பண்பாட்டை ஓவியங்களாக வரைந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நெல்லை ஓவியக் கலைஞர்கள்
கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் ஓவியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் நெல்லை மாநகரில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து புதியதொரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர். கலைஞர்கள் அனைவரும் காவல்துறையினர் - தன்னார்வலர்கள் உதவியுடன் சாலையோர சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணியை தொடங்கியுள்ளனர். அவர்களைப்பற்றி இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகள் அற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆகவே மாநகரில் தேவையின்றி யாரும் வெளியில் சுற்றுவதை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், கொரோனோ அச்சுறுத்தல் மற்றும் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பு காவல்துறையுடன் இணைந்து நெல்லை மாநகரில் 40 இடங்களை தேர்வு செய்தனர். கடந்த மாதம் தேர்தல் பரப்புரை நேரத்தின்போது அரசியல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் தேர்தலையொட்டி ஜாதி ரீதியிலான விளம்பரங்கள் பொது வெளியில் உள்ள சாலையோர சுவர்களில் வரையப்பட்டிருந்தது.
இதுபோன்ற விளம்பரங்கள் எதுவும் சாலைகளில் உள்ள சுவர்களில் இருக்ககூடாது என்று ஓவியக் கலைஞர்களை கொண்டு சுவர்களில் தமிழர் பண்பாட்டை நினைவுபடுத்தும் விதமாக ஜல்லிக்கட்டு கரகாட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதனுடன் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா குறித்த வாசகங்கள் இந்த ஓவியத்தில் ஒரு பகுதியில் வரையப்படுகிறது.
மேலும், சுவரில் ஓவியம் வரைய பொருளாதார ரீதியில் உதவி செய்த தனியார் நிறுவனங்களின் பெயர்களையும் அதே ஓவியத்துடன் சேர்ந்து வரைகின்றனர். இதுகுறித்து ஓவிய தொழிலாளர் நல சங்கம் சார்பில் பேசும்போது கூறியது பிளக்ஸ் பேனர்கள் வந்தபிறகு சுவர் ஓவியம் வரையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் விழுந்துகிடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நெல்லை மாநகரில் 40 இடங்களிலும் மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி தொடங்கி பல்வேறு இடங்களிலும் சுவர்களில் பல்வேறு வகைகளில் ஓவியங்களை வரைகிறோம் என்றார்.
தன்னார்வலர் மகேஷ் கூறும்பொழுது, "நெல்லை மாநகரில் அவ்வப்போது பிரச்சினைகளை உருவாக்கும் சாதிய ரீதியான விளம்பரங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் இவை எதுவும் இதில் சுவரில் இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் காவல்துறையுடன் இணைந்து இந்த முயற்சியை தொடங்கி உள்ளோம். இனி இந்த ஓவியம் வரைந்த அழகான சுவர்களை காப்பது மக்களின் கடமை" என தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் ஓவிய தொழிலாளர்களை மீட்டு எடுக்கும் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாக பலராலும் பார்க்கப்படுகிரது. இவர்கள் சுவரின் தேவையில்லாத விளம்பரங்களை மறைத்துவிட்டு, அதற்கு பதிலாக தமிழகத்தின் அழகான பண்பாட்டை ஓவியங்களாக வரைந்திருப்பது மாநகரின் அழகை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
- நெல்லை நாகராஜன் | படங்கள் : சங்கர்.