\
Niram Marum Cinema 19 – Jananathan: The Red Flag in Tamil Cinema
நிறம் மாறும் சினிமா 19 Pt web

நிறம் மாறும் சினிமா 19 | ஜனநாதன் : சினிமாவில் பறந்த செங்கொடி!

அரசியல் சினிமாக்களை வெற்றிபெறவைக்க முடியும் என்று நிரூபித்தவரும் ஜனநாதனே. அதனால்தான் அதற்குப்பிறகு வெற்றிமாறன், பா.இரஞ்சித் மாரிசெல்வராஜ் என்று ஏராளமானோர் அரசியல் சினிமாக்களை உருவாக்க முடிந்தது.
Published on: 

தமிழ் சினிமாவில் ஜனநாதனின் வருகை மூன்றுவகையில் முக்கியமானது!

கலையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று நிறுவிய இயக்கம் திராவிட இயக்கம். தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கம் தவறவிட்ட இடமும் இதுவே. அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ். ஆர், சிவாஜி, எம்.ஜி.ஆர், கண்ணதாசன் என்று திராவிட இயக்கத்தின் மூலம் உருவான கலைஞர்கள் மத்தியில் ஒற்றைக்குரலாய் ஒலித்த கம்யூனிச குரல் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் குரலே. நிமாய்கோஷ் போன்றவர்கள் பின்னாளில் உருவாகி இடதுசாரி சினிமாக்களைப் படைத்தளித்தாலும் அவை கலையம்சம் மிக்க சினிமாக்களாக இருந்தபோதும், மக்கள் மத்தியில் சென்று சேரும் வெற்றிகரமான சினிமாக்களாக மாறவில்லை. அந்தவகையில் தமிழ் சினிமாவில் முதல் வெற்றிகரமான கம்யூனிச கலைஞர் ஜனநாதனே.

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு ஒருவகையில் திராவிட சினிமா மௌனித்துவிட்டது. வசனங்களை மையமாகக் கொண்ட திராவிட சினிமாவிலிருந்து காட்சிபூர்வமான சினிமாக்களுக்குத் தமிழ் சினிமா மாறியது. பாரதிராஜா, பாலச்சந்தர், மணிவண்ணன், மணிரத்னம் எனப் பலரும் அவ்வப்போது அரசியல் மற்றும் சமூகப்பிரச்னைகளைப் பேசும் சினிமாக்களை எடுத்தபோதும் மணிவண்ணனைத் தவிர மற்றவர்கள் யாரும் திட்டவட்டமான முற்போக்கு அரசியல் சினிமாக்களை எடுக்கவில்லை. பாலச்சந்தரும் மணிரத்னமும் பார்ப்பனிய இந்துத்துவ சினிமாக்களையே எடுத்தனர். மணிவண்ணனும்கூட வணிக அம்சங்கள் தூக்கலான சில முற்போக்குப் படங்களை எடுத்தார். ஜனநாதன்தான் வெளிப்படையான அரசியல் அடையாளங்களுடன் கூடிய முற்போக்கு சினிமாவை எடுத்தார். திராவிட சினிமாவின் முடிவுக்குப் பின் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு 'கலை அரசியலுக்காகவே' என்ற நம்பிக்கையைத் தன் சினிமாக்களில் முன்வைத்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனே.

அதேபோல் அரசியல் சினிமாக்களை வெற்றிபெறவைக்க முடியும் என்று நிரூபித்தவரும் ஜனநாதனே. அதனால்தான் அதற்குப்பிறகு வெற்றிமாறன், பா.இரஞ்சித் மாரிசெல்வராஜ் என்று ஏராளமானோர் அரசியல் சினிமாக்களை உருவாக்க முடிந்தது. 20 ஆண்டுகால அரசியல் சினிமாக்களுக்கான முன்னத்தி ஏர் அவர். கடந்தகாலத்தை மீட்டெடுத்த தொடர்ச்சியாகவும் எதிர்காலத்துக்குப் பாதை சமைத்த நம்பிக்கையாகவும் ஒரே நேரத்தில் இருந்தவர் தோழர். ஜனநாதன்.

ஜனநாதன் மாற்று சினிமாக்கள் எடுப்பதாகவோ கலை சினிமாக்களை எடுப்பதாகவோ சொன்னவரில்லை. மக்களைச் சென்றடையும் வெகுஜன சினிமாக்களை எடுப்பதையே விரும்பியவர்; செய்தவர். தனது சினிமாக்களில் இருந்த பலவீனங்களை வெளிப்படையாகச் சொன்னவர். எங்கும் அவர் தன்னை முழுமையான படைப்பாளியாக முன்னிறுத்திக்கொண்டதில்லை. 'புத்தகம் பேசுது' இதழுக்கு அளித்த நேர்காணலில் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசிய ஜனநாதன் தன்னைவிட தன் உதவி இயக்குநர் ரோகாந்த் சினிமா குறித்து அதிகம் அறிந்தவர் என்று திறந்த மனதுடன் சொல்கிறார். மேலும் சினிமா என்பது கதை, திரைக்கதை, வசனம் என்பதுடன் முடிந்துவிடுவதில்லை. அதைத்தாண்டித் தொழில்நுட்பக் கலைஞர்களின், தொழிலாளர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பதை வலியுறுத்தினார். அத்தகைய தொழில்நுட்பங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார்.

தன் படங்கள் 'எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ச்சி' என்பதை வெளிப்படையாக முன்வைத்தார்.

திராவிட இயக்கத்தில் இருந்து மார்க்சியத்துக்கு வந்துசேர்ந்தவர் ஜனநாதன். இந்த தொடர்ச்சியை அவரது சினிமாக்களிலும் காணலாம். வர்க்கரீதியான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் போலவே சாதியத்தின் மீதான விமர்சனத்தையும் தொடர்ச்சியாகத் தன் படங்களில் பதிவு செய்தார். மக்கள் அரசியல் பேசும் சினிமாக்கள் என்றாலும் அதைச் சொல்வதற்கு ஒரு நாயகன் அவருக்குத் தேவைப்பட்டார். அதனால்தான் தன் படங்கள் 'எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ச்சி' என்பதை வெளிப்படையாக முன்வைத்தார். ஜனநாதனைத் தொடர்ந்து அரசியல் சினிமாக்களை இயக்கும் இரஞ்சித். வெற்றிமாறன், மாரி.செல்வராஜ் என எல்லோருமே இத்தகைய நாயக பாணி சினிமாக்களையே பெரிதும் இயக்குகிறார்கள்.

ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாக்களில் இருந்து ஜனநாதன் வேறுபடும் முக்கியப்புள்ளி, பெண்பாத்திரச் சித்திரிப்புகள்.. பல முற்போக்குக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் திராவிட சினிமாக்கள் ஆண்மய்ய சினிமாக்களே. குடும்ப அமைப்புக்குள் கட்டுப்பட்ட, பண்பாட்டைப் பேணும் பெண்களையே லட்சியப் பெண்களாகச் சித்திரித்த சினிமாக்கள். எம்.ஜி.ஆர் சினிமாக்களில் ஆண்மையவாதம் உச்சத்துடன் ஒலித்தது. 'இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை', 'பொம்பளை சிரிச்சாப் போச்சு' என்று வரையறைகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தன எம்.ஜி.ஆர் சினிமாக்கள். இதிலிருந்து முற்றிலும் விலகியவை ஜனநாதன் சினிமாக்கள்.

அவரது படங்களின் பெண்பாத்திரங்கள் தனித்துவமானவர்கள். சுயேச்சையான எண்ணம் கொண்டவர்கள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறையாதவர்கள். 'இயற்கை' படத்தின் நான்சி, மெர்சி, 'ஈ' படத்தின் ஜோதி, 'பேராண்மை' கல்லூரி மாணவிகள், 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' பெண் போராளி குயிலி என தனித்துவப் பெண் பாத்திரங்களை உருவாக்கி அரசியல் உரையாடலை நிகழ்த்தினார் ஜனநாதன்.

இயற்கை

முதல் படம் என்ற அளவில் வரம்புக்குட்பட்ட அரசியலைக் கொண்டது 'இயற்கை' அதேநேரத்தில் 'இயற்கை' வெண்ணிற இரவுகளைத் தழுவிய காதல்சினிமாதான் என்றபோதும் ஒரு அசாதாரண அழகியல், படம் முழுவதும் கவிந்திருக்கும். கடலோர மனிதர்களின் கொண்டாட்டமும் எளியவாழ்க்கையும் இயல்பாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கும். யாருடைய வாழ்க்கையைப் பதிவுசெய்வதில் ஜனநாதனுக்கு அக்கறை என்பதை 'இயற்கை' படத்திலேயே கோடிட்டுக் காட்டியிருப்பார். கடலோரத்து எளிய மனிதர்கள் மற்றும் கப்பல் தொழிலாளர்களின் உறவு, சிறு பூசல், கொண்டாட்டம் ஆகியவற்றை அழகியலுடன் பதிவு செய்திருப்பார். ஒளிப்பதிவு, இசை, கலை, இயக்கம் ஆகியவை 'இயற்கை' படத்தின் நேர்த்திக்குத் துணைநின்றன. வணிகரீதியிலான வெற்றியும் தேசிய விருதும் ஜனநாதனுக்கு அங்கீகாரத்தை அளித்ததுடன் அடுத்து நேரடியான அரசியல் சினிமாவை உருவாக்குவதற்கான துணிச்சலையும் அவருக்கு வழங்கியது.

அவரது இரண்டாவது படமான 'ஈ' மிக முக்கியமான அரசியல் சினிமா. தமிழின் சிறந்த சினிமாக்களில் ஒன்று. மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களை மருந்துகளுக்கான பரிசோதனைக் களமாகப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்த முதல் படம் ‘ஈ’ தான். மேலும் ஒரு சேரி இளைஞனின் விளிம்புநிலை வாழ்க்கை இதற்கு முன் இவ்வளவு எதார்த்தமாக தமிழ் சினிமாவில் பதிவு செய்யப்பட்டதில்லை. பார் டான்சராக வரும் முஸ்லீம் பெண், காதல் புனிதமானது என்றே சொல்லப்பட்ட தமிழ்கூறு நல்லுலக சினிமா வரலாற்றில் பணம் வாங்கி தன் காதலியை விற்க முனையும் இளைஞன், வெளிப்படையான நக்சல்பாரி போராட்ட அரசியல் என்று பல்வேறு கூறுகளை இணைத்த ஒரு அற்புதமான சினிமா ‘ஈ’.

சினிமாவில் அரசியல் என்றால் பரபரப்பான செய்திகளை வணிகக் கூறுகளுடன் திரைப்படமாக்குவது என்ற செல்வமணி, பார்ப்பன - இந்துத்துவப் பார்வையுடன் அரசியலை முன்வைத்து தேசிய அளவிலான சந்தையைப் பயன்படுத்துவது என்ற மணிரத்னம் பாணிகளில் இருந்து முற்றிலும் விலகி சர்வதேச அரசியலைக் கச்சிதமாகச் சித்திரித்த சினிமா. இதுவரை வெளியான ஜனநாதனின் நான்கு சினிமாக்களில் இதுவே மிகச்சிறந்த சினிமா. சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் 'ஈ' என்னும் இளைஞன், ஒட்டுமொத்த மானுடத்துக்கே பேராபத்தாய் விளங்கும் முதலாளித்துவ வணிகவெறி, அதற்குத் துணைபோகும் பார்ப்பன தரகு டாக்டர், சமூகத்தின் ஒழுக்கவாதப் பார்வையில் இழிவாக நோக்கப்படும் பார் டான்சர், ஆயுதமேந்தியதாலேயே குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மார்க்சியப் போராளி என ஜனநாதன் உருவாக்கிய பாத்திரங்கள் அத்தனையும் அற்புதம். திரைக்கதை, காட்சியமைப்பு, பாத்திர உருவாக்கம், வசனங்கள் என முழுமையான சிறந்த சினிமாவாக உருவான ’ஈ' தான் பல்லாண்டுகாலத்துக்கு முன்மாதிரி அரசியல் சினிமாவாக நீடித்தது. இனியும் அது உயர்வுடன் மதிப்பிடப்படும். இந்த ஒரே ஒரு படைப்பு மட்டுமே போதும், ஜனநாதன் என்ற கலைஞனின் உயரங்களை மதிப்பிட.

'எம்.ஜி.ஆர் சினிமாக்களைத்தான் எடுக்கிறேன்' என்று ஜனநாதன் சொன்னாலும் முன்னிரு படங்களில் பெரிதாக நாயகப் பிம்பம் இல்லாததைக் கவனிக்கலாம். அதிலும் 'இயற்கை' முழுக்க ஒரு பெண்ணின் காதலையும் அவள் தேர்வையும் மய்யப்படுத்திய படம். எம்.ஜி.ஆர் படங்களில் அவரைத்தான் இரு பெண்கள் காதலிப்பார்கள். அவர்களில் ஒருவரை எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுப்பார். ஆனால் ‘இயற்கை’யிலோ நான்சியைத்தான் இரு ஆண்கள் காதலிக்கிறார்கள். முடிவெடுக்க வேண்டிய பொறுப்போ நான்சியின் கைகளில்.

'ஈ' படத்தின் நாயகனும் எம்.ஜி.ஆரைப் போல ஒழுக்கவாத நாயகன் அல்ல. குடி, சிகரெட், திருட்டு, காதலியை விலைபேசுவது என எதிர்மறைக்குணங்களைக் கொண்டவன். ஆனால் அதனால் மட்டும் அவன் படத்தில் வில்லனாக மாறிவிடுவதில்லை. சொல்லப்போனால் ஜனநாதனின் எல்லாப்படங்களிலும் ஒழுக்கவாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில்லை. 'ஈ' படத்தில் மற்ற ஆண்களைவிட பார் டான்சராக வரும் ஜோதிதான் கூடுதல் அறவுணர்வுடன் இருக்கிறாள். அவள்தான் போராளி நெல்லைமணியின் உயிரைக் காக்க உதவுகிறாள். முதலாளித்துவச் சமூகத்தில் ஒழுக்கம், குற்றம் குறித்த மதிப்பீடுகளை 'ஈ' படத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்கினார் ஜனநாதன்.

சர்வதேச அரசியல் தெளிவுடன் எடுக்கப்பட்ட முதல் சினிமா 'ஈ'தான். அதை வெறுமனே பிரசாரமாக இல்லாமல் கலைநேர்த்தியுடன் எடுத்ததுதான் ஜனநாதனின் வெற்றி. ஆனால் 'பேராண்மை' படத்தில் இந்தக் கலை அம்சத்தை ஜனநாதன் தவறவிட்டார். என்.சி.சி மாணவிகளுக்கு சரக்கு பரிமாற்றம் உற்பத்தி -உபரி மூலதனம் குறித்து துருவன் வகுப்பெடுப்பது, காவல்துறையினரால் பழங்குடி மக்களின் வீடுகளும் உடைமைகளும் தாக்கப்படும்போது, பழங்குடி ஒருவர் பேசும், “உழைக்கும் மக்களோட சர்வதிகாரம் வந்துதான் தீரும்" என்கிற, காட்சிக்கு வெளியே துருத்தி நிற்கும் வசனம் - போன்றவை நேரடியான பிரசாரங்களாக - அமைந்தன.

மேலும் ‘பேராண்மை’ படத்தின் முக்கியமான பிரச்னை, அதன் இந்திய தேசிய அடையாளம். ஒரு பழங்குடி இளைஞனைக் கக்கூஸ் கழுவ வைக்க ஆசைப்பட்டு ரசிக்கும் உயர்சாதிப் பெண்ணின் ‘இந்திய பாரம்பரியம்' நிறைந்த இந்தியத் தேசியம் எப்படி ஒரு பழங்குடி இளைஞனின் இந்திய தேசியமாகவும் இருக்க முடியும்? பழங்குடிகள் அதிகம் நிறைந்த வடகிழக்கு மாகாணங்களில் இந்திய தேசிய வெறியாட்டத்தைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

ஆனால் ’பேராண்மை’ திரைப்படம் தேசிய இனப்பிரச்சினைகளையோ மொழிவாரி தேசியத்தையோ பேசாததுகூட பிரச்சினை அல்ல. அம்பேத்கர் மொழிவாரித் தேசியங்களை ஆதரித்தவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் 'மய்யப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு' என்னும் கருத்தாக்கத்தை ஆதரித்தவரும்கூட. 'மொழிவாரித் தேசியம் அல்லது அதிக அதிகாரம் வாய்ந்த மாநில அரசு என்னும்போது அங்கு இயல்பாகவே சிறுபான்மையினராகிப் போகும் தலித்துகளை இவ்விரண்டும் கீழாகவே நடத்தும்' என்னும் அம்பேத்கரின் அச்ச உளவியலிலிருந்தே நாம் இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அம்பேத்கர் ஒரு இந்திய அளவிலான ஒன்றிணைப்பை வலியுறுத்தியபோதும் அது காங்கிரஸ் மற்றும் இந்துத்துவவாதிகள் முன்வைத்த பார்ப்பன இந்து தேசியத்திற்கு முற்றிலும் மாறாகவும் எதிராகவும் இருந்தது. ராமன், விநாயகன் தொடங்கி பாரதமாதா வரையிலான இந்திய தேசிய இந்துத்துவக் குறியீடுகளை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, துருவன் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக இந்தியத் தேசியத்தை நிராகரிக்க வேண்டும் என்பது அல்ல பிரச்னை. ஏனெனில், தமிழ்த்தேசியம் என்பதும் இதுவரை மலைவாழ் மக்களை விலக்கி வைக்கிற மையப்படுத்தப்பட்ட அரசியலே. குணா போன்ற சாதி அடிப்படையிலான தூய்மைவாத தமிழ்த்தேசியத்தை முன்வைப்பவர்கள் பழங்குடியினரான படுகரை அன்னியர் என்று சொல்லி, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்பவர்கள். ஆனால் இங்கு கேள்வியே துருவனின் இந்தியத் தேசியம், தேசப் பாதுகாப்பு, அன்னியச் சதி' என்கிற வழக்கமான சொல்லாடல்களின் அடிப்படையில் அமைந்ததுதான் முக்கியமான பிரச்னை

மேலும், தேசபக்தி என்பதை ஏற்றுக்கொண்ட இந்திய மார்க்சிய லெனினியக்குழுக்களும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலையீட்டை மறுப்பதாகவும் இந்தியாவில் உள்ள அடித்தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாகவுமே தேசபக்தியை விளக்குகின்றனர். கருவேல மரத்தை இந்தியாவிற்குள் பரப்பி செயற்கை விதைகள் இந்திய விவசாய நிலங்களை மலடாக்குவது குறித்த ஆதங்கத்தில் இத்தகைய பார்வைகள் தெரிகின்றன. ஆனால் பின் அது பாதுகாப்பை முன்னிட்ட தேசபக்தி, வல்லரசு என்றெல்லாம் பெருங்கதையாடல்களை முன்வைக்கும்போது 'பேராண்மை' மார்க்சியத்திலிருந்து விலகி நிற்கிறது.

ஆனால், இத்தகைய பிரச்னைகளைத் தாண்டி 'பேராண்மை' ஏன் முக்கியமான படம் என்றால் அது துருவன் என்னும் பழங்குடி இளைஞனை முன்வைத்து இந்திய சாதிய மனநிலையை நுட்பமாக முன்வைத்தது. ஒரு ஆதிக்கச்சாதிப் பெண் மலையின இளைஞன் துருவன் மீது பொய்ப்புகார் எழுதும்போது சக தோழியிடம் சொல்கிறாள், "அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி, இந்தியாவுக்கு ஒரு பாரம்பரியம் இருக்குடி" என்று. இங்கு இந்தியப் பாரம்பரியம் என்பதே சாதியப் பாரம்பரியமாக இருப்பதையும் வெவ்வேறு மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடுகள் உள்ள இந்தியாவை இணைப்பது சாதியம் என்பதையும் நுட்பமாக முன்வைத்தார் ஜனநாதன். ஒருபுறம் 'பேராண்மை' இந்திய தேசியத்தை ஆதரிப்பதான தோற்றம் இருந்தாலும் சாதிக்கு எதிரான, இத்தகைய காட்சிகளும் வசனங்களும் அதன் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கின.

ஒரு பழங்குடி இளைஞனை ஆதிக்க சாதிக்காரர்கள், அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், தீண்டத்தகாதவனாக நடத்துகிற சாதிய மனோபாவம் குறித்த காட்சிகள், பிரச்சார வசனங்கள் இன்றி இயல்பாகவே பதிவுசெய்யப்பட்டன. அதேபோல் பழங்குடி என்றாலே மொழி தெரியாத இளைஞன், அவனுக்கு ஆனா ஊனா கற்றுத்தரும் கதாநாயகி, விரகதாப பாடல்களில் நடனம் ஆடுவது என்றே பழங்குடியினர் குறித்த சித்திரங்களை உருவாக்கியுள்ள தமிழ்ச்சினிமாவில் அவர்களின் இயற்கையோடு இணைந்த இயல்பையும், 'சுள்ளி பொறுக்கிறவனைக் கூட விடமாட்டோம்' என்று திட்டமிட்டு அவர்களையும் காட்டையும் அழிக்கும் அதிகார எந்திரங்களையும் பதிவு செய்தது.

ஆண்களிடத்தில் உறைந்திருக்கும் சாதியுணர்வு குறித்தே அதிகம் பேசப்படாத தமிழ்ச்சினிமாவில் பெண்களுக்குள்ளும் படிந்து போயிருக்கும் சாதியுணர்வை நுட்பமாகப் பதிவு செய்தது. பேராண்மை என்று பெயர் வைத்து பெண்களைக் கதைநாயகிகளாய் சாகசக்காரர்களாய் முன்வைத்ததது. கடவுளால் காப்பாற்றப்படாமல் ஒரு பெண் இறந்து கிடக்கும்போது 'காக்க காக்க' கந்தசஷ்டிக்கவசம் ஒலிக்கும் அவல நகைச்சுவை, இறுதியில் பொன்வண்ணன் குடியரசுத்தலைவர் விருது பெறுவதுபோல் காட்சி வைத்து அதிகாரவர்க்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தது ஆகியவை ஜனநாதனின் 'பேராண்மை'யை முக்கியமான சினிமாவாக மாற்றுகிறது.

ஜனநாதனின் நான்காவது திரைப்படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' மற்ற மூன்று படங்களைவிட கலைநேர்த்தி குறைவாகவும் பிரசாரம் அதிகமாகவும் இருந்ததே 'புறம்போக்கு' படத்தின் பிரச்னை. கம்யூனிச அகிலம், மார்க்சிய - லெனினிய அரசியல் ஆகியவை குறித்து தமிழ் வெகுமக்கள்வெளிக்கு பரிச்சயம் இல்லாததும் அதன் வரவேற்பு குறைவுக்குக் காரணம். மரணதண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு கம்யூனிச போராளி, அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாய் ஒரு சிறை அதிகாரி, பொதுப்புத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் புரிதலுக்கு வரும் தூக்கிலிடும் பணியில் இருக்கும் ஓர் இளைஞன் ஆகியோரை முன்வைத்து மரண தண்டனை ஒழிப்பையும் மார்க்சிய அரசியலையும் முன்வைத்தார் ஜனநாதன்.

அவரது உறுதியான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட 'லாபம்' திரைப்படம், ஜனநாதன் இறந்தபிறகே வெளியானது. ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படத்தில் இருந்த அதே பிரச்சினைகள் ‘லாபம்’ திரைப்படத்திலும் இருந்தன. ‘இயற்கை’, ‘ஈ’ ஆகிய திரைப்படங்களில் இருந்த கலைநேர்த்தியில் இருந்து விலகிய ஜனநாதன் தன் கடைசி இரு திரைப்படங்களில் முற்றிலும் அரசியல் பிரச்சாரத்தை நிறைத்துவிட்டார். ஆனாலும் கூட ‘லாபம்’ திரைப்படம் பஞ்சமி நிலப்பிரச்சினை, கூட்டுப்பண்ணை, பி.சீனிவாசராவ் போன்ற கம்யூனிச போராளிகளை நினைவுகூரும் தொழிற்சங்க அரசியல் ஆகியவற்றை முன்வைத்தது மிக முக்கியமானது. ஜனநாதன் தன் திரைப்படங்களில் உள்ள மையப் பிரச்சினைகள் அனைத்தையுமே சர்வதேச பார்வையில் சொல்ல முயன்றவர். ஒரு மார்க்சியவாதியால் மட்டுமே இது சாத்தியம். இன்னும் ஏராளமான திரைப்படங்களைத் தந்திருக்க வேண்டிய இயக்குநர் ஜனநாதன் திடீரென்று மறைந்தது அரசியல் சினிமாக்களை நேசிப்பவர்களுக்கு மாபெரும் இழப்பு.

ஓர் இயக்குநர் என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையிலும் ஜனநாதன் ஒரு மார்க்சியவாதியாக வாழ்ந்தார். 'பேராண்மை' திரைப்படம் வெளியானபோது என் வலைப்பூவில் அதுகுறித்து விமர்சனம் எழுதியிருந்தேன். ’பேராண்மை’ திரைப்படத்தின் மார்க்சிய அரசியலைப் பாராட்டியும் அதன் இந்திய தேசிய உள்ளடக்கத்தை விமர்சித்தும் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் 'சிறுபத்திரிகைகள் மற்றும் வெகுஜனப்பத்திரிகைகளால் 'மாற்று சினிமாக்காரர்கள்' என்று கொண்டாடப்படுபவர்கள் பட்டியலில் பாலா, அமீர், சேரன், சசிகுமார், தங்கர்பச்சான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் அளவிற்கு ஏனோ ஜனநாதனின் பெயர் இடம்பெறுவதில்லை. ஒருவேளை அவர் இவர்கள் அளவிற்கு தமிழ்த்தேசிய அரசியல் பேசாததாலோ என்னவோ. ஆனால் தமிழின் புதிய பரிசோதனை முயற்சிகளை முன்வைப்பதிலும் அரசியல் சினிமாக்களை இயக்குவதிலும் ஜனநாதன் தனித்துவமான முன்மாதிரி என்பதே என் கருத்து' என்று எழுதியிருந்தேன்.

அதற்குப்பிறகு நீண்ட நாட்கள் கழித்து சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஒரு கூட்டம். வாசலில் நின்று புகைபிடித்துக்கொண்டிருந்த ஜனநாதனிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். தோழமையுடன் பேசிய ஜனா, "நீங்க எழுதினபிறகுதான் நானும் யோசிச்சேன். ஆமா, என்னை ஏன் யாரும் கணக்கில் எடுத்துக்கிறதில்லை?” என்று கேட்டார். அதற்குப் பிறகு ஜனநாதனிடம் நேரிலும் தொலைபேசியிலும் பலமுறை பேசியிருக்கிறேன்.

எப்போதும் தோழமையுடன் உரையாடக்கூடியவர். ஆனந்த விகடனுக்காக அவரைப் பேட்டி காண்பதற்காக அவரிடம் தொலைபேசியில் பேசியபோது வீட்டுக்கு வரச் சொன்னவர், “நம்ம வீட்டில சாப்பிடலாம்" என்று இரண்டுமுறை அழுத்திச் சொன்னார். இட்லி, காரமான சட்னி, அவ்வளவுதான், ஜனநாதனைப் போலவே எளிமையான காலையுணவு. அப்போது ஏழு தமிழர் விடுதலைக்கான இயக்கங்களில் ஜனநாதன் பங்குபெற்றிருந்தார். மா-லெ அரசியலை ஆதரிப்பவர் மரணதண்டனையை எதிர்ப்பதில் உள்ள முரண்பாட்டைக் கேட்டேன். "சிந்திக்க வேண்டியதுதான்" என்று ஒத்துக்கொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வர்க்க அம்சம் முதல் சர்வதேசப் பிரச்னைகள் வரை அடங்கிய நல்ல நேர்காணல் அது.

2020ல் வெளியான என்னுடைய 'அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்' புத்தகத்தை அவருக்கும் சமர்ப்பித்திருந்தேன். அதை அவரிடம் கொடுப்பதற்காகத் தொலைபேசியில் பேசினேன். “நான் வந்து வாங்கிக்கிறேன்” என்றார். “இல்லை அது மரியாதையா இருக்காது. நானே வருகிறேன். உங்களைச் சந்தித்து நீண்ட நாட்களாகின்றன’’ என்றேன். அவரைச் சென்று சந்தித்தபோதும் "நான் வந்து வாங்கியிருப்பேனே" என்று மீண்டும் சொன்னார். அதுதான் அவரைக் கடைசியாகச் சந்தித்தது. விஜய் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து தோசை சுட்டுக்கொடுத்தபடியே அரசியல் பேசியது, விஜய்சேதுபதியின் அரசியல் உணர்வு, தேசிய விருது கமிட்டியில் இருந்தபோது நடந்த சுவையான விஷயங்கள் என்று பலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

முற்போக்கு இயக்குநர்களாக இருந்தாலும் சிலரை எளிதில் அணுக இயலாது. மாற்றுக்கருத்துகளையோ விமர்சனங்களையோ சின்ன அளவில் வைத்தாலும் உடனடியாகத் தொடர்பைத் துண்டித்துக்கொள்வார்கள். ஆனால் ஜனநாதனிடம் எப்போதுமே தான் ஒரு புகழ்வாய்ந்த இயக்குநர் என்ற எண்ணம் இருந்ததில்லை. எல்லா விமர்சனங்களையும் காதுகொடுத்துக் கவனமாகக் கேட்பார். ஒரு கம்யூனிஸ்டாகத் திரைப்படத் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் தனிப்பட்ட முறையில் உழைத்தவர். தன் உதவி இயக்குநர்களின் திரைப்படங்களுக்காகவும் பணிகளை மேற்கொண்டவர். கதை, திரைக்கதை, வசனம் என்பதைத் தாண்டி அடிப்படைத் தொழில்நுட்பங்களிலும் ஆர்வம் காட்டியவர்.

ஜனநாதன் இயக்கிய நான்கு திரைப்படங்களைப் போலவே அவரது உதவி இயக்குநர் கல்யாண் இயக்கிய "பூலோகம்' திரைப்படத்துக்கு ஜனநாதன் எழுதிய வசனங்களும் முக்கியமானவை. வடசென்னையில் பாரம்பரியமாக விளையாடப்படும் ஒரு வீரவிளையாட்டை சர்வதேச முதலாளியம் எப்படி வணிகமாக மாற்றுகிறது, அதை சந்தைப்படுத்த ஊடகங்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை நுட்பமாகச் சித்திரித்த படம். இந்த நுட்பங்களுக்குக் கண்டிப்பாக ஜனநாதனின் வசனங்கள் மிக முக்கியமான காரணம்.

ஜனநாதன், தான் மட்டும் சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்ததில்லை, தன் உதவி இயக்குநர்களுக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று முயன்றவர்.

திரைத்துறையில் உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல் நடத்தப்படுபவர்கள். மிகச்சிறந்த இயக்குநர்கள்கூட தங்கள் உதவி இயக்குனர்களிடம் ஆண்டான் மனப்பான்மையுடன் நடந்துகொள்வது வழக்கம். ஆனால் ஜனநாதன் இதற்கு முற்றிலும் நேர்மாறானவர். அவர் உதவி இயக்குநர்கள் அவரை ‘ஜனா’ என்று பெயர் சொல்லியே அழைப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்படி ஜனநாதனின் ஓர் உதவி இயக்குநர் முக்கியமான சம்பவத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டிருந்தார்.

‘’பல இயக்குநர்கள் தன் உதவி இயக்குநர்கள் தன்னிடமிருந்து வெளியேறி, வாய்ப்புகள் பெற்று இயக்குநர் ஆவதை விரும்புவது கிடையாது. ஒரு பிரபலமான இயக்குநரின் உதவி இயக்குநருக்கு, இயக்குநர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் தயாரிப்பாளர், பிரபல இயக்குநரிடம் அந்த உதவி இயக்குநரைப் பற்றி விசாரித்தார். இயக்குநரின் எதிர்மறைக் கருத்துகள் அந்த வாய்ப்பையே முறித்துப்போட்டது.

இதற்கு நேர்மாறானவர் ஜனநாதன். அவரிடம் புதிய இளைஞர் ஒருவர் கதை சொன்னார். அந்த கதை ஜனாவுக்குப் பிடித்துப்போனது. ‘தயாரிப்பாளரைப் பார்க்கும்போது என்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன்னு சொல்லுங்க. என்னிடம் கேட்டால் நானும் அப்படியே சொல்கிறேன்’ என்றார் ஜனா’’ என்றார் ஜனநாதனின் அந்த உதவி இயக்குநர்.

அதுதான் ஜனநாதன். மார்க்சியம் வலியுறுத்திய மனிதநேயத்தைத் தன் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டவர் அவர். சினிமாவை அரசியல்படுத்திய சிவப்புச் சிந்தனையாளர் ஜனநாதனை எதிர்காலம் எப்போதும் நினைவுகூரும்.

Niram Marum Cinema 19 – Jananathan: The Red Flag in Tamil Cinema
நிறம் மாறும் சினிமா 18 | எல்லா சினிமாக்களும் ஆண் சினிமாக்களே!