"எங்களை நோயாளின்னு தள்ளி விட்றாங்க" - தொழுநோயாளிகளின் வேதனைக்கு செவிசாய்க்குமா சமூகம்!

"எங்களை நோயாளின்னு தள்ளி விட்றாங்க" - தொழுநோயாளிகளின் வேதனைக்கு செவிசாய்க்குமா சமூகம்!

"எங்களை நோயாளின்னு தள்ளி விட்றாங்க" - தொழுநோயாளிகளின் வேதனைக்கு செவிசாய்க்குமா சமூகம்!

கடந்த காலங்களில் சமூகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறந்தள்ளி வைத்து பார்க்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தமிழக அரசு தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு என்னும் திட்டத்தை உருவாக்கி, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய வசதிகளை செய்து புதிதாக குடியிருப்பு பகுதிகளில் தங்க வைத்து வந்தது. தொடர்ந்து தொழுநோய் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது என்று, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்கு மருந்துகளை வழங்கி முற்றிலுமாக குணப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு முகாம் தருமபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்களுக்கு அரசு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்த மக்கள் அரசு வழங்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டும், நியாய விலை கடையில் வழங்கும் பொருட்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர். ஆனால் மேலும் தங்களது வருவாய்க்காக அருகிலுள்ள பகுதிகளில் தூக்கி வீசப்படுகின்ற, இரும்பு, தகரம், பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

ஆனால், அரசு வழங்குகின்ற உதவித் தொகையில் சிலருக்கு மாதம் ரூ.1500, சிலருக்கு ரூ.1000 என வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது, தமிழக முதல்வர் உதவி தொகையை 2000 ஆக உயர்த்தி தருவதாக கூறியுள்ளார். இந்த அரசு வழங்குகின்ற ஊக்கத்தொகையை வைத்து மாதம் முழுவதும் குடும்பம் நடத்துவதற்கு முடியவில்லை. எனவே 2000 ரூபாய் என்பதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்தால் தங்களது வாழ்க்கையை மாதம் முழுவதும் நடத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

அதேபோல் இலக்கியம்பட்டி ஊராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் கிராமங்களை தூய்மை செய்யவும், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்வதற்கும் வருவதில்லை. இதனால் தாங்கள் வசிக்கும் பகுதியை முழுமையாக தூய்மையாக வைக்க முடியவில்லை. அதேபோல் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் தரமான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்து வருகிறோம். இதுவரையிலும் தங்களுக்கு தேவையான சாலை வசதி கிடைக்கவில்லை.

அரசின் சார்பில் போதிய அளவில் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு குடிநீரை சுத்திகரிப்பு செய்து சுத்தமாக அருந்துவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். தற்பொழுது வீடுகள் முழுவதும் பழுதாகி மழைக் காலங்களில் மழைநீர் வழிந்து வருகிறது.

மேலும் வீடு முழுவதுமாக விழுகின்ற நிலையில் இருந்து வருகிறது. அந்த வீடுகளில் தங்களால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு எங்களின் வீடுகளை புதுப்பித்து கொடுக்க வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு தூய்மை காவலர்களை அனுப்பி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நியாய விலை கடைக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணாம்பட்டிக்கு சென்று வரும் நிலையுள்ளது. பாரதியார் நகரில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும். அதேபோல் எங்களின் மீது வாழ்வாதாரத்தின் மீது கருணை கூர்ந்து மாதம் வழங்கும் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனிவாசன் என்பவர் கூறுகையில், ''அரசு எங்களுக்கு 2 சென்ட் இடத்தை இலவசா பட்டா போட்டு கொடுத்தது. நாங்க இங்கே 40 வருஷமா இருக்கோம். இங்க நாங்க தங்கியிருக்க வீடு எல்லாம் ரொம்ப மோசமாயிடுச்சு. எங்களுக்கு இந்த வீட்ட இடிச்சுட்டு வீடு கட்டி கொடுத்தா பயனுள்ளதாக இருக்கும். சாலைகளை சரி செஞ்சு கொடுக்கணும். எங்களுக்கான உதவித்தொகை 2ஆயிரத்துல இருந்து 3ஆயிரமா அதிகரிச்சு தரணும்'' என்றார்.

முனியம்மாள் என்பவர் கூறுகையில், ''70 குடும்ப இங்க இருக்குறோம். ரேஷன் கடை ரொம்ப தூரமாக இருக்கு. எங்களால போக முடியல. போனாலும், நோயாளின்னு சொல்லி எங்க தள்ளி விட்றாங்க. ரேஷன் கடை இங்க பக்கத்துலயே அமைச்சு கொடுத்த ரொம்ப உதவியா இருக்கும்'' என்றார்.

ராம மூர்த்தி, ''பொதுமக்கள் இங்க 200 பேர் இருக்கிறோம். தொழுநோயால் பாதிக்கப்பட்ட 36 பேர் இருக்கிறோம். சமூகம் எங்கள மோசமான பாத்துட்டு இருந்த நிலை தற்போது மாறியிருக்கிறதா நெனைக்கிறேன். பொதுமக்கள் எங்களை அணுகும் விதத்துல மாற்றம் ஏற்ப்பட்டிருக்கு. இது நல்ல விஷயம். விழிப்புணர்வும் இதுக்கு ஒரு காரணம். இன்னும் அதிகமா விழிப்புணர்வு செய்யணும்.

இங்க இருக்கு வீடுகள் இடியும் தருவாயில் இருக்கு. அத அரசு பராமரிச்சு தரணும். மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கிட்ட மனு கொடுத்து பாத்துட்டோம். இந்த ரோட்ல எங்க கால வைச்சுட்டு நாங்க நடக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. குத்துது. அரசு இத கவனத்துல எடுத்துக்கணும்'' என்றார்.

- விவேகானந்தன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com