‘நேர்கொண்ட பார்வை’ – திரைப் பார்வை

‘நேர்கொண்ட பார்வை’ – திரைப் பார்வை
‘நேர்கொண்ட பார்வை’ – திரைப் பார்வை

பெண்கள் குறித்து இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கும் எல்லாவிதமான கற்பிதங்களுக்கும் எதிராய் கேள்வி எழுப்பி யோசிக்க வைக்கிறது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம்.

மீரா, ஃபமினா, ஆண்ட்ரியா என மூன்று பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை துணிச்சலாக எதிர்கொள்வதை சட்டம், காவல்துறை, சக மனிதர்கள் என ஒருவகை சிஸ்டத்துக்குள் அடங்கிய இந்தச் சமூகம் எவ்வகையில் எல்லாம் அணுகுகிறது என்பதை தார்மீக ரவுத்திரத்துடன் பதிவு செய்திருக்கிறது இந்த ‘நேர்கொண்ட பார்வை’.

இந்தியில் அமிதாப் பச்சன், தாப்ஸி நடிப்பில் வெளியாகி ‘No Means No’ என விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் ‘பிங்க்’. இதை அஜித்துக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களோடு தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் எச்.வினோத். பெரும்பாலான காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தாலும், காட்சியமைப்புகளிலும், நடிப்பிலும் தரமாக மேம்படுத்தியிருக்கிறார்கள். ‘பிங்க்’ படத்தில் அமிதாப் நடித்த கதாபாத்திரத்தை அஜித் ஏற்கிறார் எனும் அறிவிப்பே படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அந்த எதிர்பார்ப்பை நேர்மையான நடிப்பால் பூர்த்தி செய்து ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார் அஜித். வீரம், விஸ்வாசம் என சமீபத்திய படங்களில் பார்த்த கதாபாத்திரங்களுக்கு நேர்மாறாய் மனைவியை இழந்த இயலாமையை சுமந்து திரியும்போதும், நீதிமன்ற விசாரணையில் ரவுத்திரமாக சீறும் போதும் பாரத் சுப்ரமணியன் கதபாத்திரத்துக்கு மாஸ் ஃபிட். 

படம் தொடங்கும் ஆரம்பக் காட்சியில் இருந்து உளவியல் ரீதியாக அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். அவரோடு வரும் அபிராமி, ஆண்ட்ரியா அந்தக் கதாபாத்திரத்தோடு பொருந்தியிருக்கிறார்கள். ஒருபக்கம் வழக்கறிஞராக அஜித் அமர்ந்திருக்க, பாலியல் குற்றவாளிகளின் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடுகிறார் ரங்கராஜ் பாண்டே. சில இடங்களில் அறிமுக நடிகர் என்பது தெரிகிறது. அவரைப் போலவே, இன்ஸ்பெக்டர், நீதிபதி, குற்றவாளிகளாக வரும் நால்வர் எனப் படத்தில் நடித்தவர்கள் தங்களுக்கான பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

திரைக்கதை, வசனங்கள் மூலம் ரீமேக் படம் என்கிற உணர்வே வராமல் விறுவிறுப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் எச்.வினோத். அதிலும், இரண்டாம் பாதியில் பெண்களை ஒரு வட்டத்துக்குள் வைக்க எந்தவிதமான ஆணாதிக்க சிந்தனை செயல்பட்டிருக்கிறது என்பதை போட்டு உடைக்கும் வசனங்களின் கூர்மையில் எச்.வினோத்தின் பொறுப்பு மிளிர்கிறது. அதுவும், “No-ன்னு சொல்றது No-ன்னு மட்டும்தான் அர்த்தம்” அஜித் குரலில் ஒலிக்கும்போது கூடுதல் பவர். 

அஜித் படங்கள் என்றாலே யுவன்ஷங்கர் ராஜாவிடம் எக்ஸ்ட்ரா எனர்ஜி பிறந்து விடும் போல. பின்னணி இசையால் கதையோட்டத்தை ரசிகனுக்குள் கடத்துகிறார். பாடல்களும் அழுத்தமாய் ஒலிக்கின்றன. கண்களை உறுத்தாது துல்லியமாகவும், காட்சிகளின் தன்மைக்கு ஏற்ற ஒளியுடனுமான நிரவ்ஷாவின் ஒளிப்பதிவும், கோகுல் சந்திரனின் படத்தொகுப்பும் படத்திற்கு பெரும் பலம். படம் விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாகம் முழுக்க வரும் நீதிமன்ற விவாதம் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. 

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால், செம்மை மாதர்    திறம்புவ தில்லையாம்” என்றெல்லாம் பாரதியின் வரிகளை மட்டும் போற்றி பாடிவிட்டு, உடை, நடை, சிரிப்பிலேயே பெண்களின் நடத்தையை அளவிட்டு அவர்களை அணுகலாம் எனும் பிற்போக்கு கலாசார காவலர்களை வெட்கித் தலைகுனிய வைக்கும் வகையில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் எல்லோருக்குமான பாடம். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com