சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்றது திட்டமிட்ட படுகொலையா? என்ன சொல்ல வருகிறது 'ஜோகி'?

சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்றது திட்டமிட்ட படுகொலையா? என்ன சொல்ல வருகிறது 'ஜோகி'?
சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்றது திட்டமிட்ட படுகொலையா? என்ன சொல்ல வருகிறது 'ஜோகி'?

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்தியர்களுக்கான விடியல் சாதாரணமாக அமையவில்லை, பேரதிர்ச்சி கொண்டதாகவே அமைந்தது. ஆம் அன்றுதான் பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய் காப்பாளர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்ற அந்த மெய் காப்பாளர்கள் இருவரும் சீக்கியர்கள். இந்தப் படுகொலைக்கு பின்பு டெல்லி முழுவதும் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அழுத்தமாக பேசி இருக்கிறது அலி அப்பாஸ் ஜபார் இயக்கத்தில் உருவாகி நெட்ப்ளிக்ஸ் வெளியாகி இருக்கும் ஜோகி திரைப்படம்.

ஜோகி திரைப்படத்தின் கதை என்ன? கிழக்கு டெல்லியில் சீக்கிய குடும்பத்தை சேர்ந்த ஜோகி என்பவர் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்திரா காந்தி கொல்லப்படுகிறார். அதன் பின்பு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையும், அதிலிருந்து தன்னுடைய குடும்பத்தையும், மற்றவர்களையும் ஜோகி எப்படி காப்பாற்றுகிறார். இறுதியில் ஜோகிக்கு என்ன ஆனது? சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்றது வன்முறையா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட திட்டமிட்ட படுகொலையா என்பதை 1 மணி நேரம் 56 நிமிடங்களில் பேசி இருக்கிறது ஜோகி.

இந்த திரைப்படத்தில் பிரதானமான ஜோகி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் தில்ஜித் தோசன்ஜ். காட்சிக்கு காட்சி அத்தனை உணர்ச்சிகளையும் அள்ளித் தெளித்திருக்கிறார் அவர். பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்டதை அறியாமல் பஸ்ஸில் பயணிக்கும்போதும், தன்னுடைய சகோதரியின் கணவர் உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்டபோதும் ஜோகி நம் மனதோடு பயணிக்க தொடங்குகிறார். வன்முறையில் இருந்து தன் மக்களை காப்பாற்றுவதற்காக அழுதுக்கொண்டே புனிதமாக கருத்தப்படும் தன்னுடைய தலைப்பாகையையும், முடியையும் வெட்டும்போது நமக்கே கண்ணீர் வந்துவிடுகிறது.

ஜோகிக்கு காவல்துறை நண்பராக ரவீந்தர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள முகமுது ஜீஷான் அயூப் அசத்தியுள்ளார். ஜோகிக்கும் அவர் கூறும் யோசனைகளும் அதனை செயல்படுத்தும்போது அவரின் முகத்தில் தெரியும் பாவனைகளும் அத்தனை இயல்பு. தன்னுடைய உயர் அதிகாரிகள் எத்தனை அழுத்தம் கொடுத்தபோதும் இறுதி வரை அறத்தின் பக்கம் நின்றதுதான் ரவீந்திர் கதாப்பாத்திரத்தின் சிறப்பு. அதேபோல இஸ்லாமிய நண்பராக வரும் கலீம் என்ற கதாப்பாத்திரமும் அத்தனை இயல்பு. அப்போதைய ஆளுங்கட்சியின எம்.பியாகவும் தேஜ்பால் கதாப்பாத்திரத்தில் வரும் குமுத் மிஸ்ரா மிரட்டி இருக்கிறார்.

படத்தின் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாமே கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஒரேஒரு சின்ன குறை ஜோகியின் பிளாஷ்பேக் காதலும் அதற்கான காரணமும். அது ஒன்று மட்டுமே சற்றே நெருடலாக இருந்தது. ஆனால் கதையோட்டத்தின் இறுதியில் அந்த பிளாஷ்பேக் காட்சிக்கான காரணமும் கூறப்படுகிறது.

ஜோகி பேசியுள்ள அரசியல் என்ன?

1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்றது வன்முறை அல்ல திட்டமிடப்பட்ட படுகொலை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறது. சீக்கியர்களை கொல்வதற்காக ஆளுங்கட்சி எம்.பி. கதாப்பாத்திரத்தில் வரும் தேஜ்பால், கூலிப்படையினரின் உதவியுடன், காவல்துறையினர் பாதுகாப்புடன் எப்படி படுகொலையை அரங்கேற்றினார் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. காட்சிக்கு காட்சி "மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கு ராணுவும் வருவதற்குள் கிழக்கு டெல்லியில் இருக்கும் சீக்கியர்களை கொலை செய்யனும்" என்ற வசனங்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே தேஜ்பால் கதாப்பாத்திரம் "எனகென்ன சீக்கியர்கள் மீது தனிப்பட்ட முறையில் வன்மமா, நானும் குருத்வாரா செல்பவன்தான், யாரும் பிறக்கும்போதே வன்முறையை கையில் எடுப்பதில்லை" என நியாயம் பேச முற்படுகிறது. அதே கதாப்பாத்திரம் "எவ்வளவு நாள்தான் வெறும் எம்.பி.யாகவே இருக்கிறது, அமைச்சராக வேண்டாமா மேலிடத்தை திருப்திபடுத்த வேண்டாமா" என்றும் கோபப்படுகிறது.

அதிலும் ஒரு காட்சியில் வாக்காளர்கள் பட்டியலை கொடுத்து கூலிப்படையை ஏவிவிடுவது எல்லாம் நிஜமாகவே இப்படி நடந்திருக்குமா என பார்வையாளனாய் யோசிக்க வைக்கிறது. இந்நாள் வரையும் சீக்கியர்களுக்கு எதிராக தானாக நடைபெற்ற வன்முறை மட்டுமே திட்டமிட்டு நடைபெற்ற படுகொலைகள் அல்ல என சொன்னாலும். ஜோகி திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி திட்டமிடப்பட்ட படுகொலைதான் என கூறுகிறது.

நிஜத்தில் நடந்தது என்ன?

இந்திரா காந்தி படுகொலைக்கு பின்பு 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அரசே அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரமான தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியவர்கள் என்று கூறப்பட்ட ஜக்தீஷ் டைட்லர், சஜன்குமார் ஆகியோரும், மத்திய முன்னாள் அமைச்சர் எச்.கே.எல். பகத், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் தரம்தாஸ் சாஸ்திரி மற்றும் லலித் மக்கான் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதில் தரம்தாஸ் சாஸ்திரி, லலித் மக்கான் ஆகியோர் இப்போது உயிரோடு இல்லை. 9 விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டும் சரியான நீதி கிடைக்கவில்லை. இந்த பெரும் கலவரம் நிகழ்ந்தபோதும் ராணுவும் தாமதமாக வந்த காரணம் ஏன் என்று இன்றும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.

எது உண்மை?

ஜோகி திரைப்படம் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலையே என திட்டவட்டமாக கூறி மீண்டும் நெருப்பை பற்ற வைத்துள்ளது. இது நிஜம்தானா என்ற கேள்வி நம்முள் எழுந்தாலும் இதற்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியே "மிகப்பெரிய விருட்சம் ஒன்று பெயர்ந்து விழும் பொழுது அந்த நிலம் சற்று அதிரவே செய்யும்" என்றார். இந்த பதிலிலேயே ஜோகி திரைப்படத்தின் சொல்ல வந்த கருத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.

- ஆர்.ஜி.ஜெகதீஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com