அந்நிய முதலீட்டை அன்று எதிர்த்த மோடி..இன்று ஆதரிக்கிறார்

அந்நிய முதலீட்டை அன்று எதிர்த்த மோடி..இன்று ஆதரிக்கிறார்
அந்நிய முதலீட்டை அன்று எதிர்த்த மோடி..இன்று ஆதரிக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து பேசிய கருத்து ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை கடுமையாக எதிர்த்த  பாஜக, தற்போது அதனை ஆட்சியில் ஆதரித்து வருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை 26% லிருந்து 100% ஆக உயர்த்த வர்த்த அமைச்சர் ஆனந்த் சர்மா முயன்றார். அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இதனால் பாஜகவின்   எதிர்ப்பினால்தான் காங்கிரஸ் இதை நிறைவேற்றவில்லை.  ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப் பெரிய பொருளாதார சீர்த்திருத்தங்களில் ஒன்றாக ஜிஎஸ்டி வரி கருதப்படுகிறது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மத்திய அரசு மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த வீடியோவை பலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மோடியை விமர்சித்து வருகின்றனர். 

இந்த வரிசையில் விமானம், சில்லறை விற்பனை, கட்டுமானம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி பாஜக அரசு இன்று முடிவு எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  ஒற்றை வணிகப் பெயர் கொண்ட பொருட்களை விற்கும் வணிகத்தில் அரசின் அனுமதி இல்லாமல் நேரடியாக 100 சதவிகித முதலீடு மேற்கொள்ள அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 49 சதவீதம் மட்டுமே அனுமதி இருந்தது.

இதே போல், இந்திய தனியார் விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவிகிதம் வரை முதலீடு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முடிவுகளால் இந்தியாவில் அன்னிய முதலீடு வரத்து அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்பும் பெருகும் என பாஜக அரசு கூறியுள்ளது.

மத்திய அரசின் முடிவு கொடூரமான நடவடிக்கை என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.என்.சி நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதற்கு இந்த முடிவு வழிவகுக்கும். பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதை மீறி செயல்படுகிறது. இதுஒரு கொடூரமான நடவடிக்கை” என்று குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க 2012-ம் ஆண்டு காங்கிரஸ் அரசின் அந்நிய முதலீடு கொள்கையை எதிர்த்து மோடிய பேசிய கருத்தினை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். காங்கிரஸை குற்றம்சாட்டி மோடி பேசிய பேச்சில், காங்கிரஸ் என்ற வார்த்தையை அடித்து அதே இடத்தில் பாஜக என்று நிரம்பி ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், பாஜக மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தை தான் பாஜக எதிர்த்ததாகவும், ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தை எதிர்க்கவில்லை என்றும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com