... அதீத கனமழை எச்சரிக்கை!


நவ.24,2020/ பிற்பகல் 12.31: கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவ.24,2020/ பிற்பகல் 12.14:வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கடந்த 3 மணிநேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 450 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ தொலைவிலேயே கடந்த 3 மணிநேரமாக புயல் மையம் கொண்டுள்ளது. 

நவ.24,2020/ பிற்பகல் 12.10 : காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 30 மீனவர்களை காணவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அவர்களை கடலோர காவல்படை உதவியோடு தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

நவ.24,2020/ காலை 11.47: நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் வரும் 26 தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுவிவரம் இதோ.. நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாள்கள் ஊரடங்கு ! 

நவ.24,2020/ காலை 11.37: 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்கவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. > முழுவிவரம்: 2015 சென்னை வெள்ளத்திற்கு பின்பும் பாடம் கற்காதது ஏன்? - உயர்நீதிமன்றம் அதிருப்தி 

> புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன? - புதுச்சேரி முதல்வர் நாராணயசாமியுடன் களத்திலிருந்து பேட்டி...

நவ.24,2020/ காலை 11.19: புயல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, நாகை உள்ளிட்ட இடங்களில் நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.24,2020/ காலை 11.10: நிவர் புயல் கரையை கடக்கும் நேரத்தில் விழுப்புரத்தில் நாளை கடைகளை திறக்க வேண்டாம் எனவும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.

நவ.24,2020/ காலை 10.56: நிவர் புயல் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் போனில் பேசியதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நவ.24,2020/ காலை 10.55: நிவர் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் முழு விவரம் இதோ... > நிவர் புயல்: கடலோர மாவட்டங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? 

நவ.24,2020/ காலை 10.50: நிவர் புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். முழுவிவரம்: நிவர் புயல் எச்சரிக்கை: 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு 

நவ.24,2020/ காலை 10.44: சென்னை மக்கள் நிவர் பாதிப்பு குறித்து புகாரளிக்க அழைபேசி எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். 044-2538 4530, 044 - 2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. >  முழுவிவரம்: “அச்சப்பட வேண்டாம்; நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது” - சென்னை மாநகராட்சி ஆணையர்

நவ.24,2020/ காலை 10.33: நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது எனவும் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். > விரிவாக வாசிக்க > “அச்சப்பட வேண்டாம்; நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது” - சென்னை மாநகராட்சி ஆணையர்

நவ.24,2020/ காலை 10.24: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நவ.24,2020/ காலை 10.20: சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ.ஆக அதிகரித்து நகர்ந்து வருகிறது எனவும் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.24,2020/ காலை 10.19: சென்னை - திருவான்மியூர் கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

நவ.24,2020/ காலை 10.10: 90 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர்களின் நிலை என்ன ஆனது எனவும் காரைக்கால் மீனவ குடும்பங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நவ.24,2020/ காலை 10.00: நிவர் புயல் நெருங்கி வருவதால் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

நவ.24,2020 | காலை 8.35: நேரலை: வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. சென்னையில் இருந்து 470 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது.

நவ.24,2020 | காலை 8.30: நேரலை: நிவர் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நவ.23,2020 | இரவு 9.30: நேரலை: நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு நவ.30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நவ.23,2020 | இரவு 9.00: நேரலை: நிவர் புயல் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புயலின் திசைமாற வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது “ தற்போதுள்ள சூழலில் 60-70 சதவீதம் கடலூர் அருகே நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. 25 ஆம் தேதி பிற்பகலில் புயல் நெருக்கமாக வரும்போது திசை மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. புயல் வலுவடைகிறதா அல்லது வலுவிழக்கிறதா என்பதை பொறுத்து எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும் என நாளை முடிவு செய்யலாம். கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பொழியும் வாய்ப்புள்ளது, ஒருவேளை மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடந்தால் சென்னைக்கும் மிக கனமழை வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

நவ.23,2020 | இரவு 8.00: நேரலை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.

வரும் நவம்பர் 25 ஆம் தேதி நிவர் புயல் கரையை கடக்கவிருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நிவர் புயலை முன்னிட்டு செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.

நிவர் புயல் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு முக்கிய அம்சங்கள்

  • பொதுமக்கள் மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிகஅருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்
  • வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்
  • பலத்த காற்று வீசும் போது மரங்கள் விழ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில்
    செல்வதை தவிர்க்கவும்
  •  பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டறிந்து அதன்படி செயல்பட வேண்டும் 
  • வட தமிழக கடற்கரையோரம் புயல் கரையை கடக்க உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 6 பிரிவுகள் கடலூரிலும், 2 பிரிவுகள் சென்னையிலும்,
    தேவையான கருவிகளுடன் தங்க வைக்க வேண்டும்
  • அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள்,போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை பொதுமக்கள் போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்
  • நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரேற்றம் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • புயல் பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
    நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்
  • ஆதார், ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வையுங்கள்

நவ.23,2020 | இரவு 7.00: நேரலை: நிவர் புயலுக்கு செய்யபட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?- வருவாய் துறை அமைச்சர் உதயகுமாருடன் நேரலையில்...

நவ.23,2020 | மாலை 5.40: படகுகள் சேதமடைந்தால் உடனடி நிவாரண உதவி வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “143 படகுகளில் மீன்பிடிக்க சென்ற சென்னையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று இரவு கரை திரும்புவர். தாழ்வான பகுதிகளில் நீரில் மக்கள் சிக்கினால் மீட்பதற்கு மீன்பிடி படகுகளுடன் மீனவர்கள் தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

நவ.23,2020 | மாலை 5.25: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் கரையிலேயே படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் காற்றில் ஈரப்பதமும் அதிகம் காணப்படுகிறது.

நவ.23,2020 | மாலை 5.10: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 4713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவ.23,2020 | பிற்பகல் 4.35:  'நவ.25-ல் புயல் கரையைக் கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்!' > சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வரும் 25-ம் தேதியன்று பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். இதனால், சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் (நவ.24, 25) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், தாஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.

ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்; மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 24, 25 ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் 55-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. 24, 25 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.

நவ.23,2020 | பிற்பகல் 4.15: மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் ரத்து > புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் முழுவீச்சில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகும் நிலையில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவ.23,2020 | பிற்பகல் 4.10: நிவர் புயல் முன்னேற்பாடுகள் பற்றி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் மத்திய கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆலோசனையில் ஈடுபட்டார். 

நவ.23,2020 | பிற்பகல் 01.20மணி: எங்கெல்லாம் அதீத கனமழை?

நவ.23,2020 | பிற்பகல் 01.15 மணி: இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். அப்போது, நிவர் புயல், 7 பேர் விடுதலை, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. > முழு விவரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி 

நவ.23,2020 | பிற்பகல் 01.00 மணி: தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: அதி தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்': எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா?

நவ.23,2020 | பிற்பகல் 12.30 மணி: நிவர் புயலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அமைச்சகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நவ.23,2020 | காலை 11.40 மணி: தமிழகத்தை நிவர் புயல் நெருங்கும் சூழலில், தயார் நிலை குறித்து முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்துகிறார்.

நவ.23,2020 | காலை 11.30 மணி: புயல் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். > முழு விவரம்: "புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்"-அமைச்சர் தங்கமணி

நவ.23,2020 | காலை 10.30 மணி:கஜா புயலை போல நிவர் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். > முழு விவரம்: ‘கஜா‘ புயலைபோல ‘நிவர்‘  பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது: ஜெயக்குமார் 

நவ.23,2020 | காலை 10.05 மணி: சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 25 ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: ‘நிவர்’ தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

> 'நிவர்' புயல் காரணமாக மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் முழு விவரம் > “நிவர் புயல் - இதையெல்லாம் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்”- பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தல் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com