நிரவ் மோடியை பிடிப்பதில் அலட்சியம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
பஞ்சாப் வங்கியை பயன்படுத்தி கோடிகளில் மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு வெளியேறிய நிரவ் மோடியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. வங்கிகள் எல்லாம் மத்திய அரசைப் பார்த்துக் கேட்க வழக்குப் பதிவு செய்து, சிபிஐயை பயன்படுத்தி, அயல்நாட்டு உறவுகளை பயனபடுத்தி, இண்டர்போல் காவல்துறையை பயன்படுத்தி இன்னும் நிரவ் மோடியை பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
உலகம் சுற்றும் வாலிபனாக இருக்கும் நிரவ் மோடியோ எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சி.பி.ஐக்கு மெயில் அனுப்புவார். நாடு விட்டு நாடு செல்வார். பாஸ்போர்ட் முடக்கப்பட்டாலும் அதையே வைத்துக் கொண்டு பல நாடுகளுக்கு செல்வார், பலரும் பாஸ்போர்ட் பெற முடியாமல் இருக்க பல நாடுகளின் பாஸ்போர்ட் நிரவ் மோடியிடம் இருக்கும். இப்படி யார் கண்ணிலும் படாமல் (பட்டாலும் தெரியாதோர் பலர் இருக்க) உலகை வலம் வரும் வல்லமை இவருக்கு உண்டு.
நிரவ் மோடியின் மோசடி தெரிந்தது அவரது சொத்துகள் முடக்கப்பட்டன. சொத்துகளும் தொழிலும் இல்லாமல் நிரவ் மோடி இந்தியா திரும்புவார் என நினைத்திருப்பார்கள் போல. ஆனால் அவரோ தனது 450 கோடியை தனது சகோதரியின் கணக்குக்கு சட்டப் பூர்வமாக மாற்றி நாட்டை விட்டு சென்று விட்டார். சிங்கப்பூர் சென்று அந்த ஊரில் வசித்து வரும் தொழிலதிபரான 1.5 லட்சம் சிங்கப்பூர் டாலர் மாத வருமானம் வருகிறது என்று பாஸ்போர்ட் விண்ணப்பித்திருக்கிறார்.
நிரவ் மோடியை தேடும் படலத்தை இந்தியா தொடங்கி இண்டர்போல் வரை சென்றது. இறுதியில் மோடி லண்டனில் இருப்பது தெரிந்தது. பிடித்து விடலாம் என்று நினைத்தார்கள் , தேடினார்கள் தினமும் ஒரு தகவல் கிடைத்தது, பாஸ்போட் முடக்கப்பட்டது. ஆனால் ட்ரெயின் ஏறி வேறு நாட்டுக்கு சென்றார் நிரவ். இது தொடர்பாக இண்டர்போல் போலீஸ் வெளியிட்ட அறிவிப்பில் பாஸ்போட் முடக்கப்பட்ட பின் நிரவ் மோடி 4 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்தது தெரிய வந்தது. முடக்கப்பட்ட பாஸ்போட்டில் எப்படி பயணிக்க முடிகிறது என கேட்டால் பாஸ்போட்டை முடக்கினாலும் அதன் தகவல்களை அனைத்து நாடுகளோடும் பகிர்ந்து அவர்களது தகவல் சேமிப்பு மையத்தில் சேர்க்காதவரை அவரால் பயணிக்க முடியுமாம் ; மேலும் நிரவ் மோடிக்கு சிங்கப்பூர் மற்றும் மொராக்கோ பாஸ்போட் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இப்படி அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து கொண்டிருக்க தற்போது வெளியாகியிருக்கிறது ஒரு அதிர்ச்சி தகவல். நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர வேண்டுமானால் வழக்கை விசாரிக்கும் அமைப்போ அல்லது உள்துறை அமைச்சகமோ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் குறிப்பிட்ட நபரை இந்திய அரசாங்கம் தேடுகிறது அல்லது அவர் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அவரை இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என கேட்க வேண்டும். ஆனால் இதுவரை மத்திய வெளியுறவுத்துறைக்கு அது போன்ற எந்த கோரிக்கையும் அதிகாரப் பூர்வமாக இல்லை. எந்த கடிதமும் இல்லாமல் வெளியுறவுத் துறை மற்ற நாடுகளுக்கு குறிப்பிட்ட நபரை இந்தியா அனுப்புமாறு கோரவும் முடியாது. இப்படித்தான் நிரவ் மோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நிரவ் மோடியோ லண்டனில் இருந்து ரஸ்ஸல்ஸ் சென்று விட்டார். கடந்த 12-ம் தேதி கூட நிரவ் மோடி பயணம் செய்திருக்கிறார். இன்னும் பல நாடுகளுக்கு பயணம் செய்கிறார். இந்தியாவுக்கே வந்து சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்குள் பிடித்து விட்டால் பஞ்சாப் வங்கியின் பணம் தப்பும்..