"என்னால் தாங்க முடியவில்லை!" - ஓடிடி தளங்களை ஒதுக்கும் நவாஸுதீன் சித்திக்... காரணம் என்ன?

"என்னால் தாங்க முடியவில்லை!" - ஓடிடி தளங்களை ஒதுக்கும் நவாஸுதீன் சித்திக்... காரணம் என்ன?
"என்னால் தாங்க முடியவில்லை!" - ஓடிடி தளங்களை ஒதுக்கும் நவாஸுதீன் சித்திக்... காரணம் என்ன?

பிரபல இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக், "இனி ஓடிடி தளங்களுக்காக செயலாற்றப் போவதில்லை" என்று அறிவித்துள்ளார். இதன் பின்னணி தொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.

நவாஸுதீன் சித்திக்... பாலிவுட் சினிமாவின் முன்னணி கலைஞர். இந்திய ஸ்ட்ரீமிங் துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர், திடீரென ஓடிடி தளத்துக்கான தயாரிப்புகளில் இனி நடிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார். சமீபத்தில் நவாஸ் அளித்த பேட்டியில், ``ஓடிடி தளமானது தேவையற்ற நிகழ்ச்சிகளின் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர்களுக்கு இந்த தளம் இப்போது மோசடி ஆகிவிட்டது. பாலிவுட்டின் முக்கிய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஓடிடி துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுடன் லாபம் பெறும் நோக்கத்துடனே பணியாற்றத் தொடங்கியுள்ளனர். தற்போது ஓடிடியில் இருக்கும் படங்களின் எண்ணிக்கை அதற்கென இருந்த தரத்தை கொன்றுவிட்டது.

இதனால் நான் `சேக்ரட் கேம்ஸ்' போன்ற தொடர்களில் பணியாற்றியபோது நான் அனுபவித்த டிஜிட்டல் ஊடகத்தின் உற்சாகமும் சவால்களும் இப்போது இல்லை. இதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாத நிலையில் எப்படி அதில் தொடர்ந்து பயணிக்க முடியும்" என்று விரக்தியாக பேசியிருந்தார். ஓடிடி தளம் குறித்து நவாஸுதீன் அதிருப்தி வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல.

சில வாரங்கள் முன்பு பேசியவர், ``பணத்தை மட்டுமே எண்ணமாக கொண்டு செயல்படும் பழைய தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தை தற்போது கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர். அந்த மாதிரியான எண்ணம் கொண்டவர்களிடம் நல்ல உள்ளடக்கத்தை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் ஒரே ஃபார்முலாவை மீண்டும் மீண்டும் விற்பவர்கள். இதுபோன்றவர்கள் ஸ்ட்ரீமிங் தொழிலைக் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன். வெளிப்படையாகச் சொன்னால், ஓடிடி தளம் இந்தியாவில் சிறப்பான தொடக்கத்தை கண்டிருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இதுபோன்ற தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரீமிங் துறையில் ஈடுபடும்போது தான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு வியாபாரம்.

நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் இந்தியாவில் உள்ள இளம் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு உலக அளவில் அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன என்பதால் இது தொடர வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போது நடக்கும் மாற்றம் கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஏனென்றால், பெரிய தயாரிப்பாளர்களால் வணிகத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அவர்களுக்கு கலை பற்றி எந்த எண்ணமும் இல்லை. அவர்கள் ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின் மற்றும் ஒரு வில்லன் என எந்த கதையும் இல்லாத ஒரே பார்முலாவை கொண்டு நிலைக்க நினைக்கிறார்கள்.

இதே ஃபார்முலாவை கடந்த 30-40 ஆண்டுகளாக தான் நாம் செய்து வருகிறோம். இன்னும் அது சலிப்படையாமல் இருந்து வருகிறது. என்றாலும் கடவுள் இவர்கள் போன்றவர்களை நுழைய விடாமல் தடுத்து வருகிறார் என நம்புகிறேன். எனக்கு கமர்ஷியல் சினிமா பிரச்சனை இல்லை. ஆனால், பழைய படத்தை காபி அடிக்கும் போலி உள்ளடக்கம் கொண்ட படங்களில்தான் பொறுமை இல்லை" என்று இதே கருத்தை பிரபலித்து தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒரிஜினலாக தயாரித்த முதல் இந்திய வெப் தொடர் என்றால் அது, நவாஸுதீன் நடிப்பில் 2018-ல் வெளியான `சேக்ரட் கேம்ஸ்' மட்டுமே. அதில் கணேஷ் கைடோண்டே என்ற கேங்ஸ்டர் பாத்திரம் அவருக்கு அதுவரை கிடைக்காத புகழைப்பெற்று தந்தது. குறிப்பாக இந்த தொடரில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சயீப் அலிகானும் நடித்திருந்தாலும், அவரைவிட அதிகமாக பேசப்பட்டது நவாஸுதீனே. உலக அளவில் அவரை கொண்டுச் சேர்த்து அந்தத் தொடர்.

அத்தொடருக்கு பின் `சீரியஸ் மென்', `ராத் அகேலி ஹை', `மெக்மாஃபியா', `போட்டோகிராப்', `கூம்கேது' என்று இவரின் படங்கள், வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக கொரோனா காலத்தில் இவர் நடித்த வெப் தொடர்கள், படங்களுக்கு கிடைத்த வரவேற்பு பெரிதாக கவனம் ஈர்த்தது. இந்தி திரையுலகில் இருந்து `OTT பாட்ஷா'க்களாக அறியப்பட்டவர்கள் இருவர். முதலிடத்தில் பங்கஜ் திரிபாதி என்றால், அதற்கடுத்த இடம் அவரின் நெருங்கிய நண்பரான நவாஸுதீனுக்கே எனலாம்.

வாய்மொழியாக இல்லாமல் கருத்துக்கணிப்புகளும் அவரையே சொல்கின்றன. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் பிராண்ட்ஸ் (IIHB) சமீபத்தில் இந்தியாவில் ஓடிடி தளத்தின் தாக்கம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியிருந்தது. இந்த முடிவுகள் சில மாதங்கள் முன் வெளியிடப்பட்டிருந்தது. அதில், ஓடிடி தளத்தின் `கிங்' பங்கஜ் திரிபாதியை குறிப்பிட்டு இருந்ததோடு, ஓடிடி தளத்தை ஆள்பவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை நவாஸுதீனுக்கு அளித்து அவரை `ஓடிடியின் பாட்ஷா' என்று வர்ணித்திருந்தது. இந்த மதிப்பிற்கேற்ப அவரும் ஓடிடி தளங்களில் அதிகமான ஈடுபாடுகளை காண்பித்து வந்தார்.

அப்படி இருந்தவர் இப்போது ஓடிடியை விட்டு விலகப்போவதாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் தெரிவித்த காரணங்களும் சரியே. தற்போது ஓடிடி தளங்களில் இந்தி படைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தப் படைப்புகள் நவாஸுதீன் கூறியது போல் லாபத்தை அடிப்படையாக கொண்ட மசாலா படங்களாக, எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத வெப் தொடர்களாக தான் இருக்கின்றன. கொரோனா காலத்துக்கு முன்பு இந்தியில் இருந்து நல்ல உள்ளடக்கங்களை கொண்ட படைப்புகள் வந்தன. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக ஓடிடி பங்களிப்பில் சற்று பின்தங்கியது. பெரிய எண்ணிக்கையில் படைப்புகளை இந்தி திரையுலகம் கொடுத்தாலும், அந்தப் படைப்புகள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியது.

அதேநேரம், மலையாள, தமிழ் சினிமாவை உள்ளடக்கிய தென்னிந்திய சினிமா இந்த காலகட்டத்தில் ஓடிடியின் முகத்தை, ரசனையை மாற்றியது. இதனால் தென்னிந்திய சினிமாவுக்கென ஓடிடியில் தனி பார்வையாளர்கள் கிடைக்கத் தொடங்கினர். இதில் பின்தங்கிய இந்தி திரையுலகம் இப்போது படங்களை வெளியிட தொடங்கியிருக்கிறது. இப்படி வெளியிடப்பட்டு வரும் படைப்புகள் அனைத்தும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வருபவை. என்றாலும், அவை `சேக்ரட் கேம்ஸ்' போல் சர்வேதேச கவனத்தையோ, தென்னிந்திய படைப்புகளை தேசிய கவனத்தையோ பெறத் தவறி வருகின்றன. இந்த ஆதங்கத்தை தான் கடந்த சில நாட்களாக கொட்டிவந்த நவாஸுதீன் இப்போது ஒரேயடியாக ஓடிடி முழுக்குபோட போவதாக அறிவித்துவிட்டார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com