"லஞ்சம், போலி சான்றிதழ், மதம்..." - ஆர்யன் கான் வழக்கு அதிகாரி சமீரை சுற்றும் சர்ச்சைகள்!

"லஞ்சம், போலி சான்றிதழ், மதம்..." - ஆர்யன் கான் வழக்கு அதிகாரி சமீரை சுற்றும் சர்ச்சைகள்!
"லஞ்சம், போலி சான்றிதழ், மதம்..." - ஆர்யன் கான் வழக்கு அதிகாரி சமீரை சுற்றும் சர்ச்சைகள்!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீதான லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடத்த தனி அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், சமீர் இன்று டெல்லியில் இருக்கும் தலைமையகத்தில் ஆஜராகி இருக்கிறார்.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அவருக்கு ஜாமீன் கிடைப்பது தொடர்பான எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆர்யனை கைது செய்தவரும், இந்த வழக்கை விசாரித்து வரும் ஐஆர்எஸ் அதிகாரியுமான சமீர் வான்கடேவை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் புதிய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர் கொசாவி (Gosavi) என்பவர். இவரின் உதவியாளர் பிரபாகர் செயில் சமீபத்தில், ``சிறையில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க, நடிகர் ஷாருக் கானிடம் இருந்து 25 கோடி ரூபாய் வரை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்" என்று தனது பேட்டியில் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த லஞ்சப் புகாரால் சமீர் வான்கடேவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

சமீர் வான்கடே லஞ்சம் கேட்டது தொடர்பான புகாரை விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று உத்தரவு பிறப்பித்து இருப்பதோடு, மும்பை மண்டல துணை இயக்குநரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை கண்காணிப்பு அதிகாரியுமான ஞானேஷ்வர் சிங் இந்த விசாரணையை மேற்பார்வையிடுவார் என்றும் அறிவித்திருக்கிறது. அதேநேரம், குற்றச்சாட்டுக்கு ஆளான சமீருக்கு டெல்லியில் இருக்கும் தலைமை ஆணையத்தில் ஆஜராக சம்மன் பெற்றுள்ளார். அதன்படி, இன்று அவர் டெல்லியில் ஆஜராக இருக்கிறார்.

நவாப் மாலிக் குற்றச்சாட்டு: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சராக இருப்பவருமான நவாப் மாலிக், ஆர்யன் கான் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே அதிகாரி சமீர் வான்கடே தொடர்பாக கருத்துகள் தெரிவித்து வருகிறார். அது கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டுள்ளது எனலாம். கைது விவகாரத்தின் ஆரம்பத்திலேயே, `ஆர்யன் கானை திட்டமிட்டு இந்த சதிவலையில் சிக்கவைத்துள்ளனர்" என்ற நவாப் மாலிக், "போலியான சான்றிதழ்களை கொடுத்து வான்கடே வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அவர் ஒரு முஸ்லிம். ஆனால் தான் இந்து என்று போலி சாதி சான்றிதழ் பயன்படுத்தி பட்டியலினத்தவர்கள் இடஒதுக்கீட்டில் இந்த வேலையை பெற்றுள்ளார்" என்றவர், வான்கடேவின் சாதி சான்றிதழையும், திருமணப் புகைப்படத்தையும் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் புகைப்படம் புதிய பரபரப்பு வித்திட்டது.

அமைச்சரின் கருத்துக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம் பதில் கொடுத்துள்ள சமீர் வான்கடே, ``இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் என்னை குறிவைத்து தாக்கி வருகின்றனர். அதுவும் ஓர் அரசின் பிரதிநிதியாக அமைச்சராக அறியப்படுபவர் இதனை செய்கிறார்.

அமைச்சர் இப்படி தனிப்பட்ட முறையில் என்ன குறிவைக்க காரணம், அவரின் உறவினர் சமீர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்தது முதலே, என்னைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து வருகிறார்கள். எனது தனிப்பட்ட ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டு எனது மற்றும் எனது குடும்பத்தின் தனியுரிமையில் தேவையற்ற தலையீடு செய்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் என்னையும், எனது குடும்பத்தையும் அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டது. எனது குடும்பம் பல மதங்களை கொண்ட மதச்சார்பற்ற குடும்பம். ஆம், என் தந்தை ஒரு இந்து, தாய் இஸ்லாமியர். நாங்கள் யாரையும் மத ரீதியாக துன்புறுத்தவில்லை.

ஆனால், அமைச்சரின் நடவடிக்கைகளால் நானும் எனது குடும்பமும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். இப்போது நாங்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளோம்" என்றுள்ளார்.

நேற்றிரவு டெல்லி வந்த வான்கடே இதே கருத்தை வெளிப்படுத்தியதுடன், ``இந்த வழக்கில் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதனிடையே, லஞ்ச புகாரில் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அவர் இந்தப் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

லஞ்சப் புகார் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரி ஞானேஷ்வர் சிங், ``விசாரணையை இப்போதுதான் தொடங்கி விட்டோம். விசாரணை தொடங்கி இருப்பதால், சமீர் தொடர்ந்து பதவியில் இருப்பாரா என்பதை இப்போது சொல்ல முடியாது" என்று சூசமாக தெரிவித்துள்ளார். இப்படி ஆர்யன் கான் விவகாரம் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள், விசாரணை என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com