டூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3

டூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3
டூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3

“அந்தக் காலத்துல”…. என்று வீட்டில் பெருசுகள் கதை சொல்ல ஆரம்பித்தாலே  பழைய  புராணம் பாட ஆரம்பிச்சிட்டீயானு அவர்களை கலாய்ப்பதுண்டு. ஆனால் கொஞ்சம் காது கொடுத்து கேட்டால் அவர்கள்  சொல்லும் கதையில்  அவ்வளவு சுவாரஸ்யம் இருக்கும். அடடே இப்படிப்பட்ட காலத்தில் நாம் இல்லாமல் போய்விட்டோமே என்று ஏக்கம் கொள்ள தோணும். அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் டூரிங் டாக்கிஸ். டெண்ட் கொட்டாய் என்றும் இதை பலர் சொல்வதுண்டு. 


அந்தக் காலத்துல உள்ளவங்களுக்கு பொழுது போக்குனு பெருசா ஏதும் இருக்காது. அதனாலயே அவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது டூரிங் டாக்கிஸ். படத்துக்கு போவது என்றால் அவ்வளவு குஷி! அதுவும் வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்கும் வயதுக்கு வந்த பெண்களை கேட்கவும் வேண்டாம்.  ஊருக்குள் வரும் சினிமா வண்டி தரும் நோட்டீஸ் தான் இவர்களை பொருத்தவரையில் டிரெய்லர், fisrt look poster எல்லாமே!.

நோட்டீஸில் படத்தின் பெயர், நாயகன், நாயகி படம் போட்டிருக்கும். அதிலும் எம்ஜி ஆர், சிவாஜி படங்கள் என்றால் அந்த நோட்டீஸை வாங்க ஒரு இளவட்ட கூட்டமே ஓடும். வீட்டிலிருக்கும் நண்டு, சிண்டு வரைக்கும் வண்டி பின்னடிதான் நிற்கும். நோட்டீஸை வாங்கிய கையோடு, யார் யாரெல்லாம் படத்துக்கு கிளம்புவது… எப்ப போகலாம் என்பது பற்றி ஒரு பெரிய திட்டமே போடுவார்கள் டூரிங் டாக்கிஸ் பிரியர்கள். 

முதல் ஆட்டம் 7 மணிக்கு அதாவது first show. இரண்டாவது ஆட்டம் 10 மணிக்கு. பெண்கள், குழந்தைகள் என குடும்பங்கள் போகக் கூடிய ஆட்டம் முதல் ஆட்டம்தான். இரண்டாவது ஆட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் இருக்க மாட்டார்கள். அதனால் அது ஆண்களின் ராஜ்ஜியம்தான்   ஒரு பெரிய கீற்றுக் கொட்டகைக்குள்தான் படம் திரையிடப்படும் கொட்டகை இல்லைனா… கூடாரம் போட்டிருப்பாங்க. பெஞ்ச் டிக்கெட், சேர் டிக்கெட், தரை டிக்கெட் என மூன்று வகை டிக்கெட்டுகள் விற்கப்படும். தரை டிக்கெட் அதிகபட்சம் 1.50 காசு அதனாலயே தரை டிக்கெட் முதலில் நிரம்பிவிடும். ஆண்களும் பெண்களும் (புருஷன் பொண்டாட்டிய இருந்தா கூட ) தனித் தனியா தான் உட்கார்ந்துருப்பாங்க. இவர்களுக்கு இடையில் இரண்டடியில் குட்டிச் சுவர் எழுப்பபட்டிருக்கும்.

தரையில் உட்கார்ந்திருக்கும் போது திரையை ஒருவரின் தலை மறைத்தால் உடனே மணலை குவித்து அதை மேடாக்கி அதன் மீது ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். சிலர் கால் நீட்டி படுத்துக் கொண்டே படம் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும் போது படுத்து உறங்கிவிட்டு அடுத்த நாள் கதை கேட்பதெல்லாம் வேற லெவல். வீட்டிலிருந்து கொண்டு வந்த தின்பண்டங்கள் போதாதென்று டெண்ட் கொட்டாய் இண்டர்வெல் முறுக்குகளையும் சுண்டல்களையும் வாங்கி சுவைக்க தோணும். 

படம் முடிந்து விட்டால் சைக்கிள், கூண்டு வண்டி, ரயில் என அவரவர் வசதிகேற்ப டூரிங் டாக்கிசிலிருந்து விடைபெற்று விடுவார்கள்.  வீடு வருகின்ற வரையில் படத்தின் விமர்சனம்தான் ஓடும். அதிலும் படத்தில் வந்த கதாநாயகியின் புடவை முதல் அவர் வைத்துள்ள பொட்டு வரையில் அத்தனையும் விமர்சனம் செய்து விடுவார்கள் பெண்கள். இப்படி பேசியே அவர்களுக்கு அடுத்த நாள் பொழுதும் ஓடிவிடும். 

இந்தப் பொழுதுகள் எல்லாம் மீண்டு(ம்) வராத என்று ஏங்குபவர்கள் ஏராளம். அவர்களுக்காகவே இந்தப் பதிவு! 

(ஞாபகம் வருதே தொடரும்)   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com