நாமக்கல்: புதிய மாணவ சேர்க்கைக்கு ரூ.1000 உதவித்தொகை தரும் அரசுப் பள்ளி
நாமக்கல்லை சேர்ந்த அரசு பள்ளியொன்றில் புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகின்றனர் அப்பள்ளி ஆசிரியர்கள். இதனால் அப்பள்ளியில் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பல பெற்றோர் முன்வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் முதல் தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போதுவரை அனைத்து பள்ளிகளிலும் இணையவழியாக மட்டுமே பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இணையவழி கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்களுக்கென கல்வி தொலைக்காட்சி ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது.
கல்வி கற்கும் முறையில் மட்டுமே இந்த மாற்றங்கள் யாவும் நிகழ்ந்துள்ளன. மாணவர் சேர்க்கை முறையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படுவதில்லை. அந்தவகையில் இவ்வருடத்துக்கான மாணவ சேர்க்கை தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் எப்போதும்போல நடந்துவருகிறது.
அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் சேர்க்கையில், அப்பகுதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 மற்றும் 11 ம் வகுப்புகளில் இதுவரை 18,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சேர்க்கை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல்லில் தனியார் பள்ளிகளிலிருந்து அதிகளவில் மாணவ மாணவியர் அரசு பள்ளியை நோக்கி வந்துள்ளது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவ சேர்க்கை அதிகரித்ததில், அரசு பள்ளி நிர்வாகங்களின் தனிப்பட்ட முயற்சிகள் முக்கிய காரணமாக இருக்கிறது. அந்தவகையில் பல அரசு பள்ளி நிர்வாகமும் சுகாதாரமான பள்ளி வளாகம், நவீன தொழில்நுட்ப வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்து மாணவர்களை கவர்ந்து, அதன்மூலம் தங்கள் பள்ளியின் மாணவ சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர்.
அப்படியான ஒன்றாக, கொரோனா நெருக்கடியில் வருமானம் இழந்து வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பள்ளியில் சேர்ந்தால் அவர்களுக்கு ரூ.1000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் எனக்கூறி, அதை நடைமுறையிலும் சாத்தியப்படுத்தியுள்ளது நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 6, 7, 8 ம் வகுப்பில் தமிழ், ஆங்கில வழியில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
130 ஆண்டுகள் தொன்மையும், பெருமையும் கொண்ட நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாகவும், வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோரின் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்கமளிக்கும் வகையிலும் இந்த 1000 ரூபாய் ஊக்கத்தொகை முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தை மேம்படுத்தப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பணத்தை மாணவர்களுக்கு வழங்க அப்பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து நிதி ஆதாரத்தை உருவாக்கியுள்ளனர். இதுவரை இந்த முன்னெடுப்பின் வழியாக 253 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் எவ்வளவு மாணவர்கள் வந்தாலும் இந்த முன்னெடுப்பு கைவிடப்படாது என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த முன்னெடுப்புக்கு பின்னரும்கூட, தொடர்ந்து ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவிடவும் தாங்கள் தயாராக இருப்பதாக பள்ளியின் தலைமையாசிரியர் ஜெகதீசன் கூறியுள்ளார்.
இப்பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவரொருவரின் தாய் காயத்ரி இதுபற்றி நம்மிடையே தெரிவிக்கையில், “தனியார் பள்ளியில் படித்துவந்த எனது 2 குழந்தைகளையும் தற்போது நிலவி வரும் கொரோனா சூழலினால் இந்த அரசுப்பள்ளியில் சேர்க்க வந்தேன். இங்கு மாணவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்றுக்கொடுப்பதோடு, பல்வேறு வசதிகளும் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பெருந்தொற்று காலத்தில் என் பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கும் இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மிகவும் உதவியாக உள்ளது” என்றார்.
இதற்கு முன் வேறொரு பள்ளியில் படித்து, தற்போது இங்கு பயிலும் மாணவர் லோகேஷ் நம்மிடையே பேசுகையில் “நான் முன்பு படித்த பள்ளியை விட இங்கு எனக்கு நிறைய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகிலேயே இந்த பள்ளி இருப்பதால், எனக்கு இன்னும் மகிழ்ச்சி. பள்ளி சார்பில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை எனக்கு கிடைத்திருக்கிறது. அதை நிச்சயம் நல்லமுறையில் பயன்படுத்துவேன். நான் நன்றாக படித்து, இப்பள்ளியிலுள்ள ஆசிரியர்களை போல சிறந்த ஆசிரியராக வர வேண்டும் என்பதே என் லட்சியம்” என்றார்.
இப்படி பலருடைய கனவுகளுக்கு சிறகும், பறப்பதற்கு நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
- துரைசாமி