ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் போலவே நெடுவாசலில் விவசாயிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போராட்டம், சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், திரைக்கலைஞர்கள் என பரந்து விரிந்து வருகிறது. இதுவரையில் எந்த ஒரு போராட்டமும் அரசியல் கட்சிகள் அல்லது தொழிற்சங்கங்கள் என ஏதேனும் ஒரு அமைப்பின் கீழ் தலைமையின் கீழ் பொறுப்பாளர்களின் கீழ்தான் நடக்கும். போராட்டத்தைத் தொடர்வதையும் முடிப்பதையும் அவர்களே முடிவு செய்வார்கள். அவர்களின் குரலுக்கு செவிசாய்த்து போராட்டத்தை நடத்துபவர்கள் அதைத் தொடர்வார்கள் அல்லது முடிப்பார்கள்.
ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் அப்படி நடக்கவில்லை. ஆரம்பித்த போதும் அதன்பிறகு வளர்ந்த போதும் இதுவரையில் எந்த ஒரு அமைப்பும் அரசியல் கட்சியும் நடத்தாத மக்கள் எழுச்சியாக அதே சமயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்தது. கடைசி நேரத்தில் சரியான தலைமையோ வழிகாட்டுதலோ இல்லாததால் முறையாக முடியாமல் வன்முறையில் முடிந்தது. தற்போது நெடுவாசல் போராட்டத்திற்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும் தலைமை தாங்கவில்லை. அரசியல் கட்சி சார்ந்த விவசாய அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கவில்லை. ஆனால் பாஜகவைத் தவிர கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளுமே அந்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானிடம் மனு அளிக்கப்பட்டது.
போராட்டக் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்துப் பேசினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்படாது என்று உறுதிமொழி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முதலமைச்சரின் வேண்டுகோள் குறித்து போராட்டம் நடத்தும் மக்கள் இன்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக அரசுக்குத் தெரிந்தே நடப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக அரசுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் ரூ.11 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் கைவிடப்படுமா அல்லது தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பமான முடிவை தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. இந்தநிலையில், நெடுவாசல் போராட்டக்குழுவின் முடிவுக்காக தமிழகம் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளுமே காத்திருக்க வேண்டியதுதான் தற்போதைய நிலை.