வசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..? - ஊட்டி மலை ரயில் சர்ச்சையும் அலசலும்!

வசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..? - ஊட்டி மலை ரயில் சர்ச்சையும் அலசலும்!
வசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..? - ஊட்டி மலை ரயில் சர்ச்சையும் அலசலும்!

'கொரோனா பேரிடர் காரணத்தால் நீலகிரி மலை ரயில் சேவை தொடங்கப்படாத நிலையில், மேட்டுப்பாளையம் தனியார் ரயில் நிறுவனம் மூலம் ரூ.3000 கட்டணத்தில் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சாதாரண மக்கள் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்படும்' என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக, புதிய தலைமுறையின் 'நியூஸ் 360' அலசல்:


'குளிர்ச்சியான காலநிலையில் மனதை மயக்கும் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகளை ரசித்தபடி மலை ரயிலில் உதகை செல்லும் சுற்றுலா பயணிகளின் கனவு பயணமான மலைரயில் சேவைக்கு கட்டணம் பலமடங்கு உயர்ந்து 3000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனியார் சேவை திட்டத்தை நிறுத்தி அரசே இயக்க வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்ல உள்ளூர் முதல் வெளிநாட்டு பயணிகள் வரை மலை ரயிலில் பயணம் செய்வதையே பெரிதும் விரும்புவர். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட மலை ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், சிறப்பு ரயில் என்ற பெயரில் நீலகிரி மலை ரயில் சேவை, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு சின்னங்கள் அகற்றப்பட்டு, மேட்டுப்பாளைத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் தனது நிறுவன லோகோவுடன் ரயிலை இயக்குகிறது. விமானத்தில் இருப்பது போன்று பணிப்பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பயணக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.3000 வசூலிக்கப்படுவதால் 9,60,000 ரூபாயை தனியார் நிறுவனம் பெறுகிறது. இதில், மலை ரயிலுக்கான வாடகையாக 4,90,000 ரூபாய் மட்டுமே அரசுக்கு செலுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.


110 ரூபாயாக இருந்த கட்டணம் 3000 ரூபாயாக அதிகரிப்பு, ரயிலின் தோற்றத்தில் மாற்றம், தனியாருக்கு அதி முக்கியத்துவம் போன்ற நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மலை ரயில் சேவை படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்கப்படுமோ என்பதுதான் அச்சத்திற்கு காரணம். இந்த மலைரயிலை தனியார் இயக்கினால் கொரோனா பரவாதா என்ற கேள்வியை சுற்றுலா பயணிகள் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி, ரயில்வே துறையின் அனுமதி கிடைத்ததும் வழக்கமான குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் மலை ரயில் சேவை தொடங்கும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை தனியார் வசமான ரயில் சேவைகள்:

முதலாவதாக டெல்லி லக்னோ இடையே அதிநவீன வசதிகளைக் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2019 அக்டோபர் 2ஆம் தேதி முதல் இயக்கப்பட்டது. முழுக்க முழுக்க தனியாரால் இயக்கப்படும் இந்த ரயிலின் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் ரயில் சேவையில் மேலும் பல நிறுவனங்களை ஈடுபடுத்தலாம் என்று ரயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

அதன்பிறகு 150 ரயில்கள் மற்றும் 50 ரயில்வே நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மும்பை அகமதாபாத் இடையே தனியார் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டு இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் ஓடும் எனவும் அறிவித்து இருந்தது. வட மாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரயில்வே தொழிலாளர் சங்கம் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

கேள்வி: ஊட்டி மலை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டதை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டுடிருக்கிறது. ஏழை எளிய மக்கள் இந்த மலை ரயிலை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிவிட்டது என எல்லோருடைய மனக்குமுறலையும் கேட்க முடிகிறது. ஆனால், தென்னக ரயில்வே அப்படியெல்லாம் இல்லை; விரைவில பழைய கட்டணத்துக்கு மாற்றப்படும் என்ற விளக்கத்தையும் கொடுத்திருக்காங்க. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

மனோகரன் (நுகர்வோர் அமைப்பு): "1908ஆம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இப்போது இந்தியாவில் இரண்டு இடத்தில்தான் இந்த மலை ரயில் சேவை இருக்கிறது. 112 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மலை ரயிலை, யுனஸ்கோ நிறுவனம் 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இதை நீலகிரில் வசிக்கும் என்போன்ற மக்கள் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தோம்.

கொஞ்ச காலத்துக்கு முன்னாடியே சார்ட்டர்டு ட்ரெய்ன் என்ற பெயரில் தனியார் எடுத்து ஓட்டுனாங்க. அப்பவே இது தனியாருக்கு போய்விடுமோ என்ற அச்சம் வந்ததால் எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தோம். அதன்பிறகு ரயில்வே நிர்வாகம், நாங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். பாரம்பரிய ரயிலாக இருப்பதால் இப்படியே இயக்கப்படும் என்று சொன்னார்கள்.


இந்நிலையில், கொரேனா பிரச்னையால் ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதற்கான தளர்வுகள் இன்னும் அறிவிக்காத நிலையில் தனியார் நிறுவனம் புதிய தோற்றத்தோடு இந்த மலை ரயிலை இப்போது இயக்குகிறது. இதையெல்லாம் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் சேலம் கோட்டத்தில் இந்த டிசம்பர் 5, 6 மற்றும் 12, 13 என இந்த நான்கு நாட்கள் மட்டுமே இயக்கவிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த ரயில் சேவை தொடர்ந்தால் நீலகிரி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி வெளிமாவட்ட சாமானிய மக்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயில் சேவையை அரசாங்கம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை."

கேள்வி: நீலகிரி மலைரயில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது என்ற விமர்சனத்தை அதிகமாக கேட்க முடிகிறது. குறிப்பிட்ட நான்கு நாட்கள் மட்டும் இயங்கினால் பரவாயில்லை. தொடர்ந்து இதுபோல் இயக்கினால் ஊட்டி மலை ரயில் கண்காட்சி ரயிலாக மாறிவிடுமோ என்பதே மக்களின் மனக்குமுறலாக இருக்கிறது. நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


ஸ்ரீராம் சேஷாத்ரி (விமர்சகர்): "தேவையில்லாத ஓர் உணர்ச்சிமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 110 ரூபாயாக இருந்த கட்டணம் 3000 ரூபாயாக ஆகிவிட்டது. இதுபோன்ற தவறான தகவல்களை கொடுத்து மக்கள் மத்தியில் பீதியை கிளப்புவது சோஷியல் மீடியாவும், மீடியாவும்தான் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன்.

ஏனென்றால், அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகின்றேன். கொரோனா முடிந்து ரயில்கள் இயக்கப்படும்போது இந்த மலை ரயிலும் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சொல்லியிருக்கிறார். இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பாகவே 1997 முதல் 2000 வரையிலும் மூன்று ஆண்டுகள் யார் யாரெல்லாம் சார்ட்டர்டு சர்வீஸ் கேட்டிருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.

அதன்பிறகு 2002-ல் இருந்து 2004 வரைக்கும் நைட் சர்வீர் என்று புதிதாக ஆரம்பித்தார்கள். மீண்டும் 2012-13லும் நீலகிரி மலை ரயில் சார்ட்டர்டு சர்வீஸ் மூலம் இயக்கப்பட்டிருக்கிறது. ரயில்வேயில் சார்ட்டர்டு சர்வீஸ் என்பது எப்போதுமே உண்டு. சார்ட்டர்டு சர்வீஸ் மட்டும்தான் இயக்கப்படும் ரெகுலர் சர்வீஸ் கிடையாது என்று சொன்னால் மட்டும்தான் அங்கு பிரச்னை வரும். ரெகுலர் சர்வீஸ் இயக்கும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com