அப்போது குழந்தைகளை காப்பாற்றிய இந்திய ராஜா; இப்போது நன்றி மறவாமல் இருக்கும் போலந்து
இரண்டாம் உலகப்போரின் போது போலந்திலிருந்து வந்த குழந்தைகளுக்கு நவநகரைச் சேர்ந்த ஜம்சாஹேப் திக்விஜய்சின்ஹ்ஜி ரஞ்சித்சின்ஹ்ஜி ஜடேஜா அகதிகள் முகாம்களைக் கட்டி காப்பாற்றினார். தற்போது உக்ரைனில் இருந்து தப்பிச் செல்லும் இந்தியர்களுக்கு போலந்து அரசு உதவிக்கரம் நீட்டுகிறது
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் மால்டோவா போன்ற உக்ரைனின் எல்லையோர நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில், இந்திய மக்கள் நாடு திரும்ப உதவுவதற்கு சிறப்பு விமானங்களை இயக்குவோம் என்று போலந்து அரசு உறுதியளித்துள்ளது. இதுபோன்ற நேரத்தில், இரண்டாம் உலகப் போரின்போது போலந்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவிய இந்திய மகாராஜாவை மக்கள் நினைவுகூர்கிறார்கள்
போலந்து குழந்தைகளை காப்பாற்றிய நவநகர் மகாராஜா:
இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட போலந்து மற்றும் சோவியத் யூனியனில் உள்ள சிறை முகாம்களில் இருந்து இரண்டு முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 500 போலந்து குழந்தைகள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையை நோக்கிச் செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு துறைமுகங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நவநகர் துறைமுகம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.
இன்றைய குஜராத்தின் கத்தியவார் பகுதியில் உள்ள நவநகர் சமஸ்தானத்தில் அப்போதைய மகாராஜாவாக ஜம்சாஹேப் திக்விஜய்சின்ஹ்ஜி ரஞ்சித்சின்ஹ்ஜி ஜடேஜா இருந்தார். அவர் போலந்து நாட்டு குழந்தைகளிடம், "உங்களை நீங்கள் அனாதைகளாகக் கருதாதீர்கள். நீங்கள் இப்போது நவநகர் மக்களாக கருதப்படுவீர்கள். நான் நவநகர் மக்கள் அனைவருக்கும் தந்தை, உங்களுக்கும் தந்தை" என்று கூறினார், இது அவர்களுக்கு நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்தது.
அதன்பின்னர், மகாராஜா திக்விஜய்சிங்ஜி பாலச்சடி மற்றும் சேலாவில் போலந்து குழந்தைகளுக்காக அகதிகள் முகாம்களை கட்டி, அவர்களுக்கு மருத்துவ உதவி, தங்குமிடம் மற்றும் கல்விக்கான ஏற்பாட்டினை செய்தார்.
மகாராஜாவின் இந்த கருணை மனப்பான்மையை இன்றும்கூட போலந்து மக்கள் நன்றியுடன் நினைவில் வைத்துள்ளார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக நவநகர் மகாராஜாவின் மரணத்திற்குப் பின் அவருக்கு போலந்து நாட்டின் உயரிய விருதான ‘கமாண்டர் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கப்பட்டது. மேலும், போலந்து நாட்டின் பிரபலமான வார்சா பெட்னார்ஸ்கா உயர்நிலைப் பள்ளியின் கௌரவப் புரவலராகவும் போலந்து மகாராஜா நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 2013ஆம் ஆண்டில், போலந்து அரசாங்கம் வார்சாவில் நவநகர் மகாராஜாவின் நினைவாக ‘குட் மகாராஜா சதுக்கத்தையும்’ திறந்து வைத்தது.
அன்றைய இக்கட்டான காலகட்டத்தில் போலந்து மக்களுக்கு நவநகர் மகாராஜா உதவியதுபோல, இப்போது உக்ரைனில் இருந்து தப்பிவரும் இந்திய மக்களை கனிவுடன் நடத்தி அவர்களுக்கு உதவி செய்கிறது போலந்து.

