பாதுகாப்பு குறைபாடுள்ள நாடா பாகிஸ்தான்? நியூசிலாந்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் உலகம்

பாதுகாப்பு குறைபாடுள்ள நாடா பாகிஸ்தான்? நியூசிலாந்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் உலகம்
பாதுகாப்பு குறைபாடுள்ள நாடா பாகிஸ்தான்? நியூசிலாந்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் உலகம்

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி உள்ளது. அந்த அணி இந்த தொடரில் பங்கேற்கும் நோக்கில் பாகிஸ்தானில் முகாமிட்டிருந்த நிலையில் இந்த முடிவை அறிவித்துள்ளது. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அதோடு பாகிஸ்தான் அணியின் வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் சர்வதேச அணிகளை சார்ந்த முன்னாள் வீரர்களும் நியூசிலாந்து அணியின் நிலைபாட்டை விமர்சித்து வருகின்றன. 

நியூசிலாந்து - பாகிஸ்தான் தொடர்!

மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் என பாகிஸ்தான் மண்ணில் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் நோக்கில் நியூசிலாந்தின் இந்த சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 3 வரையில் அட்டவணை போடப்பட்டிருந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு சில மணிகளுக்கு முன்னாள் நியூசிலாந்து இந்த விலகல் முடிவை அறிவித்தது. 

அந்த அணியின் முடிவு இப்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

ரமீஸ் ராஜா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மேன்

“மிகவும் மோசமான நாள் இது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் எங்கள் அணியின் வீரர்களுக்காக நான் வருந்துகிறேன். தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்துவிட்டு அதற்கு பாதுகாப்பு குறைபாடு காரணங்களை மேற்கோள் காட்டுவது வெறுப்பினை ஏற்படுத்துகிறது. நியூசிலாந்து எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. எங்கள் தரப்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முறையிடப்படும். அதற்கு நியூசிலாந்து பதில் சொல்லியாக வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். 

ஆலன் வில்கின்ஸ் - கிரிக்கெட் வர்ணனையாளர் 

“பாகிஸ்தான் சுற்றுபயணத்தில் இருந்து நியூசிலாந்தின் திடீர் விலகல் பெருத்த ஏமாற்றம். சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் தங்கள் மண்ணிற்கு கொண்டு வர பாகிஸ்தான் தீவிரமான முயற்சிகளை முன்னெடுத்தது. இருந்தும் நியூசிலாந்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏமாற்றமே. அதே நேரத்தில் இதன் தாக்கம் பாகிஸ்தான் மண்ணில் வரும் நாட்களில் நடைபெற உள்ள தொடர்களிலும் எதிரொலிக்கலாம்” என்கிறார் அவர். 

பாபர் அஸாம் - கேப்டன் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

“லட்சக்கணக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சில் சந்தோஷத்தை கொண்டு வந்த இந்த தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் எங்கள் நாட்டின் பாதுகாப்பு வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர்கள் எங்களது பெருமையாக என்றென்றும் திகழ்கின்றனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத்!” என தெரிவித்துள்ளார் அவர். 

டேரன் சம்மி - முன்னாள் கேப்டன் - வெஸ்ட் இண்டீஸ்

“பாதுகாப்பு காரணங்களால் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதை அறிந்து ஏமாற்றம் அடைகிறேன். கடந்த ஆறு ஆண்டு காலமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி வருகிறேன். அங்கு நல்ல விதமான சுகானுபவங்களை பெற்றுள்ளேன். எப்போதும் அங்கு பாதுகாப்பானதாகவே நான் உணர்ந்திருக்கிறேன். இது பாகிஸ்தான் அணிக்கு பெருத்த பின்னடைவே!” என தெரிவித்துள்ளார் அவர். 

இதே போல ஷோயப் அக்தர், அஃப்ரிடி, மாலிக் என பலரும் தங்கள் தரப்பில் நியூசிலாந்தின் முடிவை விமர்சித்துள்ளனர். பெரும்பாலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அணியின் முடிவு கொன்று விட்டதாகவே அவர்கள் சொல்லி உள்ளனர். 

இந்த நிலையில் அடுத்த மாதம் பாகிஸ்தானில் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து அணி திட்டமிட்டிருந்தது. தற்போது அது தொடர்பான இறுதி முடிவை அடுத்த சில மணிகளில் அறிவிப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com