'கப்பு முக்கியம் பிகிலு' - டி20 உலக கோப்பையில் ஆஸி., நியூஸி.லாந்து இன்று மோதல்!

'கப்பு முக்கியம் பிகிலு' - டி20 உலக கோப்பையில் ஆஸி., நியூஸி.லாந்து இன்று மோதல்!
'கப்பு முக்கியம் பிகிலு' - டி20 உலக கோப்பையில் ஆஸி., நியூஸி.லாந்து இன்று மோதல்!

20 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் சாம்பியன் யார் எனத் தீர்மானிக்கும் இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையுடன் இரு அணிகளும் துபாயில் களம் காண்கின்றன.

2015-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை இந்த முறை வீழ்த்துவதற்கான திட்டங்களுடன் காத்திருக்கிறது நியூசிலாந்து. 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 20 ஓவர் உலகக்கோப்பை பட்டம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. அந்தக்குறையை போக்கி சாம்பியன் கோப்பையை ஏந்தும் உந்துதல் ஆஸ்திரேலிய அணியிடம் அதிகமாகவே இருக்கிறது. 20ஓவர் உலகக்கோப்பை போட்டித் தொடரில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி கோப்பையுடன் தாயகம் திரும்புமா என காத்திருக்கின்றனர் அந்நாட்டு ரசிகர்கள். இப்படி,இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டம் பன்னாட்டு ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரூப் சுற்றுகளில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜொலித்தது. அரையிறுதியில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியாட்டம், நியூசிலாந்தின் தொடக்க வீரர் டேரில் மிச்செலின் சிறந்த ஆட்டமாக அமைந்தது. அதிரடி ரன்குவிப்பால் தமது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். மற்றொரு தொடக்க வீரரான மார்ட்டின் கப்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். விக்கெட் கீப்பர் கான்வாய் காயத்தால் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக டிம் சைஃபர்ட் களமிறங்குகிறார். டிரண்ட் போல்ட் , டிம் சவுத்தி , இஷ் சோதி ஆகியோரின் பந்துவீச்சும், ஜேம்ஸ் நீஷத்தின் ஆல்ரவுண்ட் அசத்தலும் நியூசிலாந்து அணிக்கு பலமாக உள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கேப்டன் ஆரோன் பின்ச் , டேவிட் வார்னர் இணை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பலமாக உள்ளது. மத்திய வரிசையில் மிச்செல் மார்ஷ் , ஸ்டோய்னிஸ் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மிச்செல் ஸ்டார்க் , ஹேசல்வுட் , ஆடம் ஸம்பா ஆகியோரின் பந்துவீச்சு ஆஸ்திரேலியாவுக்கு பெரும்பலமாக உள்ளது. சமபலத்துடன் களமிறங்கும் இவ்விரு அணிகளால் இருபது ஓவர் உலகக்கோப்பை இறுதியாட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com