இந்தியாவை மிரட்டும் இயற்கை பேரிடர்கள்: ஐபிசிசி அறிக்கை உண்மையாகிறதா? - விரிவான பார்வை

இந்தியாவை மிரட்டும் இயற்கை பேரிடர்கள்: ஐபிசிசி அறிக்கை உண்மையாகிறதா? - விரிவான பார்வை
இந்தியாவை மிரட்டும் இயற்கை பேரிடர்கள்: ஐபிசிசி அறிக்கை உண்மையாகிறதா? - விரிவான பார்வை

கேரளா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தற்போது பெய்யும் கனமழையால்  பல உயிர்கள் பறிபோயுள்ளன. உலகில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது இந்தியாவில் ஏற்படும் தொடர்ச்சியான பேரிடர்கள், ஐபிசிசி அறிக்கையை உண்மையாக்குகிறதா? என்ன சொல்லியிருந்தது அந்த அறிக்கை என பார்ப்போம்…

135% கூடுதல் மழை - கேரளாவை ஆட்டிப்படைக்கும் கனமழை:

கேரளாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த அதீத கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்றவற்றில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி முதல் தற்போது வரை கேரளாவில் மட்டும் 135 விழுக்காடு கூடுதலாக மழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் 192 புள்ளி 7 மில்லி மீட்டர் மட்டுமே மழை பதிவாகும். ஆனால், தற்போதோ 453 புள்ளி 5 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்யும் பொழுதெல்லாம் கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியது. இதில் 483 பேர் உயிரிழந்த நிலையில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருள் சேதம் ஏற்பட்டது.

அந்த பாதிப்பு சற்று சரி செய்வதற்கு உள்ளாகவே 2019ஆம் ஆண்டு பெய்த பெருமழையில் 127 பேர் உயிரிழந்தனர். 2020 ஆண்டும் கனமழையால் மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 49 பேர் உயிருடன் புதைந்து மாண்டு போயிருந்தனர். 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டதாக கேரள அரசு கூறியது. கேரளா முழுவதும் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் துயரம் இந்த ஆண்டும் தொடர்கிறது.

உத்தராகண்ட்டை உருக்குலைக்கும் கனமழை:

இமயமலை மாநிலமான உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக பெய்த பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில், மலையேற்ற குழுவைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போய்விட்டதாகவும், அவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பேரழிவுகளை சந்தித்து வருகிறது.

இதனிடையே, உத்தரப்பிரதேசம், சிக்கிம், மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழை பொழிந்து வருகின்றது. மழையால் சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுடன் கேங்க்டாக் நகரை இணைக்கும் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே கனமழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு காரணமாக மத்தியப்பிரதேசம், ஒடிசா, அஸ்ஸாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன, இம்மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே உலுக்கும் இயற்கை பேரிடர்கள்:

இந்தியா மட்டுமின்றி கடந்த ஜூலை மாதம் முதலே உலகின் பெரும்பாலான நாடுகள் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு போன்ற ஏதோ ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டு கொண்டே உள்ளது. இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவைதானே இதில் புதிதாக ஏதுமில்லையே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதில் பல இயற்கை பேரிடர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் எந்த அறிவியலாளராலும் கணித்திருக்க முடியவில்லை. பேரிடர்களை முன்கூட்டியே கணித்து விடும் அறிவியல் தொழில்நுட்பங்களால் கூட இந்த இயற்கை பேரிடர்களை கணித்திருக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதி தீவிர மழை, வறட்சி, மீள முடியாத பேரிடர்கள்: எச்சரிக்கும் ஐபிசிசி அறிக்கை சொல்வதென்ன?

பன்னாட்டு அளவில் காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களுக்கு முக்கியமான கருவியாக ஐபிசிசி தயாரித்து வெளியிடும் அறிக்கைகள் விளங்குகின்றன. இந்த அமைப்பில் தற்போது 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

"புவி வெப்பமயமாதல் ஏற்படுத்தும் தாக்கத்தால் அதி தீவிர மழைப்பொழிவும், வறட்சியும் ஏற்படும். சில இடங்களில் இவ்விரு நிகழ்வுகளும் தொடச்சியாகவோ அல்லது ஒரே நேரத்திலோகூட நிகழும். இதனால் பாதிக்கப்படும் மக்கள் அதிலிருந்து மீளவே முடியாத நிலை உண்டாகும்" என்று காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி.-யின் புதிய அறிக்கை எச்சரிக்கிறது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்…

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி. அமைப்பு தனது புதிய ஆய்வறிக்கையை  ஜெனிவாவில் ஆகஸ்டு மாதம் வெளியிட்டது. Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்தும் மனிதர்களால்தான் காலநிலையில் மாற்றங்கள் உண்டாகின்றன என்பதற்கான ஆதாரங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி என்பது பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தினாலும் கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலையானது செல்சியசை தொட்டுவிடும் என்பதே ஆகும். தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில் 1750-ஆம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம் என்பதை அறிவியலாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலானது நீர் சுழற்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் பருவமழைப் பொழிவு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் அதி தீவிர மழைப்பொழிவும், வறட்சியும் ஏற்படும். சில இடங்களில் இவ்விரு நிகழ்வுகளும் தொடச்சியாகவோ அல்லது ஒரே நேரத்திலோகூட நிகழும். இதனால் பாதிக்கப்படும் மக்கள் அதிலிருந்து மீளவே முடியாத நிலை உண்டாகும்.

2019ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் காணப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் செறிவானது அதற்கு முந்தைய 2 மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவானது அதற்கு முந்தைய 800,000 ஆண்டுகளில் காணப்படாத அளவாகும்.

1970ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும். 1900ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல் மட்ட உயர்வின் வேகமானது கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும். 2100ஆம் ஆண்டில் கடல் நீர்மட்டம் 2மீ அளவிற்கும், 2150ஆம் ஆண்டில் 5மீ அளவிற்கும் உயர வாய்ப்புள்ளது.

> முழு அறிக்கை இங்கே https://www.ipcc.ch/report/ar6/wg1/

ஐ.பி.சி.சி. அறிக்கை குறித்து தெளிவுபடுத்தும் 'பூவுலகின் நண்பர்கள்' இயக்கம், "அறிவியல் ஆதாரங்களுடன் காலநிலை மாற்றத்தின் தற்போதைய நிலை மற்றும் தீவிரத்தை இந்த அறிக்கை நமக்கு எடுத்துரைத்துள்ளது. பாரிஸ் ஒப்பந்ததின்படி உமிழ்வை குறைத்தால் கூட இனி நமது இயல்பு வாழ்க்கையானது பேரிடர்களுக்கு நடுவில்தான் அமையும் என்பதே இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தியாகும்.

தற்போது இருக்கும் உமிழ்வு அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல் மிக வேகமாக நம் வாழ்விடங்களை பேரிடர்களில் இருந்து தப்பிக்கும் வகையில் தகவமைத்துக் கொள்ள நாம் முயல வேண்டும். இனி நாம் வெளியிடும் ஒவ்வொரு சிறு உமிழ்வும் இப்புவியின் எதிர்காலத்தை வேகமாக சீரழிக்கும் என்பதை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்திவிட்டனர்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com