ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 30: சாதனை பெண்களின் தேவை

ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 30: சாதனை பெண்களின் தேவை
ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 30: சாதனை பெண்களின் தேவை

தொழில்முனைவோர் என்று சொல்வதற்கு பதில் பெண் முனைவோர் (shepreneur) எனும் சொல்லும் காலத்திற்கு வந்திருக்கிறோம். தொழில்துறையில், குறிப்பாக ஸ்டார்ட் அப் துறையில் பெண்கள் தவிர்க்க இயலாத சக்தியாக உருவாகி வருவதன் அடையாளம் இது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லா பணியிடங்களிலும் தங்கள் திறமையை நிரூபித்திருப்பது போலவே, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்கி நடத்துவதிலும் தங்கள் திறனை உணர்த்தி வருகின்றனர். இதற்கு உதாரணமாக திகழும் சாதனை பெண்களின் வெற்றிக்கதைகளை இந்த தொடரில் பார்த்தோம்.

இப்போது தொடரின் நிறைவு பகுதிக்கு வந்திருக்கிறோம். இந்த பகுதியில் தனிப்பட்ட சாதனையாளரை பார்க்காமல், ஸ்டார்ட் அப் துறையில் பெண்களின் தேவையையும், முக்கியத்துவத்தையும் பார்க்கலாம். பொதுவாகவே, தொழில்முனைவு பாதை சவால்கள் நிரம்பியது. தடைகளையும், தோல்விகளையும் கண்டு தளராமல் விடா முயற்சியோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும். பெண்கள் தொழில்முனைவில் ஈடுபடும்போது இந்த சவால்களும் தடைகளும் இரண்டும் மடங்காகின்றன.

ஒரு பக்கம் பெண் என்பதாலேயே வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும், பாகுபாட்டிற்கு உள்ளாவதையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் தொழில்முனைவில் உள்ள சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இரட்டை சவால்களை எதிர்த்து போராடியே பெண்கள் வெற்றி பெற வேண்டியிருக்கிறது. அதோடு குடும்ப பொறுப்பையும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஸ்டார்ட் அப் யுகத்திலும் பெண்களுக்கான சவால்களும், தடைகளும் நீடிக்கவே செய்கின்றன.

ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபடும்போது நிராகரிப்புகளும், மறுப்புகளும் சகஜம் என்றாலும், பெண்கள் அதிக அளவில் நிராகரிக்கப்படுவது இயல்பாக இருக்கிறது. நிராகரிப்பின் வலியோடு அவர்கள், பாலினம் சார்ந்த சீண்டல்களுக்கும், சார்புகளுக்கும் உள்ளாவதும் இயல்பாகவே இருக்கிறது. இவற்றை எல்லாம் கண்டு பின் வாங்கிவிடாமல் அதிக அளவில் பெண்கள் ஸ்டார்ட் அப் பரப்பை நோக்கி வருவதை உலக அளவில் ஒரு போக்காக பார்க்க முடிகிறது. இந்த போக்கை ஆதரிப்பது சமூகத்தின் கடமையாகிறது.

ஏனெனில் பெண்கள் தொழில்முனைவிலும், ஸ்டார்ட் அப் உருவாக்கத்திலும் ஈடுபடும் தேவை இருக்கிறது. முதல் விஷயம், சமத்துவமே மனிதகுலத்தின் இலக்காக இருக்க வேண்டும் எனும்போது, தொழில்முனைவில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பல்வேறு தடைகளை கடந்து தொழில்முனைவை நோக்கி வரும் போது, அந்த முயற்சியை ஆதரிப்பது சமூக பொறுப்பாக அமைகிறது.

எல்லா துறைகளிலும் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதோடு, மாறுபட்ட அல்லது பரவலான தன்மை தேவை என்பதையும் காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது, பணியிடம் துவங்கி, தொழில்முனைவு வரை குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் ஆதரிக்காமல், அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்பு அளிப்பது அவசியமாகிறது. பிரச்னைகளை புரிந்து கொள்ளவும், சமத்துவம் மிக்க தீர்வுகளை உருவாக்கவும், வேறுபட்ட பார்வைகளும், அணுகுமுறையும் தேவைப்படுகிறது. இந்த பின்னணியில் தான் ஸ்டார்ட் அப் துறையில் பெண்கள் எண்ணற்ற தடைகளை உடைத்து சாதனை படைத்து வருகின்றனர்.

பொதுவாக ஸ்டார்ட் அப் என்பதை புதுயுக நிறுவனங்கள் என புரிந்து கொள்கிறோம். அதிக முதலீடு இல்லாமல் சிறிய அளவில் துவங்கப்படும் நிறுவனங்களே ஸ்டார்ட் அப் என கொள்ளப்படுகின்றன. சிறிய அளவில் துவங்கப்பட்டாலும், மற்ற பாரம்பரிய நிறுவனங்கள்போல் அல்லாமல், மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்பு இருப்பதே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தனித்தன்மையாகும். இந்த மிகப்பெரிய வளர்ச்சியையும் குறைந்த காலத்தில் மிக வேகமாக காணக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வளர்ச்சி வாய்ப்பை எதிர்பார்த்தே ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மூலதனமும் கிடைக்கின்றன. புதுமையாக்கம் சார்ந்த எண்ணமே இவற்றுக்கான அடிப்படையாக அமைகிறது.

இப்படி துவக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய பொருளாதாரத்தின் அடித்தளமாகவும் அமைகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேலை வாய்ப்பையும், வளத்தையும் உருவாக்க வல்லவை என்பதோடு, உலகின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன் பெற்றவையாகவும் கருதப்படுகின்றன. உண்மையில், புதுமையாக்கத்தோடு, நிஜ உலகின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான செயல்பாட்டை கொண்டிருப்பதும் ஸ்டார்ட் அப்களுக்கான முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. எண்ணற்ற இளைஞர்கள் இத்தகைய தீர்வின் அடிப்படையில் வெற்றிகரமான ஸ்டார்ட் அப்களை உருவாக்கியிருக்கின்றனர். இன்னும் பலர் இந்த பாதையில் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பாதையில் பெண்களின் பங்களிப்பும் போதிய அளவில் இருப்பதே சரி. பெண்கள் ஸ்டார்ட் அப் துறைக்கு வரும்போது, மிகவும் தேவையான சமத்துவமும், பன்முகத்தன்மையும் சாத்தியமாகிறது. மனித குலத்திற்கு இது அவசியம். அதோடு பெண்கள், பிரச்னைக்கு தீர்வு காண்பதில் தங்களுக்கே உரிய பிரத்யேக தன்மையையும் கொண்டு வருகின்றனர். நிறுவனத்தை துவக்குவதிலும், நிதி திரட்டுவதிலும் பெண்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டாலும், நிறுவனத்தை நடத்துவதில் அவர்களின் அணுகுமுறை போற்றுதலுக்குறியதாக இருக்கிறது.

பெண்கள் நிர்வாகத்தில் உறுதியுடன் பரிவையும் வெளிப்படுத்துவதோடு, ஒப்பிட்டு அளவில் ஆண்களை விட பணத்திற்காக மட்டுமே நிறுவனத்தை நடத்தாமல், அதன் மைய இலக்கை முக்கியமாக கருதுவதாகவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊழியர்களை தக்க வைத்துக்கொள்வதிலும் பெண் நிர்வாகிகள் சிறந்து விளங்குவதாகவும், ஊக்கப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிய வந்துள்ளன. மேலும் பெண்கள் வெற்றி பெறும் போது அதன் பயன் அவர்கள் சார்ந்த சமூகத்திலும் உணரப்படுகிறது.

இது போன்ற காரணங்களினாலே ஸ்டார்ட் அப் துறையில் பெண்களின் பங்கேற்பையும் பங்களிப்பையும் ஊக்குவிப்பது அவசியமாகிறது. மேலும், வரலாற்றை திரும்பி பார்த்தாலும், பொருளாதாரத்தில் பெண்கள் எப்போதுமே முக்கிய பங்கு வகித்திருப்பதை புரிந்து கொள்ளலாம். தொழில்புரட்சி காலத்திற்கு முன்பாகவே பெண்கள் கிராம அளவில் உற்பத்தி மற்றும் விற்பனையில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றனர். இந்த போக்கை தொடர்வதே மனித குலத்தின் எதிர்காலத்திற்கு பொருத்தமாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக வரம்புகளையும், தடைகளையும் பொருட்படுத்தாமல் கண்களில் கனவுடனும், மனதில் உறுதியுடனும் தொழில்முனைவு பாதையில் அடியெடுத்து வெற்றி பெறும் பெண்களின் வரிசை மிகப்பெரிதாக இருக்கிறது. இந்த வரிசையின் கீற்றை தான் இந்த தொடரில் பார்த்தோம். இந்த சாதனை பெண்களின் வெற்றிக்கதைகள், மேலும் பல பெண்கள் ஸ்டார்ட் அப் துறையை நோக்கி அடியெடுத்து வைக்க ஊக்கம் அளிக்கும் என நம்பலாம்.

நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com